Wednesday, September 23, 2015

வாராய் நீ வாராய், கிருஷ்ணா!



இன்றைய பாடலை இயற்றியது ஸ்ரீவாதிராஜர். மிகவும் எளிமையான பாடல். அஷ்டோத்திரத்தை அப்படியே பக்கத்து பக்கத்தில் போட்டு பாட்டு வரிகளில் எழுதியதைப் போல் உள்ளது. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைக் கொடுத்து விட்டால், பாட்டு எளிதாகப் புரிந்துவிடுகிறது.



ராமனை, கிருஷ்ணனை வரவேற்கும் இந்தப் பாடல் இதோ.

பாரோ பேக பாரோ நீல மேக வர்ணா
பாரோ பேக பாரோ பேலபுரத சென்னா (பாரோ)

வாராய் வேகமாய் வாராய், கருமை நிறத்தவனே
வாராய் வேகமாய் வாராய், பேலூரின் சென்ன கேசவனே (பாரோ)

இந்திரெ ரமண கோவிந்தா பேக பாரோ
நந்தன கந்த முகுந்தா பேக பாரோ (பாரோ)

இலக்குமியின் கணவனே கோவிந்தனே வேகமாய் வாராய்
நந்தகோபனின் மகனே முகுந்தனே வேகமாய் வாராய் (பாரோ)

தீர உதார கம்பீர பேக பாரோ
ஹார அலங்கார ரகுவீர பேக பாரோ
ருத்தா அனிருத்தா நிரவத்யா பேக பாரோ
ஹத்தா நேரித்தா சுப்ரசித்தா பேக பாரோ (பாரோ)

வீரனே தயாளனே கம்பீரமான தோற்றம் உடையவனே
மாலை அலங்காரத்துடன் காணப்படும் ராமனே
எங்கும் வியாபித்திருப்பவனே, அனிருந்த்தனே, எவ்வித களங்கமும் இல்லாதவனே
யானையின் மேலேறி வரும், மிகவும் பிரபலமானவனே (பாரோ)

ரங்கா உத்துங்கா நரசிங்கா பேக பாரோ
மங்கள மஹிம சுபாங்கா பேக பாரோ
ஐயா விஜய சஹாயா பேக பாரோ
அஹ்யத்ரி வாசா ஹயவதனா பேக பாரோ (பாரோ)

ரங்கனே அழகிய சிங்கனே
மங்களகரமான மகிமை பொருந்தியவனே, அழகிய அங்கங்களைக் கொண்டவனே
தலைவனே, (பக்தர்களைக்) காத்திட வேகமாய் வருபவனே
பாம்பின் மேல் படுத்திருப்பவனே, ஹயவதனனே, வேகமாய் வாராய் (பாரோ)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடல்:

***










Tuesday, September 22, 2015

ஆரத்தி’யின் விளக்கொளியில் இறைவனைப் பாருங்கள்.

ஆரத்தி’யின் விளக்கொளியில் இறைவனைப் பாருங்கள்.

இறைவனின் பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் மொத்தம் 16 என்பர். (அதற்கு மேலும் சிலவற்றை சேர்ப்போரும் உண்டு). இறைவனை வரவேற்று, உட்கார ஆசனம் கொடுத்து, என்றவாறு போகும் அந்த 16 உபசாரங்கள் இங்கே விரிவாக உள்ளது. http://www.salagram.net/upacharas.html

இதில் தூபாரத்தி என்று ஒரு உபசாரம் சொல்லப்பட்டுள்ளது. தூபாரத்தி = நெய்யில் முக்கி எடுக்கப்பட்ட திரியில் விளக்கேற்றி இறைவனுக்கு காட்டப்படும் ஆரத்தி. அப்படிப்பட்ட ஆரத்தி பற்றி மட்டுமே ஒரு முழுமையான பாடலை இயற்றியுள்ளார் புரந்தரதாசர்.



ஆரத்தி காட்டும்போது மணி அடிப்பது வழக்கம். வீட்டில் மணியுடன், ஜாங்கடே என்றழைக்கப்படும் கருவியையும் சிலர் அடிப்பர். கோயில்களில் கூடுதலாக மத்தளம், முரசு ஆகிய வாத்தியங்களும் வாசிப்பதுண்டு. தற்போது இவை அனைத்தும் தானியங்கிகள் ஆகிவிட்டன.



இத்தகைய கருவிகளின் இனிமையான சத்தத்தின் நடுவே, சாம்பிராணி மற்றும் இன்னபிற நறுமண பொருட்களின் வாசத்துடன் நடந்து கொண்டிருக்கும் இறைவனின் பூஜையில், தற்போது காட்டப்படும் ஆரத்தியை பார்க்க வாருங்கள் என்று அழைக்கிறார் தாசர்.

வாருங்கள், நாமும் அவருடன் சேர்ந்து பூஜையை கவனிப்போம்.

***

தூபாரத்தியா நோடுவ பன்னி - நம்ம
கோபாலகிருஷ்ண தேவர பூஜைய (தூபாரத்தியா)

தூபாரத்தியை பார்க்கலாம் வாங்க - நம்
கோபாலகிருஷ்ணனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

மத்தளே ஜாகடே தாள தண்டிகே பேரி
தத்திமி திமிகெந்து ரவசகளு
அத்புத சங்க நாதகளிந்ததி நம்ம
பத்பனாப தேவர திவ்ய பூஜைய.. (தூபாரத்தியா)

மத்தளம், ஜாங்கடே, தாளத்துடன் கூடிய முரசு
தத்திமி திமி என்ற லயத்துடன்
அற்புதமான சங்க நாதத்துடன், நம்
பத்பனாபனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

அகரு சந்தன தூப குக்குள சாம்ப்ராணி 
மகமதிசுவ தாரதியு
விவிதாத ஏகாரதி பத்தி நம்ம
ஜகன்னாத விட்டல தேவர பூஜைய (தூபாரத்தியா)

அகர், சந்தனம், தூபம், குங்கிலியம், சாம்பிராணி
ஆகியவற்றின் நறுமணத்தினால் ஆன ஆரத்தி;
விதவிதமான ஏகாரத்தி (ஒற்றைத்திரி) ஏற்றி நம்
ஜகன்னாத விட்டலனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

ஹரி சர்வோத்தமன பக்தராதனா
பரம மங்கள மூர்த்தி பாவனனா
பர தெய்வவாதந்த ஸ்ரீ ரங்க நாதன
புரந்தர விட்டலன தேவர பூஜைய (தூபாரத்தியா)

அனைவரிலும் உத்தமனான, பக்தர்களின் பாதுகாவலனான
அழகிய வடிவம் கொண்டவனான
ஸ்ரீ ரங்கனாதனின், புரந்தர விட்டலனின் பூஜையில்.. (தூபாரத்தியா)

***




Monday, September 21, 2015

ரங்கன் எங்கு இருக்கிறான்?



இறைவன் எங்கே இருக்கிறான்? நாம் கூப்பிட்ட நேரத்தில், சற்றும் தாமதிக்காமல், எப்படி நம்மை வந்தடைந்து, நம்மை துன்பத்திலிருந்து காப்பாற்றுவான் என்கிற கேள்விகளுக்கு பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறார் தாசர்.

பிரகலாதன் கூப்பிட்டவுடன் ஸ்ரீஹரி வந்தானே?
அஜாமிளன் தன் இறுதிகாலத்தில் நாராயணா என்றவுடன் ஓடோடி வந்தானே?
கஜேந்திரன் என்கிற யானையை எப்படி விரைந்து வந்து காப்பாற்றினான்?
திரௌபதிக்கு உதவியனும் அவன்தானே?

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, முத்தாய்ப்பாக, இறைவன் எங்கும் இருப்பவன், அவனை எப்பொழுதும் நினைத்து, பாடி, தொழுது வருபவர்கள் மனதிலேயே இருந்து காப்பவன் என்று அருமையாக முடிக்கிறார்.




***

எல்லிருவனோ ரங்க எம்ப சம்சய பேடா
எல்லி பக்தரு கரெதரல்லே ஒதகுவன்னு (எல்லி)

எங்கே இருப்பானோ ரங்கன், என்கிற சந்தேகமே வேண்டாம்
எங்கே பக்தர் கூப்பிடுகிறாரோ, அங்கே உடனடியாக வந்து சேருவான் (எல்லி)

தரள பிரஹ்லாத ஸ்ரீ ஹரி விஸ்வமயனெந்து
பரெதோதலெ அவன பிதா கோபதிந்தா
ஸ்திரவாதடீ கம்பதொளு தோர எனலு
பரதிபரலு அதக்கே வைகுண்ட நெரமனயே (எல்லி)

சிறுவன் பிரகலாதன், ஸ்ரீ ஹரி உலகத்தில் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று சொல்ல,
அவன் தந்தை கோபத்துடன்,
இந்த கம்பத்தில் ஹரி இருக்கிறாரா, காட்டு என்று சொல்ல
உடனடியாக அங்கே தோன்றினார் ஹரி. வைகுண்டம் என்பது அருகிலேயேவா இருந்தது? (எல்லி)

பாபகர்மவ மாடித அஜாமிளன எமபடரு
கோபதிந்த எளயுதிரே பீதியிந்த
காபுத்ரனனு கரெயே கேளி ரக்‌ஷிஸே
ஸ்வேத த்வீபவீதரகே அதி சமீப தல்லிஹுதே (எல்லி)

வாழ்க்கை முழுவதும் பாவங்களைச் செய்த அஜாமிளனைக் கூப்பிட்டுச் செல்ல வந்த எமதூதர்கள்
கோவத்துடன் அவனை இழுத்தனர்; அப்போது பயத்துடன்
நாராயணனை (அஜாமிளன்) கூப்பிட்டதும், வந்தானே,
ஸ்வேதத்வீபம் என்னும் இடம் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறதா என்ன? (எல்லி)

கரிராஜனனு நெகளு நுங்குதிரே பயதிந்தா
மொரெயிடலு கேளி அதி த்வரதிதிந்தா
கருணதலி பந்தனவ பிடிசலா கஜராஜ
இருவ சரசிகே அனந்தசானவு மும்மனெயே (எல்லி)

கஜேந்திரன் என்னும் யானை (தன் காலை முதலை பிடித்ததும்) பயத்துடன்
இறைவனிடம் முறையிட்டதும், அதிவேகமாக
கருணையுடன் சென்று முதலையிடமிருந்து அந்த யானையை மீட்டினான்; அந்த யானை
இருந்த குளம், அனந்தனின் வீட்டின் ஒரு பகுதியா என்ன? (எல்லி)

குருபதியு த்ரௌபதிய சீரெயனு செளெயதிரே
தருணி ஹா கிருஷ்ணா எந்தொதரே கேளி
பரதிந்தா அக்‌ஷயாம் பரவித்தா
ஹஸ்தினாபுரிகு த்வாராவதிகு கூகளதெய (எல்லி)

குரு வம்சத்தின் அரசன், திரௌபதியின் சேலையை இழுக்கும்போது
அந்தப் பெண், கிருஷ்ணா என்று கூப்பிட்டத்தைக் கேட்டு
வந்து முடிவில்லாத ஆடையை அளித்த (அந்த கிருஷ்ணனின் இடமான)
துவாரகை, ஹஸ்தினாபுரத்திற்கு கூப்பிடு தூரத்திலா இருந்தது? (எல்லி)

ஹணுமஹத்துகளல்லி பரிபூர்ண நெந்தெனசி
கணனெயில்லதா மஹா மஹிம நெனிபா
கனக்ருபா நிதி நம்ம புரந்தரவிட்டலன
நெனெதவர மனதல்லி இஹனெம்ப பிருதிரலு (எல்லி)

எங்கும் வியாபித்திருக்கும், சர்வ வல்லமை படைத்த, பரிபூர்ணனான
எண்ணில் அடங்காத மகிமைகளைக் கொண்ட,
கருணைக்கடலான நம் புரந்தரவிட்டலனானவன்,
(அவனை) நினைத்தவரின் மனதில் கண்டிப்பாக இருப்பான் (இது நிரூபிக்கப்பட்ட உண்மை) (எல்லி)

***


இந்தப் பாடலின் ஒலிவடிவம் இங்கே:



***










Friday, September 18, 2015

அனும, பீம, மத்வர்.



த்வைத சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீமத்வர், முந்தைய பிறப்புகளில் அனும மற்றும் பீமன் அவதாரங்களைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புரந்தரதாசர் தன் பல பாடல்களில் இந்த மூன்று அவதாரங்களைப் பற்றியும் (ஒரே பாடலில் வருமாறு) பாடியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்தப் பாடல். அனுமன், பீமன் மற்றும் மத்வருக்கு ஒவ்வொரு பத்தி, அவர்களில் சிறப்புகளைப் பற்றி சொல்லி, புரந்தரவிட்டலனின் பெயரோடு பாடலை முடிக்கிறார்.



வீர ஹனும பஹு பராக்ரமா
சுஞானவித்து பாலிசென்ன ஜீவரோத்தமா (வீர)

வீரனான ஹனுமனே, வீரனே
நல்ல ஞானத்தைக் கொடுத்து என்னைக் காப்பாற்று ஜீவர்களில் உத்தமனே (வீர)

ராம தூத நெனெசி கொண்ட நீ
ராக்‌ஷசர வனவரெல்ல கித்து பந்தே நீ
ஜானகிகே முத்ரே இத்து ஜகத்திகெல்ல ஹருஷவித்து
சூடாமணிய ராமகித்து, லோகக்கே முட்டெனிசி மரெவ (வீர)

ராமனின் தூதனாக அறியப் படுபவன் நீ
அரக்கர்களின் வனங்களைக் கொன்றுவிட்டு வந்தவன்
(ராமனிடமிருந்து கொண்டு வந்த) மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, முழு உலகத்திற்கும் ஆனந்தமளித்தவன்
(பின்னர் சீதையிடமிருந்து) சூடாமணியை ராமனிடம் கொடுத்து, உலக மக்களின் பிரியத்திற்கு பாத்திரமானவன் (வீர)

கோபி சுதன பாத பூஜிஸி
கதெய தரிசி பகாசுரன சம்ஹரிசிதே
த்ரௌபதிய மொரெய கேளி மத்தே கீசகன கொந்து
பீம நெம்ப நாம தரிசி சங்க்ராம தீரனாகி ஜகதி (வீர)

கோபிகையின் மகனான கிருஷ்ணனின் பாதங்களை பூஜித்தவன்
கதையைக் கொண்டு பகாசுரனைக் கொன்றவன்
திரௌபதியின் கோரிக்கையை ஏற்று, கீசகனைக் கொன்று
பீமன் என்ற பெயரைக் கொண்டு, போர்களை வென்றவன் (வீர)

மத்ய கேஹனல்லி ஜனிஸி நீ
பால்யதல்லி மஸ்கரீய ரூப கொண்டே
சத்யவதிய சுதன பஜிஸி சன்முகதி பாஷ்ய மாடி
சஜ்ஜனர பொரெவ முத்து புரந்தர விட்டலன தாச (வீர)

மத்யகேஹ பட்டர் என்பவர் வீட்டில் பிறந்தவன்
சிறிய வயதில் துறவி ஆனவன்
சத்யவதியின் மகனான வியாஸரை வணங்கி, பல பாஷ்யங்களை (நூல்களுக்கான விளக்கங்களை) எழுதியவன்
நல்லவர்களைக் காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனின் தாசன் (வீர)

***


இந்தப் பாடலை பாடி, வரிகளுக்குத் தகுந்தாற்போல் படங்களைக் காட்டும், மைசூர் ராமசந்திராச்சார் அவர்கள்.



Thursday, September 17, 2015

பிள்ளையாரப்பா!


நம்மம்ம சாரதே!

மிகவும் பிரபலமான இந்தப் பாடலை இயற்றியவர் கனகதாசர். இன்றைய நாயகனான விநாயகரைக் குறித்து பாடியதாகும். அவரின் தாயான பார்வதியிடம், விநாயகரின் பெருமைகளைக் கூறி, இப்படிப்பட்டவர் யார் - அது நம் கணபதிதானே என்று பதில் கூறுவதைப் போல் அமைந்துள்ளது இப்பாடல்.


நம்மம்ம சாரதே உமா மகேஸ்வரி
நிம்மொளகிவன் யாரம்மா (நம்மம்ம)

எங்கள் தாயே சாரதே, உமா மகேஸ்வரி,
உன் உள் உறைபவன் யாரம்மா (நம்மம்ம)

கொம்மகொளன வைரி சுதனாத சொண்டில
ஹெம்மெய கணநாதனே கணம்மா (நம்மம்ம)

பூக்களால் ஆன வில் ஏந்திய மன்மதனின் எதிரியான சிவனின் மகன்,
நம் பெருமைமிகு கணபதிதான் அவன் (நம்மம்ம)

மோரெ கப்பின பாவ மொரத கலத கிவி
கோரெ தாடெயன் யாரம்மா
மூரு கண்ணன சுத முரிதிட்ட சந்திரன
தீரத கணநாதனே அம்மய்யா ( நம்மம்ம)

கருப்பு நிற (யானை போன்ற) முகம், முறத்தைப் போன்ற காதுகள்,
தந்தங்களை உடையவன் யாரம்மா?
மூன்று கண்களை உடையவனின் மகன், சந்திரனை முறித்தவன்,
வீரமான கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

உட்டதட்டியு பிகிதுட்ட சல்லனதா திட்டதான் இவன் யாரம்மா
பட்டதா ராணி பார்வதியா குமாரனு
ஹொட்டேயா கண நாதனே கணம்மா (நம்மம்மா)

இடுப்பில் வேட்டியை இறுக்கி கட்டியவன், (அவனை வணங்குபவர்களின்)
எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் அகற்றுபவன்,
சிவனின் ராணி பார்வதியின் குமாரன் தொந்தியை உடைய கணபதியே, நம் கணபதியே ( நம்மம்மா)

ராசி வித்யேய பல்ல ரமணி கொம்பலனொல்ல பாஷிக இவன்யாரம்மா
லேசாகி ஜனர சலகுவ காகி நெலெயாதி கேசவ தாச காணே (நம்மம்மா)

அளவில்லா ஞானத்தை உடையவன்
பெண்களின் மேல் மோகம் கொள்ளாதவன்
மக்களின் துன்பங்களைப் போக்கும் காகிநெலெ
ஆதிகேசவனின் தாசன், இந்த கணபதி.. (நம்மம்மா)

***

வித்யாபூஷணரின் குரலில் இந்த அருமையான பாடலைக் கேளுங்கள்.



Friday, June 5, 2015

போகாதே ரங்கா போகாதே!

கிருஷ்ணா நீ பேகனே பாரோன்னு கிருஷ்ணனைக் கூப்பிட்டு வீட்டில் இருக்கச் சொன்ன தாசர்கள், அந்தக் கிருஷ்ணனை வெளியில் போகவேண்டாமென்றும் பாடியுள்ளனர். வெளியில் போனால் என்னென்ன பிரச்னைகள் வரும், யாரெல்லாம் அவனைக் கூப்பிட்டுக் கொண்டுபோக காத்திருக்கின்றனர் என்றெல்லாம் இந்த அருமையான பாட்டில் பாடியுள்ளார் புரந்தரதாசர்.

***




போகாதிரேலோ ரங்கா பாகிலிந்தாச்சே
பாகவதரு கண்டு எத்தி கொண்டைவரு (போகாதிரேலோ)

கதவுக்கு அந்தப்பக்கம் (வெளியே) போகாதே, ரங்கா
(எப்போதும் உன்னை நினைத்து, தேடிக் கொண்டிருக்கும்) பாகவதர்கள், உன்னைக் கண்டு தூக்கிப் போய்விடுவார்கள் (போகாதிரேலோ)

சுரமுனிகளு தம்ம ஹ்ருதய கமலதல்லி
பரமாத்மன காணதே அரசுவரு
தொரகத வஸ்துவு தொரகிது தமகெந்து
ஹருஷதிந்தலி நின்ன கரெதெத்தி கொம்புவரு (போகாதிரேலோ)

முனிவர்கள் தங்கள் இதயத்தில்
இறைவனைக் காணாமல் வருந்தும் நேரத்தில்
கிடைக்காத பொக்கிஷம் நமக்குக் கிடைத்தது என்று
ஆனந்தத்துடன் உன்னை கையில் தூக்கிக் கொண்டுவிடுவார்கள் (போகாதிரேலோ)

அகணீத குண நின்ன ஜகத நாரியரெல்ல
ஹகெயாகி நுடிவரோ கோபாலனே
மகுகள மாணிக்யன தகலித்து கரகெந்து
வேகதிந்தலி பந்து பிகிதப்பி கொம்புவரு (போகாதிரேலோ)

எண்ணற்ற நற்குணங்களையுடைய உன்னை, ஊரிலுள்ள பெண்கள் அனைவரும்
(உன் குறும்புகளை) மறந்து, உன்னைக் கூப்பிடுவார்கள், கோபாலனே
குழந்தைகளில் முதல்வனே, உன்னுடன் இருக்க வேண்டுமென்று
வேகமாக வந்து, வாரி அணைத்துக் கொள்வார்கள் (போகாதிரேலோ)

திட்ட நாரியரெல்ல இஷ்டவ சலிசெந்து
அட்டட்டி பென்னட்டி திருகுவரோ
ஸ்ருஷ்டீச புரந்தர விட்டல ராயனே
இஷ்டிஷ்டு பெண்ணெய கொட்டேனோ ரங்கய்யா (போகாதிரேலோ)

விரதங்களை செய்யும் பெண்மணிகள், தங்கள் விரும்பியதை அடைய
(உன்னை) பின்தொடர்ந்து எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பர்
உலகத்தைப் படைத்த புரந்தர விட்டலனே
உனக்கு கொஞ்சமே கொஞ்சம் வெண்ணையைக் கொடுக்கிறேன் ரங்கய்யா (போகாதிரேலோ)



 ***
இதே பாடலை அருமையாகப் பாடியுள்ள Dr.ராஜ்குமார்:

 

 ***

Pogadirelo Ranga Lyrics and Meaning in Tamil.

Wednesday, June 3, 2015

உலகம் மாயை - தற்காலிகமானது



பூஜை புனஸ்காரங்கள், கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் வணிகத்தில் ஈடுபட்டு கருமியாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த புரந்தர தாசர், அனைத்து செல்வங்களையும் தானம் செய்துவிட்டு, தினப்படி பிக்‌ஷை பெற்று வாழலானார் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்டவர், அதைப் பற்றி பல பாடல்களாகவும் எழுதியுள்ளார்.



முதலில் இந்தப் பாடலைப் பார்த்துவிடுவோம். சிறு விளக்கம் பின்னர்.

அல்லிதே நம்மனே
இல்லி பந்தே சும்மனே (அல்லிதே)

நம்ம வீடு அங்கே இருக்கிறது;
நான் இங்கே வந்தது தற்காலிகமாகத்தான் (அல்லிதே)

கட பாகிலிரிசிதா கள்ள மனே இது
முததிந்த லோலாடோ சுள்ளு மனே
இடிராகி வைகுண்ட வாச மாடுவந்தா
பதுமனாபன திவ்ய பதுகு மனே (அல்லிதே)

வாசல், கதவுகளுடன் கூடிய பொய்யான வீடு இது
மிகவும் பிரியத்துடன் கட்டிக் காக்கப்படும் பொய்யான வீடு இது
வைகுண்டத்தில் வாசம் செய்யும்
பத்பனாபன் வந்து தங்கி இதை தன் வீடாகிக் கொண்டான் (அல்லிதே)

மாளிகேமனேயெந்து நெச்சி கெடலி பேடா
கேளய்யா ஹரிகதே ஸ்ரவணங்களா
நாளே யமதூதரு பந்தெளெதொவ்யாக
மாளிகே மனெயு சங்கத பாரதய்யா (அல்லிதே)

மாட மாளிகை என்று நினைத்து ஏமாற வேண்டாம்
இறைவனின் கதைகளை, சொற்பொழிவுகளைக் கேட்கவும்
நாளையெ எமதர்மனின் தூதர்கள் வந்து உன்னை கூப்பிடும்போது
இந்த மாட மாளிகைகள் உன் கூட வராது (என்று தெரிந்துகொள்) (அல்லிதே)

மடதி மக்களெம்ப ஹம்பல நினகேகோ
கடுகொப்புதனதல்லி மெரெயதிரோ
ஒடெய ஸ்ரீ புரந்தரவிட்டல ராயன
த்ருட பக்தியல்லி நீ பஜிசெலோ மனுஜா (அல்லிதே)

மனைவி மக்கள் என்று (எப்போதும்) அவர்களையே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்காதே
எப்போதும் ஆணவத்துடன் சுற்றிக் கொண்டிருக்காதே
நம் முதல்வன் ஸ்ரீ புரந்தரவிட்டலன் மேல்
பக்தி கொண்டு, அவரைப் பற்றி எப்போதும் பஜித்துக் கொண்டிருப்பாய் நீ (அல்லிதே)

***

இந்தப் பாடலை இரு விதமாகப் புரிந்து கொள்ளலாம். வீடு என்பதை இந்த உலகம் அல்லது இந்த உடல் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த உலகம் தற்காலிகமானது, நாம் இங்கு வந்தது நிரந்தரமானதல்ல என்று கூறுவது போலவும், ஆத்மா இந்த உடலுக்கு வந்து சேர்ந்தது தற்காலிகமானதுதான் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாட மாளிகைகள், உறவுகள் எவையும் இறுதியில் எமதூதர்கள் வந்து கூப்பிடும்போது நம்முடன் வராது. அதனால் ஆணவத்துடன் சுற்றித் திரியாமல், அந்த புரந்தர விட்டலனை நினைத்துக் கொண்டிருப்பாயாக என்று கூறுகிறார் தாசர்.

Allidhe Namma Mane - Purandharadasar
***