Saturday, May 28, 2011

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி!

பகவான் கண்ணனுக்கு சுப்ரபாதம், அவன் குறும்புகள், விளையாட்டுகள், ஆகிய எல்லாவற்றிற்கும் பாடிய ஹரிதாஸர்கள், அந்த கண்ணன் தூங்குவதற்கும் நிறைய லாலி பாடல்கள் பாடியிருக்கின்றனர். 20-25 பத்திகள் கொண்ட லாலி பாட்டுகளும் உண்டு. அவைகளில் மிகவும் புகழ்பெற்றது இந்த ‘தூகிரே ரங்கன’ பாடலாகும்.

ராகவேந்திரர் மடங்களில் மாலை நேர பூஜையில், வேத பாராயணங்கள், ஸ்தோத்திரம், பாட்டு, நைவேத்தியம் எல்லாம் ஆனபிறகு, பகவானை தூங்கச் செய்கிற வேளையும் வரும். ‘லாலி ப்ரியா லாலி சேவா மமதாரயா’ என்று சொன்னவுடன், யாராவது லாலி பாட ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் அனைவரும் பாடும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.


***

தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன
தூகிரே அச்சுதானந்தன (தூகிரே)


ரங்கனை, கிருஷ்ணனை, அச்சுதனை, அனந்தனை
தாலாட்டுங்கள் (தூகிரே)

தூகிரே வரகிரியப்பா திம்மப்பன
தூகிரே காவேரி ரங்கய்யன (தூகிரே)

திருப்பதியில் இருக்கும் பாலாஜியை,
காவேரிக்கரையில் இருக்கும் ரங்கனை
தாலாட்டுங்கள் (தூகிரே)

நாகலோகதல்லி நாராயண மலக்யானே
நாககன்னிகெயரு தூகிரே
நாகவேணியரு நேண பிடிதுகொண்டு
பேகனே தொட்டில தூகிரே (தூகிரே)


நாகலோகத்தில் நாராயணன் படுத்திருக்கிறான்
நாககன்னிகைகள் தூங்கச் செய்யுங்கள்
நீளமான கூந்தலையுடைய பெண்கள் தொட்டில்கயிறை பிடித்துக்கொண்டு
வேகமான தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)

இந்திரலோகதல்லி உபேந்திர மலக்யானே
இந்துமுகியரல்ல தூகிரே
இந்திரகன்னிகேயரு சந்ததி பந்து
முகுந்தன தொட்டில தூகிரே (தூகிரே)

இந்திரலோகத்தில் உபேந்திரன் படுத்திருக்கிறான்
சந்திரனைப் போல் முகத்தையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்
இந்திரலோகத்திலுள்ள பெண்கள் உடனே வந்து
முகுந்தனின் தொட்டிலை தாலாட்டுங்கள் (தூகிரே)

ஆலத எலய மேலே ஸ்ரீலோல மலக்யானே
நீலகுந்தலேயரு தூகிரே
வ்யாலஷயன ஹரி மலகு மலகெந்து
பாலகிருஷ்ணய்யன தூகிரே (தூகிரே)

ஆலமர இலையில் லக்‌ஷ்மியின் கணவன் நாராயணன் படுத்திருக்கிறான்
நீளமான கூந்தலையுடைய பெண்கள் தாலாட்டுங்கள்
ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் ஹரியை
தூங்கு தூங்கு என்று தாலாட்டுங்கள் (தூகிரே)

சாசிர நாமனே சர்வோத்தமனெந்து
சூசுத்தா தொட்டில தூகிரே
லேசாகி மடுவினோளு சேஷன துளுதிட்ட
தோஷ விதூரன தூகிரே (தூகிரே)

ஆயிரம் நாமங்கள் கொண்டவனே, நீயே அனைவரிலும் உத்தமமானவன் என்றவாறு
ஜபித்துக் கொண்டே தாலாட்டுங்கள்
விஷசர்ப்ப குளத்தில் (காளிந்தி) சர்ப்பத்தின் மேல் குதித்தாடிய
களங்கமில்லாதவனை தாலாட்டுங்கள் (தூகிரே)

அரளேலே மாகாயி கொரள முத்தினஹார
தரளன தொட்டில தூகிரே
ஸ்ரீதேவி ரமணன புரந்தரவிட்டலன
கருணதி மலகெந்து தூகிரே (தூகிரே)

நெற்றியில் ஆபரணமும்; கழுத்தில் முத்து மாலையும் அணிந்துள்ள
குழந்தையின் தொட்டிலை தாலாட்டுங்கள்
ஸ்ரீதேவி ரமணனை புரந்தரவிட்டலனை
தூங்கு என்று வேண்டிக் கொண்டு தாலாட்டுங்கள் (தூகிரே)

***

P.சுசீலாம்மா அருமையாய் பாடியுள்ள இந்த பாடல்:
http://www.raaga.com/player4/?id=171796&mode=100&rand=0.7889869361830932

***

யூட்யூபில் கிடைத்த இன்னொரு காணொளி:



***

Tuesday, May 24, 2011

வைகுண்டம் எப்படி இருக்கும்?

புரந்தரதாசர் சமஸ்கிருதத்தில் பாடியுள்ள பாடல்.
மிகச் சிறிய பாடல்
மிகவும் புகழ் பெற்ற பாடல்.
முதல் வரியைக் கேட்டவுடன், MLV அம்மாவின் குரல் டக்கென்று காதில் கேட்கும் பாடல்.

அது என்ன?

வைகுண்டம் எப்படி இருக்கும்?

வைகுண்டத்தைப் பற்றி புரந்தரதாசர், கனகதாசர் ஆகியோர் பல பாடல்கள் பாடியிருக்கின்றனர். கருணையே உருவான ஸ்ரீமன் நாராயணன் - எவ்வித
களங்கமும் இல்லாத சுந்தர வடிவானவன் - காதில் குண்டலங்கள்; கழுத்தில் ஆபரணங்கள்; முகத்தில் புன்னகை - லக்ஷ்மி தேவியுடன் ஆதிசேஷன் மேல்
வீற்றிருப்பான். பிரம்ம, ருத்ராதிகள் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்க, வேத கோஷங்கள் முழங்கிக் கொண்டிருக்கும். நாரதர் முதலானோர் இறைவனைக்
குறித்து பஜித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படியான வைகுண்டக் காட்சியை பின்வரும் பாடலில் தாசர் விவரிக்கிறார்.




வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம் (வேங்கடாசல)


வேங்கடாசலத்தில் (திருப்பதியில்) வீற்றிருப்பவன் வைகுண்டத்தில் வசிக்கிறான்
தாமரை மலர் போன்ற அழகான கண்கள்; எவ்வித களங்கமுமில்லாத தூய்மையானவன்
இரு கைகளிலும் சங்கு, சக்கரம் தரித்த அழகே வடிவானவன் (வேங்கடாசல)

அம்புஜோத்பவ வினுதம் அகணித குண நாமம்
தும்புரு நாரத கான வினோலம் (வேங்கடாசல)

எப்பொழுதும் அவன் பேரை ஜபித்துக் கொண்டே இருக்கும் பிரம்மன்;
கூடவே தம்புரா வைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருக்கும் நாரதர் (வேங்கடாசல)

மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஸ்ரீ புரந்தரவிட்டலம் (வேங்கடாசல)


பளபளக்கும் குண்டலங்களை அணிந்திருக்கும் மதனகோபாலன்
பக்தர்களை காக்கும் ஸ்ரீ புரந்தர விட்டலனே (வேங்கடாசல)
***

MLV அம்மா மிகவும் பக்திபூர்வமாக பாடியது:



***
விசாகா ஹரி மிகவும் விஸ்தாரமாக பாடியது:



***


Friday, May 20, 2011

ஏன் எப்பவும் கடவுளை நினைக்கணும்?


தம்பி, கோயிலுக்கு போ. கடவுளை நினை. மனசுக்கு அமைதி கிட்டும்.

போங்கண்ணா. எனக்கு தியானம் எப்படி பண்ணனும்னு தெரியாது. கடவுள் ஸ்லோகம் / பாட்டு எதுவுமே தெரியாது. கோயில் எதுவுமே பக்கத்துலே இல்லே. ரொம்ப தூரம் போய்வர நேரம் இல்லே. உங்களுக்கு வேறே வேலையே இல்லே!!

கடவுளை நினையாதிருப்பதற்கு எவ்வளவு வேணா சாக்கு சொல்லலாம். ஆனா, அப்படி சொல்லக்கூடாதுன்னு - நான் சொல்லலே - புரந்தரதாசர் சொல்றாரு.

ஆமா. கடவுளை எந்நேரமும் நினைச்சிக்கிட்டிருந்தா என்ன நடக்கும்?

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இதுவும் நான் சொன்னதில்லை. அட, புரந்தரதாசரும் சொல்லவில்லை. சொன்னது நம்ம அய்யன்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


சரியா.

அதனால், இனிமே நோ சாக்கு. ஒன்லி ராம ராம.

இதே கருத்துகளை புரந்தரதாசர் எப்படி எல்லாருக்கும் புரியும்படி கன்னடத்தில் பாடியிருக்கிறார் பாருங்க. பிறகு கேளுங்க.


***

கலியுகதொளு ஹரி நாமவ நெனேதரே
குலகோடிகளு உத்தரிசுவவோ ரங்கா (கலியுக)


இந்த கலியுகத்தில், ஹரியின் பெயரை நினைத்தால்
உன் குலம் முழுவதற்கும் புண்ணியம் கிட்டும் (கலியுக)

சுலபத முக்திகே சுலபவெந்தேணிசுவ
ஜலருஹநாபன நெனே மனவே (கலியுக)


சுலபமாய் முக்தி பெற, சுலபமாய் நினைவில் வைக்கும்படியான
ஸ்ரீ கமலாநாபனின் (பத்மநாபனின்) பெயரை நினைத்திரு மனமே (கலியுக)

ஸ்னானவனறியேனு மௌனவனறியேனு
த்யானவனறியேன் எந்தெணபேடா
ஜானகிவல்லப தசரத நந்தன
கானவினோதன நெனெ மனவே (கலியுக)


ஸ்னானம் எப்படி செய்யணும்னு தெரியாது; மௌனமாய் இருக்கத் தெரியாது
தியானம் செய்யத் தெரியாது என்று சொல்ல வேண்டாம்
ஜானகியின் கணவனை, தசரதனின் மைந்தனை
பாடலை விரும்பிக் கேட்கும் ஸ்ரீ ராமனை நினைத்திரு மனமே (கலியுக)

அர்ச்சிஸலறியேனு மெச்சிசலறியெனு
துச்சனு தானெந்தெணபேடா
அச்சுதானந்த கோவிந்த முகுந்தன
இச்சேயிந்தலி நெனெமனவே (கலியுக)


அர்ச்சனை / பூஜை செய்யத் தெரியாது; கடவுளை மெச்சவும் (புகழ் பாடவும்) தெரியாது
(அதனால்) நான் ரொம்ப கெட்டவன் என்று நினைக்க வேண்டாம்
அச்சுதன், ஆனந்தன், கோவிந்தன், முகுந்தன், (ஆகிய ஹரியை)
பாசத்துடன் நினைத்திரு மனமே (கலியுக)

ஜபவொந்தறியேனு தபவொந்தறியேனு
உபதேச வில்ல எந்தெணபேடா
அபார மஹிமே ஸ்ரீ புரந்தரவிட்டலன
உபாயதிந்தலி நெனெ மனவே (கலியுக)


(மந்திரங்களை) ஜெபிக்கத் தெரியாது; தபஸ் (தியானம்) செய்யத் தெரியாது
(தக்க குருவினிடத்தில்) உபதேசமும் பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டாம்
பெரும் மகிமை வாய்ந்த ஸ்ரீ புரந்தர விட்டலன் பெயரை
உத்தியுடன் (ஆபத்து காலத்தில் துடுப்பு போல்) நினைத்திரு மனமே (கலியுக)

***

திரு.ஸ்ரீராம் கங்காதரன் அருமையா பாடியிருக்காரு.



***

Prof.வெங்கடேஷ் குமார் மிக அற்புதமா பாடிய இந்த பாடல்.



***

Wednesday, May 18, 2011

தாயும் நீயே! தந்தையும் நீயே!

சரணாகதி தத்துவம்.

இப்படி சொன்னதும் நினைவில் வரக்கூடிய ஸ்லோகம் என்ன? பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதுதான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ!
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி மா ஷுசஹா!


அர்ச்சுனா! அனைத்தையும் துறந்து என்னை சரணடை. அனைத்து பாவங்களிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன். கவலைப்படாதே.

அர்ஜுனனைப் போல் நானும் உன்னை சரணடைந்தேன். என் தாய், தந்தை, நண்பர்கள், பொன், பொருள் அனைத்தும் நீயே. நீ இருக்கும்போது எனக்கு எந்த கவலையும் இல்லை என்று ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்தான் - நான் ஏகே படவனு.

***


நான் ஏகே படவனு நான் ஏகே பரதேசி
ஸ்ரீநிதி ஹரி எனகே நீ இருவ தனகா (நான் ஏகே)


நான் ஏழையும் அல்ல, அனாதையும் அல்ல
ஸ்ரீ நிதியான ஹரி நீ இருக்கும்வரை (நான் ஏகே)

புட்டிசித்த தாயி தந்தே இஷ்ட மித்ரனு நீனே
அஷ்ட பந்துவு சர்வ பளக நீனே
பெட்டிகேயோளகின அஷ்டா பரண நீனே
ஸ்ரேஷ்ட மூர்த்தி கிருஷ்ணா நீனிருவ தனகா (நான் ஏகே)


பிறவியைக் கொடுத்த தாய்/தந்தை நீயே; நண்பனும் நீயே
சுற்றம் சூழ இருக்கும் உறவினர்களும் நீயே
பெட்டிக்குள் இருக்கும் என் ஆபரணங்களும் நீயே
அனைவரிலும் உத்தமனான கிருஷ்ணனே, நீ இருக்கும் வரை (நான் ஏகே)

ஒட ஹுட்டிதவா நீனே ஒடலிகக்குவ நீனே
உடலு ஹொ தியலு வஸ்த்ர கொடுவே நீனே
மடதி மக்கள நெல்ல கடே ஹாயிசுவவ நீனே
பிடதி சலஹுவ ஒடேயா நீனிருவ தனகா (நான் ஏகே)


கூடப்பிறந்த சகோதர/சகோதரியும் நீயே; எனக்கு உணவளிப்பவனும் நீயே
இந்த உடலை மறைக்கும் ஆடைகளை கொடுப்பவனும் நீயே
மனைவி / குழந்தைகளுக்கு எல்லா இடத்திலும் அருள்/நன்மை பயப்பவன் நீயே
மறக்காமல் என்னை காப்பாற்றும் தலைவனே, நீ இருக்கும் வரை (நான் ஏகே)

வித்யா ஹேளுவ நீனே புத்திகலிசுவே நீனே
உத்தாரகர்த்த மம ஸ்வாமி நீனே
முத்து ஸ்ரீ புரந்தரவிட்டல நின்னடி மேலே
பித்து கொண்டிருவ எனகேதர பயவு (நான் ஏகே)


கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியனும் நீயே; நல்ல புத்தி கொடுப்பவனும் நீயே
என்னை முன்னேற்றும்படி செய்யும் என் தலைவனும் நீயே
ஸ்ரீ புரந்தரவிட்டலா, உன் பாதங்களைத் தொட்டு
எப்போதும் வணங்கிக் கொண்டிருக்கும் எனக்கு எதற்கு பயம்? (நான் ஏகே)

***

MS அம்மா மனமுருகி பாடும் இந்த பாடல்:



***

ரஞ்சனி & காயத்ரி பாடியது:



***

Monday, May 16, 2011

வெங்கி பாலாஜியின் குலதெய்வம் யாரு?

பல பேருக்கு திருப்பதியில் உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான் இந்த பதிவின் ஹீரோ - ஸ்ரீ நரசிம்மர்.



அட ஆமாங்க.

ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற காலத்தில் ‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார். அன்று தயாரிக்கப்பட்ட விருந்து, ஸ்ரீ நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர். திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்‌ஷ்மி தேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள் ‘வேங்கடேச மஹாத்மியம்’ என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.

***

சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன:
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்.


ஸ்ரீமத் பாகவத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிகமிக முக்கியமான ஸ்லோகம்.

நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று மிக நம்பிக்கையுடன் சொன்ன தன் பக்தனான பிரகலாதனின் வாக்கை காப்பாற்ற வேண்டி, மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் - நரசிம்மனாக - கம்பத்தில் இருந்து தோன்றினான்.

மேற்கண்ட ஸ்லோகத்திற்கு இது ஒரு எளிமையான விளக்கம். ஆனா, இந்த ஒரே ஒரு ஸ்லோகத்தை வைத்தே ஒரு நாள் முழுக்க விளக்கங்களால் பரவசப்படுத்தும் உபன்யாசகர்கள் உண்டு.

***

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி ஹரிதாஸர்கள் பல்வேறு பாடல்களை பாடியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்று ஸ்ரீ புரந்தரதாஸரால் பாடப்பட்ட ‘சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே’. அதை இன்று பார்ப்போம்.

***

சிம்ஹ ரூபனாத ஸ்ரீஹரே
நாமகிரீஷனே


சிம்ம ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியே

ஒம்மனதிந்த நிம்மனு பஜிசலு
சம்மததிந்த காய்வனெந்த ஸ்ரீஹரே


ஒருமனதாக உன்னை வணங்கினால்
கண்டிப்பாக காப்பேன் என்று கூறிய ஸ்ரீஹரியே (சிம்ஹ)

தரளனு கரெயே ஸ்தம்பவ பிரியே
தும்ப உக்ரவ தோரிதனு
கரளனு பகெது கொரளொளகிட்டு
தரளன சலஹித ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)


ஹிரண்யகசிபு கூப்பிட்டவுடன் தூணை உடைத்துக்கொண்டு (வந்த நரசிம்மர்)
மிகவும் உக்கிரத்தை காட்டினார்
அவனைக் கொன்று தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு
அனைவரையும் காத்த ஸ்ரீ நரசிம்ஹனே (சிம்ஹ)

பக்தரெல்ல கூடி பஹுதூர ஓடி
பரம சாந்தவனு பேடிதரு
கரெது தன் சிரியனு தொடெயொளு குளிசித
பரம ஹருஷவனு பொந்தித ஸ்ரீஹரி (சிம்ஹ)


பக்தர்கள் அனைவரும் (நரசிம்மரின் உக்கிரத்தால் பயந்து) வெகுதூரம் ஓடி
கோபத்தை குறைக்குமாறு வேண்டினர்
தன் பக்தனை (பிரகலாதனை) கூப்பிட்டு, தன் மடியில் உட்காரவைத்து
தன் கோபத்தை குறைத்தான் ஸ்ரீஹரி (சிம்ஹ)

ஜயஜயஜயவெந்து ஹுவ்வனு தந்து
ஹரிஹரிஹரியெந்து சுரரெல்ல சுரிசி
பய நிவாரண பாக்ய ஸவரூபனே
பரமபுருஷ் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)


வெற்றி வெற்றி என்று பூக்களை கொண்டுவந்து
ஹரி ஹரி என்று அனைவரும் (நரசிம்மரின் மேல்) அர்ச்சனை செய்ய
பயத்தைப் போக்கும் பாக்கியங்களை கொடுக்கும்
உத்தமமான கடவுள் நம்ம புரந்தரவிட்டலனே (சிம்ஹ)

***

முழுப்பாடலின் ஒலி/ஒளித்துண்டு எங்கேயும் கிடைக்கலை. நானே பாடி போடலாம்னா, இதை படிக்கிற ஒரு நாலைஞ்சு பேரையும் எதுக்கு பயமுறுத்தணும்னு அதையும் செய்யலை. அதனால், கிடைத்தது மட்டும் இங்கே. இந்த பாட்டுக்கு வேறெதாவது சுட்டி இருந்தா சொல்லுங்க.

விசாகா ஹரி:



சேலம் ஸ்ரீராம்:



***

ஸ்ரீநரசிம்ம ஜயந்தியான இந்த நல்ல நாளில் (5/16/2011) அந்த ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

***

Tuesday, May 10, 2011

பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, பூச்சாண்டியை கூப்பிடாதே!



கண்ணனின் விளையாட்டுகள், குறும்புகள் தாங்க முடியலை யசோதாவால். ஒரு நாளைப் போல தினமும் புகார்கள் வந்து குவியுது. வெண்ணையை திருடிட்டான், பாலைக் கொட்டிட்டான் அப்படி இப்படின்னு. குழந்தையை திட்டறா. ”என்ன பண்றேன் பாரு, இப்போ. முடியல என்னாலே”. கயிறால் கட்டி போட முயற்சிக்கறா. ம்ஹூம். அதுவும் முடியல. ”கூப்பிடறேன் பாரு பூச்சாண்டியை. அப்பத்தான் நீ அடங்குவே”.

அனைத்தும் அறிந்திருந்தாலும், இந்த உலகத்தையே காப்பவனானாலும், அந்த சமயத்தில் ஒரு குழந்தைதானே. அந்த தாய்க்கு மகன்தானே - பாலகிருஷ்ணன், அப்படியே பயப்படறா மாதிரி நடிக்கிறானாம். நடுங்கினானாம். ”அம்மா. வேணாம்மா. பூச்சாண்டியை கூப்பிடாதே. பயமாயிருக்கு(!!). நீ சொல்ற மாதிரியெல்லாம் கேக்கறேன். என்னை விட்டுடு. இனிமே நல்ல பிள்ளையா நடந்துக்கறேன்”.

ச்சின்ன குழந்தைமேல் தாய்க்கு வரும் கோபம் எவ்வளவு நேரம் தாங்கும். அதன் மழலையான குரலை கேட்கும்வரை. யசோதையும் கண்ணனை அப்படியே வாரியணைத்து முத்தமாரி பொழியறாளாம்.

இந்த காட்சியை ஸ்ரீ புரந்தரதாஸர் அப்படியே இந்த பாடலில் பாடியுள்ளார் - கும்மன கரெயதிரே. பாவம், அந்த குழந்தை ’பூச்சாண்டிக்கு’ பயந்து என்னல்லாம் செய்ய மாட்டேன்னு அம்மாகிட்டே சொல்லுது பாருங்க.


***

கும்மன கரெயதிரே அம்மா நீனு
கும்மன கரெயதிரே


பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா, நீ
பூச்சாண்டியை கூப்பிடாதேம்மா

சும்மனே இருவேனு அம்மிய பேடெனு
மம்மு உண்ணுதேனு அம்மா அளுவுதில்லா (கும்மன)


சும்மா இருப்பேன், முலைப்பால் கேட்கமாட்டேன்
உணவு உண்கிறேன், அம்மா இனிமேல் அழமாட்டேன் (கும்மன)

ஹெண்ணுகளிருவல்லிகே அவர
கண்ணு முச்சுவுதில்லவே
சின்னர படியேனு அண்ணன பையேனு
பெண்ணெய பேடேனு மண்ணு தின்னுவுதில்லா (கும்மன)


சிறுமிகள் இருக்குமிடத்தில் போய் அவர்களின்
கண்களை மூடமாட்டேன் (தொந்தரவு செய்ய மாட்டேன்)
சிறியவர்களை அடிக்க மாட்டேன்; அண்ணனை திட்ட மாட்டேன்
வெண்ணையை கேட்க மாட்டேன்; மண்ணைத் தின்ன மாட்டேன் (கும்மன)

பாவிகே போகே காணே அம்மா நானு
ஹாவினொளாடே காணே
ஆவின மொலெயூடே கருகள பிடே நோடே
தேவரந்தே ஒந்து டாவிலி கூடுவே (கும்மன)


கிணற்றடிக்கு போக மாட்டேன் அம்மா நான்
பாம்புகளோடு விளையாட மாட்டேன்
பசுக்களிடத்தில் (பால் குடிக்க) கன்றுகளை விட மாட்டேன்
கடவுளைப் போல் ஒரு இடத்தில் (சும்மா) அமர்ந்திருப்பேன் (கும்மன)

மகன மாதன்னு கேளுத்தா கோபிதேவி
முகுளு நகெயு நகுதா
ஜகதோதடேயனா ஸ்ரீ புரந்தர விட்டலனா
பிகிதப்பி கொண்டளு மோகதிந்தாக (கும்மன)


மகனின் பேச்சைக் கேட்டு தாயானவள்
நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு
இந்த உலகத்தைக் காப்பவனாகிய ஸ்ரீ புரந்தர விட்டலனை
மிகுந்த பாசத்துடன் வாரியணைத்துக் கொண்டாள். (கும்மன)

***

இந்த அழகான பாடலை, வித்யாபூஷணரின் குரலில் கேளுங்கள்.



***

ராஜஸ்ரீ வாரியரின், அழகான பரதநாட்டிய நடனத்தில், ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தக் குறும்பினை பாருங்கள்.



***

Thursday, May 5, 2011

கூப்பிட்டால் வரக்கூடாதா?

தாசர் பாடல் போட்டிகளில் பங்கேற்று பாடுபவர்கள், மிகமிக சின்னதாய், எளிமையாய் சில பாடல்களை தேர்ந்தெடுத்து, அதை மனப்பாடம் செய்து கொண்டு பாட ரெடியாய் இருப்பார்கள். புகழ்பெற்ற சில பாடல்கள் எல்லார் பட்டியலிலும் இருக்கும். அப்படி எளிமை, இனிமை, ச்சின்னது இப்படி எல்லா அளவுகோலிலும் வெற்றி பெற்று, அனைவர் பட்டியலிலும் இடம்
பிடிக்கும்படியான ஒரு பாடல்தான் இன்னிக்கு பார்க்கப் போகிறோம்.

’கரெதரே பரபாரதே’ என்னும் இந்தப் பாடலை பாடியவர் கமலேஷ விட்டலதாசர். வாழ்ந்த காலம் 1780AD. 'கமலேஷ விட்டலா' என்னும் முத்திரையை இணைத்து பற்பல பக்திப் பாடல்களை பாடியவர் இவர்.
மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரைக் குறித்து பாடப்பட்டுள்ளது இந்த பாடல்.


***

கரெதரே பரபாரதே
குரு ராகவேந்திரா (கரெதரே)


கூப்பிட்டால் வரக்கூடாதா
குரு ராகவேந்திரா (கரெதரே)

வர மந்திராலய புர மந்திர தவ
சரண சேவகரு கரவா முகிது (கரெதரே)


(புனித தலமான) மந்திராலயத்தில் உங்கள் கோவிலின் முன் நின்று
சேவை செய்யும் பக்தர்கள் கைகூப்பி தொழும்போது (கரெதரே)

ஹரிதாசரு சுஸ்வர சம்மேலதி
பரவசதல்லி பாயி தெரது கூகி (கரெதரே)


ஹரியின் பக்தர்கள் நல்ல ராக, தாளத்துடன்
பக்தி பரவசத்துடன் உன்னை போற்றி பாடி, தொழும்போது (கரெதரே)

பூஷரபித கமலேஷ விட்டலன்ன
தாசகிரேஸரு ஈ சமயதல்லி (கரெதரே)


மன்மதனின் தந்தையான கமலேஷ விட்டலனே
உன் தாசர்கள் உன்னை வணங்கும் இந்த தருணத்தில் (கரெதரே)

***

பூஜ்யாய ராகவேந்திராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்‌ஷாய நமதாம் காமதேனவே


அவரைக் குறித்து பஜிப்பவர்களுக்கு கல்பவிருக்‌ஷமாகவும், அவர் பெயரை ஜபிப்பவர்களுக்கு அனைத்தையும் காமதேனுவுமாய் இருப்பவர் ஸ்ரீ ராகவேந்திரர் என்று இந்த சுலோகம் சொல்கிறது.

***

இந்தப் பாடலை பாடுபவரின் ஒரு காணொளி; பின்னர் வாத்திய இசையிலும், ஒலித்துண்டாகவும் இதே பாட்டு.





http://www.muzigle.com/track/karedare-barabarade#!track/karedare-barabarade

***

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

***

Tuesday, May 3, 2011

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?



108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீரங்கம். திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீரங்கநாதர்.

த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்கள் / பாசுரங்கள் இந்த விக்கி பக்கத்தில் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி-தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர். அவற்றில் ஒரு பாட்டுதான் இன்று பார்க்கப் போவது.

***

புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார். வாழ்ந்த ஆண்டு 1420 - 1486. ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.



கன்னடத்தில் செய்யப்படும் எந்த கதாகாலட்சேபத்திலும் முதலில் சொல்லப்படும் ஸ்லோகத்தில், ஸ்ரீபாதராயருக்கு வந்தனம் செய்து துவக்குவதே மரபாக உள்ளது. அந்த ஸ்லோகம் இதோ.

நம: ஸ்ரீபாதராஜாய நமஸ்தே வியாஸயோகினே
நம: புரந்தரார்யாய விஜயார்யாய தே நம:


கிருஷ்ணா நீ பேகனே பாரோ - என்று பாடிய ஸ்ரீ வியாஸராயருக்கு வித்யாகுருவானவர் நம் ஸ்ரீபாதராயர்.

தன் எல்லாப் பாடல்களின் முடிவிலும் ‘ரங்க விட்டலா’ என்று முத்திரையை பதித்து பாடிய ஸ்ரீ பாதராயர், கர்னாடகாவில் முளபாகலு என்னும் இடத்தில் சமாதியடைந்தார்.

இன்று இவரின் புகழ்பெற்ற பாடலான ‘கண்களித்யாதகோ’வை பார்க்கலாம்.

கண்களித்யாதகோ
காவேரி ரங்கன நோடதா


இந்த கண்கள் எதற்கு
காவேரி ரங்கனை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

ஜகங்களொளகே மங்கள மூருத்தி
ரங்கன ஸ்ரீ பாதங்கள நோடதா (கண்களித்யாதகோ)


இந்த உலகத்தில் மிக அழகான வடிவான
ஸ்ரீ ரங்கனாதனின் பாதங்களை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

எந்திகாத ரொம்மே ஜனரு
பந்து பூமியல்லி நிந்து
சந்திர புஷ்கரணி ஸ்நாநவ மாடி
ஆனந்த திந்தலி ரங்கன நோடதா (கண்களித்யாதகோ)


என்றாவது (ஒரு நாளாவது) இந்த மக்கள்
வந்து இந்த புண்ணிய பூமியில் நின்று
சந்திர புஷ்கரணியில் நீராடி
ஆனந்தத்துடன் ஸ்ரீ ரங்கனை பாராமல் (கண்களித்யாதகோ)

ஹரி பாதோதக சம காவேரி
விரஜா நதியல்லி ஸ்நாநவ மாடி
பரம வைகுண்ட ரங்கன மந்திர
பர வாசுதேவன நோடதா (கண்களித்யாதகோ)


ஹரியின் பாதம் பட்ட நீருக்கு சமமானதும்
பூலோக விரஜா நதியுமான காவேரியில் குளித்து
வைகுண்ட ராஜனான ரங்கனின் கோயிலில்
அந்த வாசுதேவனை காணாமல் (கண்களித்யாதகோ)

ஹார ஹீர வைஜயந்தி
தோர முத்தின ஹார பதக
தேரனேறி பீதிலி பருவ
ஸ்ரீரங்க விட்டல ராயன நோடதா(கண்களித்யாதகோ)


வைரம் மற்றும் வைஜயந்தியினாலான மாலை
முத்து இழைத்த பதக்கத்துடன்
தேரில் ஏறி வீதியில் பவனி வரும்
ஸ்ரீரங்க விட்டலனை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

***

பாடலில் வரும் விரஜா நதியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

சொர்க்கத்தில் இருக்கும் நதியின் பெயர் விரஜா நதி என்று சொல்லப்படுகிறது. அந்த நதியில் ஒரு முறை முங்கி எழுந்ததும், ஆத்மாவிற்கு சம்சார பந்தங்கள் அனைத்தும் அறுந்து, அதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் போய்விடுமாம்.

***

இந்த பாடலை நம் பீமண்ணர் மிகமிக பக்தியுடன் பாடியுள்ளதை கேட்போம்.



***