Thursday, February 24, 2011

பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வருவாய்!சென்ற இடுகையில் பார்த்த பாட்டு - ஸ்ரீ ஹரியைக் கண்ட ஆனந்தத்தில் - புரந்தரதாஸர் பாடிய ‘தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ’.

ஸ்ரீமன் நாராயணன் தனியா வருவாரா? கண்டிப்பா வரமாட்டார்.

கூடவே யாரு வருவா?

அவரைப் பற்றிதான் இன்று பார்க்கப்போகும் பாடல்.

***

** கர்நாடக சங்கீதம் அறிமுகம் உள்ள அனைவருக்கும் மிகவும் தெரிந்த பாடல்.

** புதுமனை புகுவிழாவில் கண்டிப்பாக பாடும் பாடல்.

** திருமண நிகழ்ச்சியில் தாலி கட்டியவுடன், நாதஸவரம் வாசிப்பவர் வாசிக்கும் பாடல்.

** வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பெண்கள் தவறாமல் பாடும் பாடல்.

** வரலட்சுமி பூஜையன்றும் பாடுவார்கள்.

** எனக்கு மிகவும் பிடித்த பாடல். (சிறப்பு காரணம் இன்னொண்ணு இருக்கு. அது என்னன்னு பதிவில் சொல்கிறேன்!).

மேலே சொன்ன சிறப்புகளெல்லாம் ஒரே பாடலைப் பற்றிதான். அது என்ன பாடல்?

இந்நேரம் டக்குன்னு பிடிச்சிருப்பீங்களே.

அதுதான் ‘பாக்யதா லட்சுமி பாரம்மா’.

எளிமை எளிமை எளிமை
இனிமை இனிமை இனிமை

அதற்கு இன்னொரு அற்புதமான உதாரணம் இந்தப் பாடல்.

***


மஹாலட்சுமியின் சிறப்புகளை விளக்கும் வேத மந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் சாரத்தினை அப்படியே இந்தப் பாட்டில் தந்திருக்கிறார் புரந்தரதாஸர்.

சூரியசந்திரர்களைப் போல் ஒளியுடைய,
குதிரைகளைப் பூட்டிய தேரில் பவனி வரும்,
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மனைவியான

ஸ்ரீ லட்சுமி தேவி

தன் பக்தர்களின் குறைகளை போக்கும் இளகிய மனமுடையவள்,
சகல சௌபாக்கியங்களை கொடுக்கக்கூடியவள்,
தன்னை வணங்குபவர்கள் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்கும்படி செய்பவள்

என்று ஸ்ரீ சூக்தம் ஸ்ரீ லட்சுமி தேவியின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது.

அதையே நம்ம தாஸர் எளிய கன்னடத்தில் நமக்கு புரியும்படி எடுத்துரைக்கிறார்.

இப்போ பாடல்.

***

பாக்யதா லட்சுமி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யதா லட்சுமி பாரம்மா


பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா
என் தாயே, சகல சௌபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா

ஹெஜ்ஜெ கால்களா த்வனிய மாடுதா
ஹெஜ்ஜெய மேல் ஒந்து ஹெஜ்ஜெய நிக்குதா
சஜ்ஜன சாது பூஜெயெ வேளெகே
மஜ்ஜிகே ஒளகின பெண்ணேயந்தே (பாக்யதா)


கொலுசு அணிந்த கால்களால் சத்தத்தை செய்தவாறு
அடி மேல் அடி வைத்து
நன்கு படித்தவர்களின் பூஜை வேளையில்
தயிரிலிருந்து (கடைந்தால்) வரும் வெண்ணையைப் போல் (பாக்யதா)

கனக வ்ருஷ்டியா கரெயுத பாரே
மன காமனெயா சித்தியு தோரே
தினகர கோடி தேஜதி ஹொளெயுத
ஜனகராயன குமாரி பேக (பாக்யதா)


தங்க மழை பெய்தவாறே வாராய்
என் விருப்பங்களை நிறைவேற்றுவாய்
கோடி சூரியர்களின் ஒளியை (போல தேஜஸ்) கொண்ட
ஜனகனின் மகளே (சீதையே) சீக்கிரம் (பாக்யதா)

அத்தித்தகலதே பக்தர மனெயொளு
நித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள
சத்யவ தோருவ சாது சஜ்ஜனர
சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பே (பாக்யதா)


அங்கிங்கு போகாமல் (நேராக) பக்தர்களின் வீட்டிற்கு (நீ வந்தால்)
(அங்கே) எப்போதும் திருவிழா; தினமும் சந்தோஷம்
(வேத சாஸ்திரங்களின்) உண்மையை எடுத்துரைக்கும் பக்திமான்களின்
மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் லட்சுமி (பாக்யதா)

சங்க்யே இல்லதா பாக்யவ கொட்டு
கங்கண கையா திருகுத பாரே
குங்குமாங்கிதே பங்கஜ லோசன
வேங்கடரமணன பட்டத ராணி (பாக்யதா)


கணக்கேயில்லாத பாக்கியத்தைக் கொடுக்கும்
வளையல்கள் கூடிய (உன்) வலது கையை காட்டியவாறே வாராய்
குங்குமம் இட்ட நெற்றியோடு, தாமரை (போல்) விழிகளை கொண்டவளே,
வேங்கடரமணனின் பட்டத்து ராணியே (பாக்யதா)

சக்கரே துப்பவ காலுவே ஹரிசி
சுக்ரவாரதா பூஜய வேளகே
அக்கரெயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணி (பாக்யதா)


சக்கரையும், நெய்யும் மழையாய் பெய்ய
வெள்ளிக்கிழமை பூஜை வேளையில்
கருணையே வடிவான ரங்கனின்,
புரந்தர விட்டலனின் ராணியே (பாக்யதா)


*****


இந்தப் பாடலை நம்ம பீமண்ணவர் எப்படி அனாயாசமாக பாடுகிறார்னு கேட்டு ரசியுங்கள்.
மேலே பாடியவர் ஒரு விதம்னா, நம்ம எம்.எஸ்.அம்மா மற்றொரு விதமா பாடுறாங்க.
(இந்த ராகத்தில்தான் எங்க வீட்டிலேயெல்லாம் பாடுவார்கள்).
**இந்தப் பாடல் பிடிக்க இன்னொரு சிறப்புக் காரணம், மேலே பாட்டில் சொன்ன மாதிரி

சுக்ர வாரதா பூஜெய வேளகே

வரலக்‌ஷ்மி பூஜையன்று வெள்ளிக்கிழமை காலை பூஜை நேரத்தில் - சஹானா பிறந்தார்.

*****

Wednesday, February 23, 2011

தாஸரைப் பற்றி ஒரு அருமையான காணொளி.

புரந்தரதாஸரைப் பற்றிய ஒரு அருமையான காணொளியை - 1 மணி நேரம் ஓடக்கூடியது - கண்டேன். ஒரே பிரச்சினை அது கன்னடத்தில் இருப்பதே அதுவும் no subtitles. அந்தப் படத்திற்கு subtitle எழுதணும்னா அது ஒரு தனி ப்ராஜெக்டா போயிடுமென்பதால், காணொளியில் காட்டப்பட்டும் சம்பவங்களை இங்கு சிறுகுறிப்பாக தந்துள்ளேன்.

***

இதே தளத்தில் உள்ள இந்த முந்தைய பதிவை படித்து பிறகு - கீழே இருக்கும் சம்பவங்களையும் பார்த்துவிட்டு காணொளியை பாருங்கள். அட, கன்னடம் சுலபம்தாங்க.. பால் = ஹால், மக்கள் = மக்களு. அவ்வளவே.. :-)

***

ஒரு சமயம், தாஸரைப் பற்றி கேள்விப்பட்ட கிருஷ்ணதேவராயர் அவரைப் பார்க்க ஸ்ரீவியாஸராயர் மடத்திற்கு வந்தார்.

அப்போது தாஸர் பாடிய பாடல்.

நிம்ம பாக்ய தொட்டதோ
நம்ம பாக்ய தொட்டதோ

(உன்கிட்டே இருப்பது மஹாலட்சுமி. என்கிட்டே இருப்பது அவளின் தலைவன் ஸ்ரீஹரி. அதனால், உன் பாக்யம் பெரிதா.. என் பாக்யம் பெரிதா).

***

ஒரு நாள் பிஷைக்கு போயிருக்கும்போது, செல்வந்தர் ஒருவர் தாஸருக்கு தெரியாமல் அவரது பையில், முத்துக்களை போட்டுவிட்டார். அதைக் கண்ட தாஸர், அவைகளை எடுத்து

நீரில் போட, பதறிப்போன செல்வந்தர், ஏன் அப்படி செய்தீர் என்று வினவினார்.

அதற்கு தாஸர் சொன்னது - எனக்கு இந்த முத்துக்கள் தேவையில்லை. எனக்கு இதை விட அபாரமான முத்துக்கள் கிடைத்துள்ளன. அவை பகவானின் நாமங்கள். அதை நான்

உங்களுக்கு தருகிறேன். அதை வைத்துக்கொண்டு சந்தோஷமடையுங்கள் என்று கூறி

முத்து கொள்ளீரோ ஜனரு
முத்து கொள்ளீரோ

என்று பாடினார்.

***

ஒரு முறை தாஸர், தன் சிஷ்யர் அப்பண்ணனிடம் கைகால் கழுவ நீர் கொண்டுவா என்று சொன்னார். தூக்கத்தில் இருந்த சிஷ்யர் நீர் கொண்டு வராததால், விட்டலனே சொம்பில் நீர் கொண்டு வர, நேரம் ஆகிவிட்ட காரணத்தால், கோபமுற்ற தாஸர் அந்த சிஷ்யரை கடிந்துகொண்டு, அந்த சொம்பினால், அவர் தலையில் இடித்தார்.

மறு நாள் கோயிலுக்கு சென்று பார்க்கையில், விட்டலனின் தலையில் காயம் இருந்தது. மேலும் கண்களின் கண்ணீர் வந்துகொண்டிருந்தது.

அப்போது அனைத்தும் புரிந்துகொண்ட தாஸர், விட்டலனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அந்த காயத்தை தொட்டவுடன், அது சட்டென்று மறைந்தது.

***

மற்றொரு முறை விட்டலன், தாஸர் வேடமிட்டுக் கொண்டு ஒரு தாசியின் வீட்டிற்கு சென்று, தன் ஒரு கை வளையைக் கொடுத்துவிட்டான்.

இங்கே கோயிலில் விட்டலனின் வளையைக் காணாமல், ஊரெல்லாம் தேட ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு வந்த தாசி, நேற்றிரவு தாஸரே என் வீட்டிற்கு வந்து இந்த வளையைக் கொடுத்தார் என்று கூற, தாஸரை கட்டிவைத்து அடித்துவிட்டனர் அதிகாரிகள்.

அப்போது தாஸர் பாடிய பாடல் -

முய்யக்கே முய்ய தீரிது

(பழிக்குப் பழி தீர்ந்தது - நான் உன்னை தலையில் இடித்தேன். அதுக்கு பழியாக எனக்கு அடி கிடைத்தது)

பிறகு விட்டலன் அசரீரியாக பிரச்சினையை விளக்கியதால், தாஸரை விடுவித்தனர்.

***

மேலும் காணொளியில் உள்ள பாடல்கள்:

ஆச்சார இல்லத நாலிகே

தாரக்கே பிந்திகெ நா நீரிகோகுவே தாரே பிந்திகெயா

ராகி தந்தீரா

ஈஸ பேகு இத்து ஜெயிஸ பேகு

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக - குருவே சிஷ்யரைப் புகழ்ந்து பாடும் பாடல் - ஸ்ரீ வியாஸராயர், ஸ்ரீ புரந்தரதாஸரைப் புகழ்ந்து பாடும் இந்தப் பாடலோடும், இன்னும் சில

விவரங்களோடும், இந்த காணொளி முடிகிறது.

தாஸரெந்தரே புரந்தர தாஸரய்யா

(தாஸரென்றால் அது புரந்தர தாஸர்தான்).

**இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் பாடல்கள் எல்லாம் இந்த தாஸர் பாடல்கள் தளத்தில் தொடர்ந்து வரும் என்று தனியாக சொல்லவும் வேண்டுமா.

***

இனி காணொளி.
Watch Shri Purandara Daasaru in Animation View More Free Videos Online at Veoh.com

***

தாஸரெந்தரே புரந்தர தாஸரய்யா.

Wednesday, February 16, 2011

விட்டலன் வந்தான். வந்தான்.. வந்தே விட்டான்...

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி ஸாஸிர நாமத வேங்கட ரமணா...

இன்னு தய பாரதே தாஸன மேலே...

இப்படி நாராயணனை வேண்டி பற்பல பாடல்கள் பாடியுள்ளார் புரந்தரதாஸர்.

அவனைக் காணவேண்டும்.

அவன் தரிசனம் கிடைக்க வேண்டும்.

அவன் வந்தால் வரங்களை கேட்கவேண்டும்.

தாஸர் பாடுகிறார் பாடுகிறார்.

பாடிக்கொண்டே இருக்கிறார்.

அப்படியே ஒரு நாள்,

பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க

விட்டலனும் வந்தே விட்டான்.சங்கு சக்கரம் தரித்தவனாய்

கருடன் மேல் அமர்ந்தவனாய்

மந்தகாசப் புன்னகையுடையவனாய்

வேண்டுமளவுக்கு வரங்களை அளிக்கும் பக்தவத்ஸனாய்

விட்டலன் வந்தே விட்டான்.

தாஸருக்கு எப்படி இருக்கும்?

ஆடுகிறார்

பாடுகிறார்

ஆனந்தக் கூத்தாடுகிறார்

மேலும் என்ன செய்வார் தாஸர்?

நமக்குத்தான் தெரியுமே?

பாட்டுதான் பாடுவார்.

அந்த விட்டலனைக் குறித்து

பாடினார் ஒரு அருமையான பாடலை.

அது என்ன பாடல்?

இதோ இந்த பாடல்தான்.

தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ
தேவர தேவ சிகாமணி பந்தானோ (தேவ பந்தா)

கடவுள் வந்தார் நம்ம ஸ்வாமி வந்தாரே
தேவர்களின் தேவர் சிகாமணி வந்தாரே (தேவ பந்தா)

உரக சயன பந்தா கருட கமன பந்தா
நர கொலிதவ பந்தா நாராயண பந்தானோ (தேவ பந்தா)

சர்ப்பத்தின் மேல் படுத்திருப்பவர் வந்தார்
கருடனின் மேல் பயணிப்பவர் வந்தார்
நரகத்தை ஒளிர்விப்பவர் வந்தார்
நாராயணன் வந்தாரே (தேவ பந்தா)

மந்தரோத்தர பந்தா மாமனோஹர பந்தா
பிருந்தாவன பதி கோவிந்த பந்தானோ (தேவ பந்தா)

மந்தர மலையை தூக்கியவர் வந்தார்
அதிஅற்புத அழகைக் கொண்டவர் வந்தார்
பிருந்தாவனத்தின் தலைவர்
கோவிந்தன் வந்தாரே (தேவ பந்தா)

நக்ரஹரனு பந்தா சக்தரதரனு பந்தா
அக்ரூர கொலிதா த்ரிவிக்ரம பந்தானோ (தேவ பந்தா)

முதலையை கொன்றவர் வந்தார்
சக்கிரத்தை தரித்தவர் வந்தார்
அக்ரூரருக்கு தரிசனம் தந்த
த்ரிவிக்ரமர் வந்தாரே (தேவ பந்தா)

பக்ஷிவாஹன பந்தா லக்ஷ்மணாக்ரஜ பந்தா
அக்ஷய பலதா ஸ்ரீ லக்ஷ்மிரமண பந்தானோ (தேவ பந்தா)

பறவைமேல் பயணிப்பவர் வந்தார்
லக்‌ஷமணின் அண்ணன் வந்தார்
அளவில்லாத (முடிவில்லாத) பலன்களை கொடுக்கும்
ஸ்ரீ லக்‌ஷ்மி ரமணன் வந்தாரே (தேவ பந்தா)

நிகம கோசர பந்தா நித்ய த்ருப்தனு பந்தா
நகேமுக புரந்தர விட்டல பந்தானோ (தேவ பந்தா)

வேதங்களின் உள்ளடக்கமாய் இருப்பவர் வந்தார்
எப்போதும் திருப்தியுடன் இருப்பவர் வந்தார்
புன்னகையுடன் இருக்கும்
ஸ்ரீ புரந்தர விட்டலன் வந்தாரே (தேவ பந்தா)


*****

புரந்தரதாஸரின் வரிகளை முழுவதுமாய் உணர்ந்து அனுபவித்து பாடும் பீமண்ணரின் குரலில் ‘தேவ பந்தா நம்ம’ இதோ.அவரை அடுத்து ஒரு மழலையின் அழகான குரலில் ‘தேவ பந்தா நம்ம’.
****

தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ
தேவர தேவ சிகாமணி பந்தானோ

*****

Saturday, February 12, 2011

இன்று ஸ்ரீ மத்வநவமி : 2/12/2011


முன்குறிப்பு: ஸ்ரீ மத்வர் பற்றி தமிழ் விக்கியில் மிகத் தெளிவாக சொல்லியிருப்பதால், நான் சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்காமல், அங்கிருந்தே எடுத்துப் போட்டிருக்கிறேன். நன்றி விக்கி.

மத்வர் (இயற்பெயர்: வாசுதேவர்) கர்நாடக மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகா என்ற கிராமத்தில் பிறந்தார். 25வது வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானார். துறவியானதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரஞ்ஞர். மிகவும் படித்த அறிவாளி, துறவி என்பது மட்டும் அல்ல, அவர் தேகபலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சுமச் செய்கைகளிலும் கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்குப் பிறகு வாயு தேவனின் அவதாரமாகவே உதித்தவராகக் கருதப்பட்டார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு.

அவரது 37 நூல்களில் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இப்பெயரும் அவருடைய மிகையான அறிவைக் கருத்தில் கொண்டு அவருடைய குருவால் அவருக்கு இடப்பட்ட பெயரே.

'துவைதம்’ என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை. அவை:

பிரம்மமும் ஆன்மாக்களும்;
ஆன்மாவும் ஆன்மாவும்;
பிரம்மமும் உலகும்;
ஆன்மாவும் உலகும்; மற்றும்
உலகிலுள்ள பொருளும் பொருளும்

மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது.

ஒரு சமயம் உடுப்பிக்கருகாமையில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி
வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாலிக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.

மத்வருடைய மறைவும் விந்தைக்குரியதே. அவர் புவியில் அவதரித்த காரியங்கள் செவ்வனே முடிந்ததும் வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. மலர்க்குவியலுக்கடியில் மறைந்த ஆச்சாரியரை மலர்களை அகற்றிப் பார்த்தபோது அவருடைய உடலும் காணவில்லை! அப்படி அவர் மறைந்த அந்த தினம் தான் இன்று. (மாக மாதம் சுக்ல நவமி) ஸ்ரீ மத்வ நவமியாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

****

புரந்தரதாசர், கனகதாசர், விஜயதாசர், கோபாலதாசர் முதலான பல்வேறு தாசர்கள், ஸ்ரீ மத்வர் ஸ்தாபித்த த்வைத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டே பாடல்களை பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ மத்வரைக் குறித்தும் அநேகப் பாடல்கள் உண்டு. அதில் ஒன்றை இன்று பார்ப்போம்.

*****


கூசின கண்டீரா முக்யப்ராணன கண்டீரா
பாலன கண்டீரா பலவந்தன கண்டீரா (கூசின)


குழந்தையை பார்த்தீர்களா அனுமனை பார்த்தீர்களா
குழந்தையை பார்த்தீர்களா பலவானை பார்த்தீர்களா

அஞ்சனி உதரதி ஜெனிசிது கூசு
ராமன பாதக்கிரகிது கூசு

சீதெகே உங்குர கொட்டித்து கூசு

லங்காபுரவனெ சுட்டித்து கூசு (கூசின)


அஞ்சனா தேவியிடம் பிறந்த குழந்தை
ராமனின் பாதங்களை தொட்டு சேவித்த குழந்தை
சீதையிடம் மோதிரத்தை கொடுத்த குழந்தை
இலங்கை நகரத்தை நெருப்பால் சுட்ட குழந்தை (கூசின)

பண்டி அன்னவ நொங்கிது கூசு
பகன ப்ராணவ கொந்திது கூசு

விஷத லட்டுகெய மெத்திது கூசு

மடதிகே புஷ்பவ கொட்டிது கூசு (கூசின)


ஒரு வண்டி நிறைய உணவை உண்ட குழந்தை
பகாசுரனின் உயிரை எடுத்த குழந்தை
விஷம் கலந்த லட்டுவை உண்ட குழந்தை
மனைவிக்கு புஷ்பத்தை கொடுத்த குழந்தை (கூசின)

மாயவெல்லவ கெத்திது கூசு
மத்வ மதவனு உத்தரிசிது கூசு

புரந்தர விட்டலன தயதிந்த கூசு

சும்மனே உடுப்பிலி நிந்திது கூசு (கூசின)


மாயைகளை வென்ற குழந்தை
மத்வ மதத்தை உய்வித்த குழந்தை
புரந்தர விட்டலனின் கருணையால்
உடுப்பியில் சும்மா நின்ற குழந்தை (கூசின)

****

முதல் சரணத்தில் அனுமனைக் குறித்தும், இரண்டாவது சரணத்தில் பீமனைக் குறித்தும், மூன்றாவது சரணத்தில் மத்வரைக் குறித்தும் பாடிய தாஸர், பாட்டை எப்படி முடிக்கிறார்?

அந்த மூன்று அவதாரங்களிலும் அந்தர்யாமியாக இருந்தது - உடுப்பியில் ’சும்மா’ நின்றிருக்கும் அந்த குழந்தை - அதாவது கிருஷ்ணனே என்று பாடி முடித்திருக்கிறார்.

****

இந்தப் பாடலை பாடிய வித்யாபூஷணரின் காணொளி:***

ஸ்ரீ மத்வர் எழுதிய பகவத்கீதா தாத்பர்ய நிர்ணயத்திலிருந்து ஒரே ஒரு ஸ்லோகத்தை பார்த்துவிட்டு, மத்வநவமி கொண்டாடச் செல்வோம்.

நாஹம் கர்தா ஹரி: கர்தா தத்பூஜா கர்மசாகிலம்
ததாபி மத்க்ருதா பூஜா தத்ப்ரசாதேன நான்யதா
தத்பக்தி தத்பலம் மஹ்யம் தத்ப்ரசாதாத் புன:புன:
கர்மண்யாசோ ஹராவேவம் விஷ்ணோஸ் திருப்திகரஸ் ஸதா

பொருள்:

எதுவும் நான் செய்யவில்லை; எல்லாம் அந்த ஹரியே செய்விக்கிறான்; நான் செய்வதெல்லாம் அவன் புகழ்பாடும் பூஜையே; அந்த பூஜையும் அவன் கருணையாலே செய்கிறேன்; என்னுடைய பக்திக்கும், அதன் பலாபலன்களுக்கும் அவனுடைய கருணையே காரணம்; அனைவரும் தூய மனதோடு பக்தி செய்தால், விஷ்ணுவை அது திருப்திப்படுத்தும்.

****

Wednesday, February 9, 2011

இன்னும் தயை வரவில்லையா கிருஷ்ணா?***

கடவுளே, நானும் எவ்வளவு நாளா கேக்கறேன், இந்த வருஷம் எனக்கு கண்டிப்பா 30% ஊதிய உயர்வு வேணும். கூடவே பக்கத்து வீட்டில் இருப்பது போல் ஒரு எல்சிடி டிவி வேணும்.

கடவுள்கிட்டே இப்படி யாரு வேண்டிப்பா?

பெரும்பாலான மக்கள் இப்படித்தான் வேண்டிப்பாங்க. கரெக்டா?

நம்ம தாஸர்களும் இப்படித்தான்.

கடவுள்கிட்டே எதையாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

அப்படியா?

நிஜமாவா?

வெயிட்..

கேப்பாங்கன்னு சொன்னேன். என்ன கேப்பாங்கன்னு சொன்னேனா?

அவங்க கேட்பதெல்லாம் நாராயணனின் கடைக்கண் பார்வை மட்டுமே.

அவன் தயை இருந்தால் போதும் - வேறு எதுவும் வேண்டாம் என்றே வேண்டுகிறார்கள்.

நீ தய ராதா
காதனே வாரெவரு - கல்யாண ராமா நீ தய ராதா

இந்த பாட்டை கேட்டிருப்பீங்க (யேசுதாஸ் குரல் காதுலே கேக்குதா. ஆமா. சிந்துபைரவி படத்தில் வரும்!)

தியாகராஜர், ராமனிடம் - உன் தயை இல்லையான்னு கேட்கிறார்.

இதே போல் நம்ம தாஸரும் அந்த கிருஷ்ணனிடம் அவன் தயை வேண்டி நிறைய பாடல்கள் பாடியிருக்காரு.

ஹோல்ட் ஆன்.

இப்படி இவங்க ஏன்தயைகேக்குறாங்க?

எப்போதும் அவன் நினைவிலேயே இருக்கும், அவன் புகழையே பாடிக்கொண்டிருக்கும், அவனுக்கு பூஜை செய்துகொண்டிருக்கும் தாஸர்கள், வேறென்ன கேக்கப் போறாங்க.

இன்னொரு பிறவி வேண்டாம்.

அப்படியே இன்னொரு பிறவி கொடுத்தாலும், அந்த பிறவியிலும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்படியான வரம்தான் அவங்க கேட்பது.

சரியா?

இன்னொரு முக்கியமான விஷயம், இதெல்லாம் நமக்காகவும்தான் பாடியிருக்காங்க.

அதனால், ஒழுங்கு மரியாதையா நாமும் இந்த பாடல்களின் பொருளை உணர்ந்து, பாடி, கடவுளை தொழுது, அவன் தயையை பெறுவோமாக.

இப்போ பாட்டு.

**

இன்னு தய பாரதே தாஸன மேலே
பன்னக சயன பரமபுருஷ ஹரியே (இன்னு)

இந்த தாஸனின் மேல் இன்னும் தயை வரவில்லையோ?
ஆதிசேஷனின் மேல் படுத்திருக்கும் அனைவரிலும் உத்தமனான ஹரியே (இன்னு)

நானா தேசகளல்லி நானா காலகளல்லி
நானா யோனிகளல்லி நெளிது ஹுட்டி
நானு நன்னது எம்ப நரகதொளகே பித்து
நீனே கதியெந்து நம்பித தாஸன மேலே (இன்னு)

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில்
வெவ்வேறு கர்ப்பத்தில் பிறந்து
நான், எனது என்று இருமாப்பில் (நரகத்தில்) வீழ்ந்து (பிறகு புத்தி தெளிந்து, இப்போ)
நீயே கதி என்று வந்திருக்கும் இந்த தாஸனின் மேல் (இன்னு)

மனோ வாக் காயதிந்த மாடித கர்மகளெல்ல
தானவாந்தக நின்ன தான விட்டே
ஏனு மாடிதரேனு ப்ராண நின்னது ஸ்வாமி
ஸ்ரீநாத புரந்தர தாஸன மேலே (இன்னு)

மனம், சொல், உடல் ஆகிய மூன்றினாலும் நான் செய்த அனைத்து செயல்களையும்
தானவர்களை அழித்த உனக்கு அர்ப்பணம் செய்தேன்
நான் என்னதான் செய்தாலும், ஸ்வாமி, என் வாழ்க்கை (பிறவி) உன்னுடையதே
ஸ்ரீயின் (இலக்குமியின்) நாதனாகிய புரந்தரவிட்டலனே, இன்னும் இந்த தாஸனின் மேல் (இன்னு)


***

இன்னு தய பாரதே - சுதா ரகுநாதனின் குரலில்:***

இன்னு தய பாரதே - பம்பாய் சகோதரிகள் குரலில் :***

Saturday, February 5, 2011

என்ன தவம் செய்தனை யசோதா..


உலகத்தையே கட்டிக் காக்கும் அந்த பரம்பொருளின் தாய்க்கு ஏதாவது கவலை இருக்குமா?
குழந்தை கீழே விழுந்தால் அடிபடுமே என்று கவலைப்படுவாரா?
மண்ணைத் தின்று விட்டால் பதைபதைத்துப் போவாரா?

ஆம். கண்டிப்பாக.

‘டெல்லிக்கே ராஜான்னாலும், தன் தாய்க்கு அவர் சேய்தானே!!!’

அவர்தான் யசோதா.

உலகத்தையே தன் வாயில் காட்டினாலும்,
ஒரே சமயத்தில் பல வீட்டிலிருந்து வெண்ணைய் தின்று, மாட்டி கொண்டுவரப்பட்டாலும்,
இன்னும் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினாலும்

ம்ஹூம். No.

அவன் என் மகன்.

இன்னும்
ச்சின்னப் பையன்தான்
அவனுக்கு ஒண்ணும்(!) தெரியாது.

என்று சொல்வாராம்.

அப்பேர்ப்பட்ட குழந்தையை வளர்க்கும், கட்டிப் போடும், அந்த குழந்தையோடு விளையாடும் பாக்கியம் பெற்ற யசோதாவைத்தான் பாபநாசம் சிவன் பாடினார்.. என்ன தவம் செய்தனை யசோதா.

**அதே போல்,

யசோதாவைப் பார்த்து பாடும்படி,
யசோதாவே பாடும்படி

பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார் நம்ம புரந்தரதாஸர்.

தன் அனைத்துப் பாடல்களைப் போலவே, இந்த பாடல்களிலும் கண்ணனின் புகழ், அவனிடத்தில் தான் கொண்ட பக்தி அனைத்தையும் காட்டியுள்ளார் தாஸர்.

அப்படிப்பட்ட பாடலில் ஒன்று - மிகவும் பிரபலமான, யூட்யூபில் தேடினால், நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வரும் - ஜகதோத்தாரணாவை இன்று பார்ப்போம்.

***

ஜகதோத்தாரணா அடிசிதளே யசோதே

அகிலத்தையே உத்தாரணம் (ரட்சிக்கும்) பரமாத்மனோடு
யசோதை விளையாடினாள்

ஜகதோத்தாரணா மகனெந்து திளியுதா
சுகுணாந்த ரங்கன அடிசிதளே யசோதே (ஜக)

அகில உலகத்தையே ரட்சிக்கும் கிருஷ்ணனை
(கடவுள் என்று நினைக்காமல்) தன் மகன் என்று மட்டுமே நினைத்து
அனைத்து நற்குணங்களை கொண்டவனாகிய அந்த ரங்கனோடு
ய்சோதை விளையாடினாள்

நிகமகே சிலுகதா அகணித மஹிமன
மகுகள மாணிக்யன அடிசிதளே யசோதே (ஜக)

வேதங்களுக்கு அப்பாற்பட்டவனும்
எண்ணிக்கையில்லா மகிமையுடையவனுமாகிய
குழந்தைகளில் மாணிக்கமாகிய
கிருஷ்ணனுடன் யசோதை விளையாடினாள்

அனோரணீயன மஹதோ மஹீயன
அப்ரமேயன அடிசிதளே யசோதே (ஜக)

அணுவைவிட சிறியவனாக இருப்பவனும்
பெரியதைவிட பெரியவனாகிய இருப்பவனும்
அளக்கமுடியாதவனுமாகிய கிருஷ்ணனுடன்
யசோதை விளையாடினாள்

பரம புருஷன பரவாசுதேவன
புரந்தர விட்டலன அடிசிதளே யசோதே (ஜக)

உத்தம புருஷனான இருப்பவனும்
சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவனுமாகிய
புரந்தர விட்டலனுமாகிய கிருஷ்ணனுடன்
யசோதை விளையாடினாள்

**

ஜகதோத்தாரணா, நம்ம எம்.எஸ். அம்மா குரலில்:ஜகதோத்தாரணா, வீணை திரு.எஸ்.பாலசந்தரரின் கைவண்ணத்தில்.**

ஜகதோத்தாரணா.
அந்த கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்.

**

Wednesday, February 2, 2011

ஸ்ரீ புரந்தரதாஸர் (AD 1485 - 1564)

பாடல்கள் மூலம் பக்தியை பரப்புவதில் தமிழகத்தில் ஆழ்வார்களைப் போல், கர்நாடகத்தில் ஹரிதாஸர்களின் பங்கு மகத்தானது. கடவுளின் பக்தி, மகிமை, அருமை பெருமைகள், இல்லத்தரசனின் கடமைகள், வாழ்க்கை நெறிமுறைகள் இப்படி பலதரப்பட்ட தலைப்புகளில் பலப்பல பாடல்களை பாடியுள்ளனர் ஹரிதாஸர்கள். அனைத்தும் இனிய, எளிய கன்னடத்தில்.


இந்த ஹரிதாஸர்களில் முதன்மையானவர் - நாரதரின் மறுஅவதாரமாக கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாஸர் ஆவார். தாஸரின் புண்ணிய தினமான நாளை (2/2/2011 ), அன்னாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சிறப்பினையும் தெரிந்து கொள்வோம்.கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார் தாஸர்.

(கர்நாடக) இசையின் மூலம் பாடல்கள் இயற்றி, கடவுள் வழிபாடு செய்யலாம் எனும் முறை தாஸரின் காலத்திலேயே துவங்கியது.


**

ஸ்ரீனிவாசர் ஒரு வட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். சாப்பிட்ட கையால் காக்கா என்ன, குருவி கூட ஓட்ட மாட்டார். வாலிப வயசில் எல்லாருக்கும் இருக்கும் அதே மனோபாவம் - கடவுளாவது ஒண்ணாவது, நம்ம தொழில், குடும்பம் எல்லாம் நம்ம சொந்த சரக்கில் நடப்பது. கடவுளை ரிடையர் ஆனப்புறம் பாத்துக்கலாம். இப்போ என்ன அவசரம். இதே மாதிரிதான் போயிட்டிருந்தது.

ஆனா அவர் வீட்டிலே இவருக்கு எதிர். புருஷன் பொண்டாட்டின்னாலே எதிர்-புதிர்தானேன்னு கேட்கப்படாது. திருமதி. சரஸ்வதிபாய், கடவுள் பக்தி கொண்டவர். பாவச் செயல்கள் செய்வதற்கு மிகவும் பயந்தவர். மிகவும் கருணை மனம் கொண்டவர். வந்தாருக்கு (கணவனுக்குத் தெரியாமல்) அள்ளிக் கொடுப்பவர். காக்கா ஓட்டணும்னாக்கூட கையில் எதையாவது எடுத்துக்கொண்டே ஓட்டுவார்னா பாத்துக்கங்க.

இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்த D-dayயும் வந்தது.

நம்ம ஸ்ரீனிவாசர் கடைக்கு போயிருக்காரு. அம்மா வீட்டில் வழக்கம்போல் பூஜை, புனஸ்காரம். அப்போ வெளியில் ஒருத்தர் - அம்மா, அம்மான்னு கூப்பிடுறாரு. என்னன்னு கேட்டா - என் பையனுக்கு உபநயனம் பண்ணனும். தயவு செய்து ஏதாவது பொருளுதவி பண்ணுங்கன்னு வேண்டி நிக்கறாரு. இவங்களுக்குத்தான் உதவின்னு யாராவது கேக்கமாட்டாங்களானு இருக்கே. ஆனா நம்மாளு பீரோ, பெட்டி எல்லாத்தையும் பூட்டிக்கிட்டு போயிட்டாரு. என்ன பண்றதுன்னு தெரியலியேன்னு யோசிச்சிட்டிருக்கறப்போ, ஒரு பளிச். பளிச்சுன்னு இருக்கிற தன் மூக்குத்தியை எடுத்து கொடுத்துட்டாங்க.

வந்தவரும் ரொம்ப நன்றிம்மான்னு சொல்லி போறாரு. பணம் கொடுத்தாலாவது எதாவது செலவு செய்யலாம், மூக்குத்தியை வெச்சிக்கிட்டு என்ன பண்றது? அடகு இல்லேன்னா வித்துறணும்னு ஒரு கடைக்குப் போறாரு. இதுக்குள்ளே உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ஆமா. நம்ம ஸ்ரீனிவாசர் கடைக்கே போறாரு.

பொதுவா ஆம்பிளைங்களுக்கு வீட்டுக்கு வாங்கிக் கொடுத்த ஆடை, அணிகலன்கள் எதுவும் நினைவில் இருக்காது. இது எப்போ வாங்கினோம், அது எங்கே எடுத்தோம்னு கேட்டு ‘திட்டு’ வாங்கறது வழக்கம். ஆனா, அன்னிக்கு ஏதோ ஒரு அதிசயம் நடக்கப்போறதால், ஸ்ரீனிவாசருக்கு - ஆஹா, இது நம்ம வீட்டுதாச்சே.. இந்தாளுகிட்டே எப்படி வந்துச்சு. பாத்தா இதை வாங்கற அளவுக்கு வசதி இருக்கறமாதிரியும் தெரியலியேன்னு யோசிக்கிறாரு.

அவரை ஒரு நிமிஷம் உக்காருங்கன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு ஓடறாரு. சரஸ்வதி, சரஸ்வதின்னு கூப்பிடுறாரு. சாயங்காலம் வரக்கூடிய பிராமணன், திடுதிப்புன்னு வந்து நிக்குறாரே, என்னவா இருக்கும்னு நினைச்சிக்கிட்டே வந்த அம்மா, என்னங்க, என்ன விஷயம்னு கேக்கறாங்க. இவரோ அவங்க மூக்கையே பாக்கறாரு. உன் மூக்குத்தி எங்கே?

ம். அது வந்து. அது வந்துங்க. சுத்தம் பண்ணலாம்னு கழட்டி வெச்சேன். திரும்பி மாட்டிக்க மறந்துட்டேன். மூக்குத்தி உள்ளேதான் இருக்கு.

சரி. போய் எடுத்துட்டு வா.

அவ்வளவுதான். சரஸ்வதி அம்மாவுக்கு உடம்பெல்லாம் ஆடிப் போச்சு. இவ்வளவு நாளா கணவன்கிட்டே இப்படியொரு பொய் சொன்னதேயில்லையே. இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்டோமே. அந்த மூக்குத்தியை நான் தானம் பண்ணிட்டேன்னு தெரிஞ்சா பயங்கரமா சத்தம் போடுவாரேன்னு பயந்துட்டே உள்ளே போறாங்க. உள்ளேதான் மூக்குத்தி இல்லையே? வேறென்ன பண்றது. கடவுள்கிட்டே வேண்டிக்க போறாங்க. கடவுளே, என்னை மன்னிச்சிடு. நான் பொய் சொல்லிட்டேன். இப்போ அவர்கிட்டே போய் உண்மையை சொல்லிட போறேன். அவர் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்னு சொல்லி பிரார்த்தனை பண்ணும்போது - அந்த பரந்தாமன், பக்தர்கள் கஷ்டத்தை போக்கும் கருணைக்கடல், சும்மா இருப்பானா? முன்னால் இருக்கும் பாத்திரத்தில் ஒரு ‘டக்’. பாத்தா அதே மூக்குத்தி. எடுத்துக்கிட்டு வந்து காட்டறாங்க ஸ்ரீனிவாசர்கிட்டே. அவர் சந்தேகத்தோடு கேட்க, அப்போ எல்லா உண்மையையும் சொல்லிடறாங்க சரஸ்வதியம்மா.

வந்தது அந்த நாராயணன்தான்னு தெரிஞ்சுது. அவ்வளவுதான். ஸ்ரீனிவாசருக்கு கண்ணீர் அப்படியே கொட்டறது. ஸ்ரீனிவாசா, வேங்கடரமணா, தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன். இவ்வளவு வருஷமா வாழ்க்கையை வீணாக்கிட்டேன். இனிமே எனக்கு எல்லாமே நீதான். வேறே எதுவும் வேணாம்னு சொல்லிட்டு - இருந்த எல்லா செல்வங்களையும் தானம் செய்துடறார். இனிமே பகவத் சேவைதான் வாழ்க்கைன்னு தீர்மானம் பண்ணி, அதுக்கு உடனடியா ஒரு தகுந்த குருவை பிடிக்க, யாரைப் போய் பாக்கறதுன்னு யோசிக்கறப்போ, ஸ்ரீ வியாசராயரை போய் பார்க்கலாம்னு முடிவு பண்ணி போறாங்க.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் கிருஷ்ணதேவ ராயரின் சபையில் ராஜகுருவாக இருந்த ஸ்ரீ வியாசராயர், ஸ்ரீனிவாசருக்கு ஆசியளித்து தன் சிஷ்யராக ஏற்றுக் கொண்டார். அவருக்கு புரந்தரதாஸர் என்று பெயரிட்டு, மக்களுக்கு ஞான, பக்தி, வைராக்கியத்திற்கான பாடல்களை கன்னடத்தில் அனைவருக்கும் புரியுமாறு இயற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

புரந்தரதாஸரும் குருவின் வேண்டுகோளுக்கிணங்க, பல பாடல்களை (தேவரநாமாக்களை) இயற்ற ஆரம்பித்தார். தன் எல்லா பாடல்களிலும் இறுதி வரியில் ‘புரந்தர விட்டலா’ என்று தன் கடவுளை அழைத்து அவருக்கே அந்த பாடல்களை அர்ப்பணித்தார். மனித வாழ்க்கையின் மூன்று தூண்களான ஞானம் (அறிவு), பக்தி, வைராக்கியத்தை தன் அனைத்து பாடல்களிலும் வலியுறுத்தி பாடியுள்ள தாஸர், தன் வாழ்நாள் முழுக்க எண்ணத்திலும், செயலிலும் எளிமையையும் தூய்மையையும் கடைபிடித்து மற்றவர்களுக்கும் அதையே அறிவுறுத்தியுள்ளார்.


கர்நாடக இசையில் ஆரம்ப பாடமாக சொல்லித் தரப்படும் ‘மாயாமாயவகௌள’ ராகத்தை வடிவமைத்தவர்.

கர்நாடக சங்கீதத்தை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பதை நெறிமுறைப்படுத்தியவர் நம்ம தாஸர்.அந்த நெறிமுறையே இன்றளவும் பயன்படுத்தப் படுகிறது.


முதலில் பண்டரிபுரத்திலும், பின்னர் ஹம்பியிலும் வாழ்ந்து தன் காலம் முழுவதையும் பாடல்களை பாடிய தாஸர், தன் வாழ்நாளில் லட்சக்கணக்கில் பாடல்கள் இயற்றியுள்ளார் என்று சொல்லப்பட்ட போதிலும், நமக்கு கிடைத்துள்ள்வை ஆயிரக்கணக்கிலேயே ஆகும்.

இந்த நன்னாளில் தாஸரின் பாடல்களை பாடி, கேட்டு அந்த புரந்தர விட்டலனின் அருளுக்கு பாத்திரமாவோம்.

ஜெய் ஜெய் விட்டலா. பாண்டுரங்க விட்டலா..
ஜெய் ஜெய் விட்டலா. புரந்தர விட்டலா..


**

சில பாடல்களை இங்கே ஒட்டறேன். பார்த்து மகிழுங்க. இவைகளின் அர்த்தங்கள், அடுத்தடுத்த இடுகைகளில் வரும்.

அல்லி நோடலு ராமா இல்லி நோடலு ராமா:இன்னு தய பாரதே தாஸன மேலே:நானேனு மாடிதேனோ:
****

’லம்போதர லகுமிகர’ - இந்த பாட்டை மறக்க முடியுமா யாராலும்?. இதை இயற்றிவர் நம்ம தாஸர்தான்.

புரந்தரரின் ஆக்கங்கள் ‘புரந்தர உபநிஷத்’ என்று தொகுப்பட்டது.


****

Tuesday, February 1, 2011

இரட்டை அர்த்தத்தில் பேசலாமா கூடாதா?

ஆஹா. என்னாதிது? தாஸர் பாடல்கள்னு சொல்லிட்டு - இங்கே இரட்டை அர்த்தத்தில் பேசலாமா கூடாதான்னு ஒரு இடுகை?

நாட்டாமை, தலைப்பை மாத்து!

யாருப்பா அது, பேசிட்டிருக்கம்லே. சைலன்ஸ்.. தீர்ப்பு கடைசியில். இப்ப இடுகை.

***

எல்லாத்தையும் துறக்கறதுன்னா என்ன? சமகாலத்துலே நிறைய பேர் முற்றும் துறந்தவங்களா தங்களை அறிவிச்சிக்கிட்டு செய்யுற அட்டகாசங்களை பாத்திருப்பீங்க. நோ. மூச். நாம அவங்களப் பத்தி பேசப்போறதில்லே. வழக்கம்போல் புரந்தரதாஸரைப் பத்திதான் பேசப்போறோம்.

நம்ம தாஸரும் முற்றும் துறந்தவர்தான். அவரோட சொத்து ஒரே ஒரு தம்பூரா மட்டும்தான். வீடு? நோ. வேலைக்காரர்கள்? லேது. கைகால் அமுக்க பக்தகோடிகள்? ம்ஹூம். அட இதெல்லாம் பரவாயில்லே. சாப்பாட்டுக்காக மளிகைச் சாமான்களைக்கூட சேமிச்சி வைக்காமே, தினந்தோறும் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் பொருட்களை வைத்துத்தான் அன்றைய சமையல்னா பாத்துக்கங்க.

Stop stop. உஞ்சவிருத்தின்னா என்ன?

அட இது தெரியாதா? உஞ்சவிருத்தின்னா பிக்‌ஷைதாங்க. ஒரே வித்தியாசம் என்னன்னா - தாஸர் வீடு வீடா பாட்டு பாடிக்கிட்டே போவாரு. எதையும் தாங்கன்னு கேக்கமாட்டாரு. இவர் பாடலைக் கேட்டு, அந்தந்த வீட்டிலிருந்து அவங்களா வந்து அரிசி, கோதுமை, ராகி எதாவது பிக்‌ஷை போட்டுட்டு போவாங்க. அதை எடுத்துட்டு போய் சமைச்சி சாப்பிடுவாரு.

மறுபடி Stop. மேலே சொன்னதில் அரிசி, கோதுமை தெரியும். அது என்ன ராகி?

என்னப்பா? ராகி தெரியாதா? ராகி தெரியாதா? சரி பரவாயில்லை. ராகின்னா நம்ம கேழ்வரகுதான்.

ஓகே? டவுட் க்ளியர்? மேலே போகலாமா?

விட்டலனின் பெருமை, பக்தி, வைராக்கியம், தாஸ்யம், அப்படி இப்படின்னு பல்வேறு பாவங்களோடு, ஏகப்பட்ட நீதிபோதனை பாடல்களையும் நம்ம தாஸர் பாடியுள்ளார். மக்களின் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, சம்சார சாகரம்ற மாயவலையிலிருந்து அவங்களை கரையேத்தணுமே? அதுவும் ஒரு சங்கீதக்காரருடைய கடமைதானே. அதை மிக மிக அருமையாக செய்த நம்ம தாஸர், மக்கள் என்னென்ன செய்யணும், எதையெல்லாம் செய்யக்கூடாது, என்னெல்லாம் செய்தால் விட்டலனின் பார்வை நம்மேல் படும் என்றெல்லாம் தன் நீதிபோதனை பாடல்கள் மூலமாக நமக்கு அருளியுள்ளார்.

அப்படிப்பட்ட நீதிபோதனை பாடல்களில் ஒன்றுதான் நாம் இன்று பார்க்கப் போவது.

பாடலுக்குப் போவதற்கு முன் ஒரு சிறிய ப்ரேக்.

***


சென்னை திருவல்லிக்கேணியில், புரந்தரதாஸர் பஜனைக்குழு ஒன்று உள்ளது. (எந்த பதிவு போட்டாலும், அதில் திருவல்லிக்கேணி வரலேன்னா ஏதோ ஒண்ணு மிஸ்ஸு!) பல்வேறு வருடங்களாக அவர்கள் தாஸரின் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அந்நாளில், பாட்டுப் போட்டி, கச்சேரிகள், தாஸரின் படத்தை வைத்து மாடத்தெருக்களில் ஊர்வலம் இதெல்லாம் செய்து பட்டையை கிளப்புவார்கள்.

தாஸரின் தினமாகிய புஷ்ய மாத அமாவாசையன்று காலையில் அவர் படத்தை வைத்து ஒரு கோஷ்டி உஞ்சவிருத்திக்கு புறப்படும். பாடல்களை பாடிக் கொண்டே செல்லும்போது, பக்தர்கள் தங்களால் இயன்ற அரிசி, பருப்பு, வெல்லம் இதெல்லாம் கொடுப்பார்கள். அதை வைத்து அன்றைய தினம் அனைவருக்கும் சாப்பாடு. நானும் சில தடவைகள் இந்த கோஷ்டியுடன் பாடிக் கொண்டே(?) பொருட்களை சேகரித்த காலம் ஒன்றுண்டு.

அதை விடுங்க. இன்னொண்ணு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். தாஸர் தினத்தை ஒட்டி பாட்டுப் போட்டு நடைபெறும்னு சொன்னேனில்லையா? இதுதான் முக்கியான இடம். மனதை திடப்படுத்திக்கோங்க. அதில் நானும் கலந்து கொண்டு, சோப் டப்பாவில் ஆரம்பித்து, சாப்பாட்டு டப்பா, குத்து விளக்கு வரை பரிசு பெற்றிருக்கிறேன். இருங்க இருங்க.

இதுக்கே ஜெர்க் ஆனா எப்படி? இந்த இடுகையின் கடைசியில் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கு.

இப்போ பாடல்.

***

ராகி தந்தீரா பிக்‌ஷக்கே ராகி தந்தீரா

ராகி கொண்டு வந்தீரா
பிக்‌ஷைக்கு ராகி கொண்டு வந்தீரா

யோக்யராகி போக்யராகி
பாக்யவந்தராகி நீவு (ராகி)

நல்லவராகி, (தானத்தை) கொடுப்பதில் மகிழ்ச்சியுடையவராகி
சகல சௌபாக்கியங்களையும் பெற்று நீங்கள் (ராகி)

அன்னதானவ மாடுவராகி
அன்ன சத்ரவன்னிட்டவராகி
அன்ய வார்த்தையா பிட்டவராகி
அனுதின பஜனெய மாடுவராகி (ராகி)

(தானத்தில் சிறந்த தானமாகிய) அன்ன தானத்தை செய்பவராய்,
பசியால் வாடுபவர்களுக்கு சத்திரத்தை நிறுவியவராய்,
புறம் பேசாமல் இருப்பவராய்,
தினந்தோறும் பகவானின் பெயர் சொல்லி பஜனை செய்பவராய் இருப்பீராக.. (ராகி)

மாதா பிதரனு சேவிதராகி
பாதக கார்யவ பிட்டவராகி
க்யாதியல்லி மிகிலாவதராகி
நீதி மார்கதல்லி க்யாதராகி (ராகி)

தந்தை தாயை மதித்து அவர்களை வழிபடுபவராய்,
யாருக்கும் கெடுதல் செய்யும் காரியங்களை விட்டவராய்,
நீதி நேர்மைக்கு பயந்து அதன்படி நடப்பவராக இருந்து.. (ராகி)

ஸ்ரீ ரமணன சதா ஸ்மரிசுவராகி
குருவிகே பாகோரந்தவராகி
கரெ கரெ சம்சாரா நீகுவராகி
புரந்தர விட்டலன சேவிதராகி (ராகி)

இலக்குமியின் பதியான ரமணனை எப்பொழுதும் நினைப்பவராய்,
(உபதேசம் செய்யும்) குருவின் சொற்படி நடப்பவராய்,
(உங்களுக்கு அமைந்துள்ள) குடும்ப வாழ்க்கையை பொறுப்புடன் நடத்தும் ஒரு இல்லத்தரசனாய்,
அந்த புரந்தர விட்டலனை வணங்குபவாய் இருந்து (ராகி)

***

இந்த பாடலில் ‘ராகி’ என்ற அந்த ஒரு வார்த்தையை வைத்து - பிட்ஷையும் கேட்ட அதே சமயத்தில், தாஸர் மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளதை கவனியுங்கள்.

யோக்யராகி போக்யராகி - இதில்தான் மேலே சொன்ன அந்த ‘இரட்டை அர்த்தம்’. அப்பாடா, தலைப்புக்கு வந்தாச்சு.

சரி என்ன அது இரட்டை அர்த்தம்?

வெயிட். அதையும் பாத்துடுவோம்.

யோக்யராகி -

அ. யோக்யர் + ஆகி = (நீங்க) நல்லவரா இருங்கன்னு சொல்ற அதே நேரத்துலே;
ஆ. யோக்ய + ராகி = நல்ல ராகியை பிட்ஷைக்கு போடுங்கன்னு சொல்ற மாதிரியும் இருக்கு.

அதே மாதிரி -

போக்யராகி -

அ. போக்யர் + ஆகி = (நீங்க) தானத்தை கொடுப்பதில் மகிழ்ச்சியுடைவராக இருங்கன்னு சொல்ற அதே நேரத்துலே;
ஆ. போக்ய + ராகி = (சாப்பிட்டா) மகிழ்ச்சிகொடுக்ககூடிய ராகி பிக்‌ஷைக்கு போடுங்கன்னு சொல்ற மாதிரியும் இருக்கு.

இதில் இரண்டாவது அர்த்தங்களை பாருங்க. நல்ல ராகி கேக்குற மாதிரி - மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கறாரு. நாம முதல் அர்த்தத்தையே எடுத்துக்கிட்டு ’கரையேற’ முயற்சி பண்ணுவோம்.

சரியா?


***

அடுத்து AV பகுதி.

பாம்பே ஜெயஸ்ரீயின் அருமையான ஆலாபனையுடன் ராகி தந்தீரா:விசாகா ஹரியின் சுந்தரகாண்ட கதையின் நடுவே இந்த பாடல்:அடுத்து நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஒலித்துண்டு. பயந்து ஓடாமே கேளுங்க. அந்த புரந்தரவிட்டலன் உங்களுக்கு மனவுறுதியை தரட்டும்.
ஒலித்துண்டு சரியா ஓடலேன்னா, இங்கே போயும் கேக்கலாம்.

***

நாரதரின் மறுஅவதாரமாக கருதப்படும் புரந்தரதாஸரின் ஆராதனை தினம் நாளை மறுநாள் (2/2) அன்று வருகிறது. நாளை இன்னொரு சிறப்பு பதிவும் இங்கு வரும்.

அதுவரை -

ஜெய ஜெய விட்டல ! பாண்டுரங்க விட்டல !!
ஜெய ஜெய விட்டல ! புரந்தர விட்டல !!

**

பிகு: இப்போ (முதல்லே சொல்லாமல் விட்ட) தீர்ப்பு.

இரட்டை அர்த்தத்தில் பேசலாம்.
பேசலாம். பேசலாம்.

ஆனா, ரெண்டு அர்த்தமும்
நல்ல அர்த்தமா இருக்கணும்.

இதுதான் தீர்ப்பு.

****