Tuesday, March 6, 2012

எப்போதும் என் இதயத்திலேயே வசிப்பாயாக.

இந்த உடம்பே ஆலயம்; என் இதயமே உன் கோயில்; இங்கேயே இருந்துவிடு. ஆரத்தி எடுத்து, பாட்டு பாடி, உன்னை வணங்கியவாறே இருப்பேன். என்னை விட்டு போய்விடாதே. என்னை காப்பாற்று.


இதைத்தான் ஸ்ரீ விஜயதாசர் இந்த பாடலில் பாடுகிறார்.



***

சதா என்ன ஹ்ருதயத்தல்லி
வாச மாடோ ஸ்ரீ ஹரி (சதா)

எப்போதும் என் இதயத்திலேயே
வசிப்பாயாக, ஸ்ரீ ஹரியே (சதா)

நாதமூர்த்தி நின்ன பாத
மோததிந்தா பஜிசுவே (சதா)

நாத வடிவானவனே, உன் பாதங்களை
மகிழ்ச்சியுடன் (உணர்ச்சி வசப்பட்டு) வணங்குவேன் (சதா)

ஞானவெம்போ நவரத்னத மண்டபத மத்யதல்லி
கானலோலன குள்ளிரிசி த்யானதிந்தா பஜிசுவே (சதா)

அறிவு என்னும் நவரத்தின மண்டபத்தின் நடுவே
பாடல்களின் ரசிகனே உன்னை உள்ளிறுத்தி, த்யானம் செய்து, வணங்குவேன் (சதா)

பக்தி ரசவெம்போ முத்து மாணிக்யத ஹரிவாணதி
முக்தனாக பேகு எந்து முத்தினாரதி எத்துவே (சதா)

முத்து மற்றும் மாணிக்கத்தால் ஆன,
பக்தி என்னும் இந்த கூடையால்,
முக்தி வேண்டும் என்று வேண்டி ஆரத்தி எடுப்பேன் (சதா)

நின்ன நானு பிடுவேனல்லா என்ன நீனு பிடது சல்லா
பன்னக சயன விஜயவிட்டல நின்ன பகுதர கேளோ சொல்லா (சதா)

உன்னை நான் விடப்போவதில்லை; என்னை நீயும் விட்டுவிடாதே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் விஜயவிட்டலனே,
உன் பக்தர்களின் குரலை கேட்பாயாக (சதா)

***

பீமண்ணர் மிக அற்புதமாக பாடியுள்ள இந்த பாடல்.


***

இதே பாடல் மற்றொரு ராகத்தில்

.

***

Tuesday, February 28, 2012

பாரய்யா வேங்கடரமணா...



புரந்தரதாசருக்கு திருப்பதி வெங்கடரமணன் மேல் அபார பிரியம். அவரைக் குறித்து பற்பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அனைத்துமே புகழ் பெற்ற பாடல்கள்தான். அவற்றில் ஒன்றுதான் இன்று பார்க்கப் போவது. இதுவும் ஒரு புகழ்பெற்ற பாடல்தான்.


ஸ்ரீமன்நாராயணனின் பத்து அவதாரங்களையும் சொல்லி, அவன் சிறப்புகளை பாடி, அவனை எப்படி அழைக்கிறார் என்று இந்த பாடலில் பார்ப்போம்.


பாரய்யா வேங்கடரமணா பாக்யதா நிதியே
பாரோ விஸ்வம்பரனே பாரோ
பக்தர சலஹுவனே பாரோ (பாரய்யா)

அளவில்லாத செல்வத்தை வேண்டியவருக்கு
வாரி வழங்கும் வேங்கடரமணனே, நீ வாராய்.
உலகத்தையே ஆடை/அணிகலனாக அணிந்தவனே,
பக்தர்களை கைவிடாமல் காப்பவனே, நீ வாராய் (பாரய்யா)

வேத கோசரனே பாரோ ஆதி கஷ்யபனே பாரோ
மேதினி சுரரொடெயனே பாரோ
பிரஹ்லாதன காய்தவனே பாரோ (பாரய்யா)

வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே,
முதன்முதலில் தோன்றிய கூர்மமே,
வராகனாய் உலகத்தை மீட்டவனே,
பிரகலாதனை காத்த நரசிம்மனே நீ வாராய் (பாரய்யா)

வாமன பார்கவனே பாரோ ராம கிருஷ்ணனே பாரோ
பிரேமதிம் பௌத்தனே பாரோ சுவாமி கல்கி நீ பாரோ (பாரய்யா)

வாமனனே, பார்கவனே, ராம, கிருஷ்ணனே,
அன்பே உருவான பௌத்தனே, கல்கியே நீ வாராய் (பாரய்யா)

குரு மத்வபதி நீ பாரோ வரத கேசவனே பாரோ
பரமாத்மா நீ பாரோ புரந்தரவிட்டலனே நீ பாரோ (பாரய்யா)

மத்வபதியான ஸ்ரீ மத்வரே, வரதராஜனே,
பரமாத்மனே, ஸ்ரீ புரந்தர விட்டலனே, நீ வாராய் (பாரய்யா)

*** மிகவும் அழகான இந்த பாடலை கேட்க:

http://www.muzigle.com/track/baarayya-venkataramana

***

அதே பாடல் முழுவதுமாக இல்லை, ஆனாலும் இவர் பாடும்போது கேட்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.

***

பாரய்யா வேங்கடரமணா!

***

Saturday, February 25, 2012

தேனீயை போன்ற வாழ்க்கை என்னுடையது.



***

தோழனாக, தாயாக, குழந்தையாக இன்னும் பலவாறெல்லாம் தன்னை எண்ணி பாடியிருக்கும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த பாடலில், தன்னை ஒரு தேனீ'யாக நினைத்து பாடியிருக்கிறார்.

தேனுக்காக எப்பொழுதும் மலர்களையே சுற்றி வரும் தேனீயைப் போல, இவரும் அந்த புரந்தரவிட்டலனின் பாதமலர்களையே சுற்றி வருவதாக கற்பனை செய்து பாடுகிறார்.

இதோ பாடல்.

***

மதுகர விருத்தி என்னது -
அது பலு சன்னது
பதுமனாபன பாத - பதும மதுபவெம்ப (மதுகர)

தேனீயைப் போன்ற வாழ்க்கை என்னுடையது
அது (வாழ்க்கை) மிக அருமையானது
பத்மனாபனின் சரணத்தை - தாமரையாக பாவித்து
அதை சுற்றி வரும் (மதுகர)

காலிகெ கெஜ்ஜெ கட்டி நீல வர்ணன குண
ஆலாபிஸுத்த பலு ஒலக மாடுவந்த (மதுகர)

கால்களில் கொலுசு அணிந்து - நீலவண்ணனின் குணத்தை
புகழ்ந்து பாடியவாறே திரிந்தவாறு இருக்கும் (மதுகர)

ரங்கனாதன குண ஹிங்கதெ பாடுத்த
சிருங்கார நோடுத்த கண்களானந்த வெம்ப (மதுகர)

ரங்கனாதனின் குணங்களை மறைக்காமல் பாடியவாறு
அவன் அழகை என் கண்களால் ரசித்தவாறே இருக்கும் (மதுகர)

இந்திராபதி புரந்தர விட்டலனல்லி செந்தத
பக்தியிந்தானந்தவ படுவந்த (மதுகர)

இலக்குமியின் கணவனாகிய புரந்தர விட்டலனிடத்தில்
ஆழமான பக்தி வைத்து
அதனால் ஆனந்தமாய் பாடியவாறு இருக்கும் (மதுகர)

***

இந்த பாடலை அருமையாக பாடும் வித்யாபூஷணர்.



புரந்தரதாஸரைப் பற்றிய கன்னட திரைப்படம் - நவகோடி நாராயணா படத்தில் வந்த இந்த பாடல்.

***

Friday, February 10, 2012

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா...



இன்றைய பாட்டின் முன்னுரை - திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் தொடர் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்'லிருந்து எடுக்கப்பட்டது.


பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.



ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!



எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது… உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!


***

நரஜன்ம பந்தாக நாலிகே இருவாக
கிருஷ்ணா என பாரதே

கிருஷ்ணா எந்தரே கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

மனிதப் பிறவி வாய்த்திருக்கும்போது,
நாக்கும் (பேச்சும்) இருக்கும்போது
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

கிருஷ்ணா என்று சொன்னால்,
அனைத்து கஷ்டங்களும் போய்விடுமே,
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

ஸ்நான பான ஜப தபகள மாடுத்தா
கிருஷ்ணா என பாரதே

ஷால்யான்ன ஷடுரச திந்து த்ருப்தனாகி
கிருஷ்ணா என பாரதே

கந்தன்ன பிகி பிகிதப்பி முத்தாடுதா
கிருஷ்ணா என பாரதே

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

குளிக்கும்போதும், குடிக்கும்போதும்,
தியானங்கள் செய்யும்போதும்

அறுசுவைகளுடன் செய்த விருந்தினை உண்டு
திருப்தியாக இருக்கும்போதும்

உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்ளும்போதும்

மனதுக்கு பிரியமானவளுடன் சிரித்துப் பேசும்போதும்
கிருஷ்ணா என சொல்லக்கூடாதா?

பரிஹாஸ்யத மாத ஆடுத லொம்மே
கிருஷ்ணா என பாரதே

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து
கிருஷ்ணா என பாரதே

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ
கிருஷ்ணா என பாரதே

கருடகமன நம்ம புரந்தர விட்டலன
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

நகைச்சுவையாக பேசும்போதும்

தினப்படி வேளைகளில் இன்னொரு வேலையாகவும்

துஷ்ட ராசிகள் தூர விலகிப் போகும்படியான

கருட வாகனனான நம் புரந்தர விட்டலனை
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

****

கேட்டீங்கல்லே? சொல்லுங்க. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா..

***

இப்போ ஸ்ரீ வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.

***

Saturday, February 4, 2012

ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவும் தெரியாதுப்பா!

கருணிசோ ரங்கா கருணிசோ
 
மிக மிக அழகான பாடல். பதிவைப் பார்க்க கண்ணன் பாடல்களுக்கு செல்லவும். சுட்டி இதோ.  
 
 
 
 
 

Monday, January 23, 2012

குருவே பாராட்டிய சிஷ்யர் புரந்தர தாசர்.

இன்று ஸ்ரீ புரந்தரதாசரின் ஆராதனை தினம். (1/23/2012).


புரந்தர தாசர்

அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அதைப் பற்றிய ஒரு அருமையான காணொளி ஏற்கனவே இந்த பதிவுகளில் பார்த்தோம். நீங்களும் ஒரு தடவை பார்த்துடுங்க.



***

விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும், திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும், மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர், புரந்தர தாசரின் குருவாவார். அப்பேற்பட்ட அந்த குரு, தன் சிஷ்யரை பாராட்டி ஒரு பாடலே பாடியிருக்கிறார் என்றால் அது எப்பேற்பட்ட பெருமைக்குரிய விஷயம்? அவர்கள் இருவரையும் வணங்கி, அந்த சிறப்புமிக்க பாடலை இங்கு பார்ப்போம்.

மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு 'புரந்தரோபநிஷத்' என்று பெயரிட்டார் ஸ்ரீ வியாசராஜர்.
ஸ்ரீ வியாசராஜர்

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம்: 1480 to 1564 AD

ஸ்ரீ வியாசராயரின் காலம்: 1460 to 1539 AD

***

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா
வாசுதேவ கிருஷ்ணன சூசி பூஜிசுவ (தாசரெந்தரெ)

தாசரென்றால் அது புரந்தரதாசர்தான்
வாசுதேவ கிருஷ்ணனை வேண்டி பூஜை செய்யும்

க்ராஸகில்லதே போகி பரர மனெகள பொக்கு
தாசனெந்து துளசி மாலே தரிசி
பேசரில்லதே அவர காடி பேடி பளலிசுத
காசு கடிசுவ புருஷ ஹரிதாஸனே? (தாசரெந்தரெ)

பிக்ஷை எடுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று
தாசர் என்று சொல்லி துளசி மாலைகள் அணிந்து
காசு மற்றும் பொருட்களை பிக்ஷை கேட்டு
அவர்களை துன்புறுத்தும் தாசன் ஹரிதாசனா? (இல்லை)

யாயிவாரவ மாடி விப்ரரிகே ம்ரிஷ்டான்ன
ப்ரியதலி தாநொந்து கொடத லோபி
மாயா சம்சாரதல்லி மமதே ஹெச்சாகித்து
காயனவ மாடலவ ஹரிதாசனே? (தாசரெந்தரெ)


லாபம் தரும் வியாபாரத்தை செய்துகொண்டு,
தேவைப்படுவர்களுக்கு அன்னதானம் செய்யாமல்
உதவி செய்யாத கஞ்சன் சம்சார சாகரத்தில் மதி மயங்கி
(இறைவனைக் குறித்து) பாடல்கள் பாடாதவன் ஹரிதாசனா? (இல்லை)

நீதியெல்லவனரிது நிகமவேத்யன நித்ய
வாதசுதநல்லிஹன வர்ணிசுதலி
கீதா நர்த்தனதிந்தா கிருஷ்னன பூஜிசுவ
பூதாத்ம புரந்தர தாசரிவய்யா (தாசரெந்தரெ)

அனைத்து நீதிகளையும் அறிந்து வேதங்களை காப்பாற்றுபவனை (ஸ்ரீ கிருஷ்ணனை),
வாயு புத்திரனின் இதயகமலத்தில் இருப்பவனை
வர்ணித்தபடி ஆடல் பாடல்களுடன்
பூஜிக்கும் தாசரே புரந்தர தாசர் ஆவார்

*** ***

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா

***

Thursday, January 19, 2012

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும்?



இந்த உலகத்தில் அனைத்தும் ஸ்ரீமன் நாராயணனே. அவனே முழுமுதற் கடவுள். அவனின்றி ஒரு பொருளும் அசையாது. அனைவரையும் காப்பவன் அவனே. இப்படி அடிக்கடி 'அனைத்தும்', 'அனைத்தும்'ன்னு சொல்றோமே, அந்த 'அனைத்தும்'னா என்ன? அதில் என்னென்ன இருக்கு? ஒரு பட்டியல் போடுவோமா? வேண்டாம். அதுக்கு பதிலா இந்த பாட்டை பார்ப்போம். அந்த பட்டியல் இங்கே இருக்கு.


சகல கிரஹ பல நீனே - இதுதான் அந்த பாடல். மிகவும் புகழ்பெற்ற பாடல். இந்த பாட்டு பாடல் பெற்ற தலம் எது தெரியுமா? மதுரை அருகே உள்ள தான்தோன்றி மலைதான். ஸ்ரீ புரந்தரதாசர், இந்த மலையில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ வேங்கடரமண சுவாமியைக் குறித்து பாடியதே இந்த பாடல்.


***

சகல கிரஹ பல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வ ரக்ஷா (சகல)

அனைத்து கிரகங்களின் பலனையும் கொடுப்பவனே
தாமரை போன்ற கண்களை கொண்டவனே
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே
அகில உலகத்தையும் காப்பவனே (சகல)


ரவிச்சந்திர புத நீனே ராகு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவா ராத்ரியு நீனே நவ விதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)

சூரியன், சந்திரன், புதன், ராகு கேது ஆகிய அனைத்தும் நீயே
சுக்கிரன், வியாழன், சனி, செவ்வாயும் நீயே
பகல், இரவும் நீயே, ஒன்பது விதானங்களும்++ நீயே
மறுபிறப்பென்னும் நோயை குணப்படுத்தும் மருத்துவனும் நீயே (சகல)


பக்ஷ மாசவு நீனே பர்வ காலவு நீனே
நக்ஷத்திர யோக திதி கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்தனே
பக்ஷிவாஹன லோக ரக்ஷிபனு நீனே (சகல) 

பக்ஷ மாதமும்+++ நீயே பர்வகாலங்களும்## நீயே
நட்சத்திரம், யோகம், திதி, கரணங்கள் எல்லாமும் நீயே
திரௌபதியின் மானத்தை காத்தவனே கருட வாகனனே,
இந்த உலகத்தை காப்பவனும் நீயே (சகல)


ருது வத்சரவு நீனே விரத தினங்களு நீனே
க்ரது ஹோம யக்ன சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகத மஹா மஹிமே நீனே (சகல)

ருது வத்சரங்களும் நீயே, விரத நாட்களும் நீயே
ஹோம யக்ஞங்கள் நீயே
மோட்சமடைந்தால் அடைவதும் உன்னையே
என்னுடைய பிரியமான புரந்தர விட்டலனே
வேதங்களுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மனும் நீயே

***

இப்போ சில Legends:

++ ஒன்பது விதானங்கள் எவை? சப்த சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், நிருக்த சாஸ்திரம், கல்ப சாஸ்திரம், சிக்ஷா சாஸ்திரம், சாந்த் சாஸ்திரம், மீமாம்சம், ந்யாயம், வியாகரணம் - இவையே ஆகும்.

+++பக்ஷ மாதம் = பாத்ரபத கிருஷ்ண பக்ஷம். மூதாதையர்களுக்கு உகந்த காலம். அந்த பதினைந்து நாட்களும் (தகுதி உள்ளவர்கள்) தர்ப்பணம், திதி செய்ய வேண்டும் என்பது பாடம்.


##பர்வ காலங்கள் எவை? சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் நாட்கள் பர்வ காலங்கள் எனப்படும். அன்றும் (தகுதி உள்ளவர்கள்) தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும்.


***


இந்த பாட்டினால் தெரிவது என்ன? எந்த கிரகத்தை வணங்கினாலும், எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகி இருப்பவன் 'அவனே'. அதனால், அனைத்தையும் கடைசியில் அவனுக்கே 'அர்ப்பணம்' செய்து, அவனை சரணடைந்தால், மறுபிறப்பு கிடையாது - என்று ஸ்ரீ புரந்தரதாசரே சொல்லும்போது, அதை நாம் மறுக்கமுடியுமா?

*** ***


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

***

Sunday, January 15, 2012

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

கடவுளர்களுக்கு 'காலை வேளை' என்று கருதப்படும் 'உத்தராயண புண்யகாலம்' (ஆறு மாத காலம்) துவங்கிவிட்டது. சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கும் இந்த நாள் மிக புனிதமான நாளாகும்.


பகீரதன் தன் முன்னோர்களுக்கு கங்கைக் கரையில் 'தர்ப்பணம்' செய்தது இந்நாளே. அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், இந்த நாளுக்காகவே காத்திருந்து தன் உயிரை விட்டார். நாமும் இந்த நன்னாளில் தாசர் பாடல்களில் 'சீசன்-2'வை, அந்த 'ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை' வணங்கி துவக்குவோம்.


பிள்ளையாரை பிடிக்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? தன் செல்ல நண்பனாய் அவரை நினைத்து அவரை வணங்குபவர்களே அதிகம். சரிதானே? அவரைப் போலவே அவர் பாடல்களும் மிக இனிமையானவை. உடனே 'விநாயகனே வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞான முதல்வனே' பாட்டு நினைவுக்கு வருதா?


கணபதியை குறித்து தாசர்கள் நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றனர். 'கஜவதன பேடுவே' எனத் தொடங்கும் இன்றைய பாடலில் நாம் தெரிந்துகொள்ளும் சிறப்புச் செய்தி என்னன்னு பார்ப்போம்.


பாசக்கயிறு யாரிடம் இருக்கும்? இதென்ன கேள்வி? எமதர்மனிடம்தான்னு டக்குன்னு சொல்லிடுவீங்க. ஆனா புரந்தரதாசர் என்ன சொல்றாரு? பிள்ளையாரிடமும் பாசக்கயிறு இருக்காம். 'பாச', 'அங்குச' இந்த இரண்டையும் வைத்திருப்பவனே.


அங்குசம் தெரியும். மிகப்பெரிய யானையையும் அடக்கிடும் சிறிய ஆயுதம் - அங்குசம். நம் மனமென்னும் யானையை அடக்கி, சுயகட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்த அங்குசத்தை ஏந்தியிருக்கிறார் என்று சொல்கிறார் தாசர்.


சரி. பாசக்கயிறு? இறப்புக்கு அப்பாற்பட்ட விநாயகனை வணங்குபவர்களுக்கு மரணம் குறித்த பயம் அகற்றுபவன் என்பதைக் காட்டவே பாசக்கயிறு வைத்திருக்கிறார் என்று தாசர் விளக்குகிறார்.


கஜானனின் பெருமைகளை சொல்லி, அவன் தாள் வணங்கி தாசர் கேட்பது என்னன்னா, சர்வோத்தமனான அந்த ஸ்ரீமன் நாராயணனை எப்பொழுதும் நினைத்திருக்க செய்யுமாறு அருள் செய் என்பதேயாகும். வழக்கம்போல் மிக எளிதான சொற்கள், ஆழ்ந்த கருத்துகள். பாடல், அதன் பொருள், தொடர்ந்து சில காணொளிகள் பாருங்க. கணபதி பப்பா மோரியா!


***


கஜவதன பெடுவே கௌரி தனய
த்ரிஜக வந்திதனே சுஜணர பொரவென (கஜவதன)

யானை முகத்தனே கௌரியின் புதல்வனே
 மூவுலகத்திலும் அனைவராலும் வணங்கப்படுபவனே
நல்லவர்களை காப்பவனே (கஜவதன)

பாசாங்குசதர பரம பவித்ர
மூஷிகவாகன முனிஜன பிரேம (கஜவதன)

பாசக்கயிறையும், அங்குசத்தையும் ஏந்தியவனே, பரம பவித்ரனே
மூஞ்சூறு வாகனனே, முனிவர்களுக்கு பிரியமானவனே (கஜவதன)


மோததி நின்னய பாதவ தோரோ
சாது வந்திதனே ஆதரதிந்தலி (கஜவதன)


சந்தோஷத்துடன் (கருணையுடன்) உன் பாதங்களைக் காட்டு
மிகவும் பணிவுடன் சாதுக்களால் வணங்கப்படுபவனே (கஜவதன)


சரசிஜநாப ஸ்ரீ புரந்தரவிட்டலன
நிருத நெனேயுவந்தே தய மாடோ (கஜவதன)

நாபிக் கமலத்தில் தாமரைக்கொடியை கொண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனை எப்போதும் (நான்) நினைக்குமாறு தயை காட்டுவாய் (கஜவதன)

**** ****

இந்த வாண்டூஸ் பாடுவதையும் கேளுங்க. அருமையா இருக்கும். ****