Thursday, February 24, 2011

பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வருவாய்!



சென்ற இடுகையில் பார்த்த பாட்டு - ஸ்ரீ ஹரியைக் கண்ட ஆனந்தத்தில் - புரந்தரதாஸர் பாடிய ‘தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ’.

ஸ்ரீமன் நாராயணன் தனியா வருவாரா? கண்டிப்பா வரமாட்டார்.

கூடவே யாரு வருவா?

அவரைப் பற்றிதான் இன்று பார்க்கப்போகும் பாடல்.

***

** கர்நாடக சங்கீதம் அறிமுகம் உள்ள அனைவருக்கும் மிகவும் தெரிந்த பாடல்.

** புதுமனை புகுவிழாவில் கண்டிப்பாக பாடும் பாடல்.

** திருமண நிகழ்ச்சியில் தாலி கட்டியவுடன், நாதஸவரம் வாசிப்பவர் வாசிக்கும் பாடல்.

** வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பெண்கள் தவறாமல் பாடும் பாடல்.

** வரலட்சுமி பூஜையன்றும் பாடுவார்கள்.

** எனக்கு மிகவும் பிடித்த பாடல். (சிறப்பு காரணம் இன்னொண்ணு இருக்கு. அது என்னன்னு பதிவில் சொல்கிறேன்!).

மேலே சொன்ன சிறப்புகளெல்லாம் ஒரே பாடலைப் பற்றிதான். அது என்ன பாடல்?

இந்நேரம் டக்குன்னு பிடிச்சிருப்பீங்களே.

அதுதான் ‘பாக்யதா லட்சுமி பாரம்மா’.

எளிமை எளிமை எளிமை
இனிமை இனிமை இனிமை

அதற்கு இன்னொரு அற்புதமான உதாரணம் இந்தப் பாடல்.

***


மஹாலட்சுமியின் சிறப்புகளை விளக்கும் வேத மந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் சாரத்தினை அப்படியே இந்தப் பாட்டில் தந்திருக்கிறார் புரந்தரதாஸர்.

சூரியசந்திரர்களைப் போல் ஒளியுடைய,
குதிரைகளைப் பூட்டிய தேரில் பவனி வரும்,
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மனைவியான

ஸ்ரீ லட்சுமி தேவி

தன் பக்தர்களின் குறைகளை போக்கும் இளகிய மனமுடையவள்,
சகல சௌபாக்கியங்களை கொடுக்கக்கூடியவள்,
தன்னை வணங்குபவர்கள் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்கும்படி செய்பவள்

என்று ஸ்ரீ சூக்தம் ஸ்ரீ லட்சுமி தேவியின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது.

அதையே நம்ம தாஸர் எளிய கன்னடத்தில் நமக்கு புரியும்படி எடுத்துரைக்கிறார்.

இப்போ பாடல்.

***

பாக்யதா லட்சுமி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யதா லட்சுமி பாரம்மா


பாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா
என் தாயே, சகல சௌபாக்கியத்தை கொடுக்கும் லட்சுமியே வாம்மா

ஹெஜ்ஜெ கால்களா த்வனிய மாடுதா
ஹெஜ்ஜெய மேல் ஒந்து ஹெஜ்ஜெய நிக்குதா
சஜ்ஜன சாது பூஜெயெ வேளெகே
மஜ்ஜிகே ஒளகின பெண்ணேயந்தே (பாக்யதா)


கொலுசு அணிந்த கால்களால் சத்தத்தை செய்தவாறு
அடி மேல் அடி வைத்து
நன்கு படித்தவர்களின் பூஜை வேளையில்
தயிரிலிருந்து (கடைந்தால்) வரும் வெண்ணையைப் போல் (பாக்யதா)

கனக வ்ருஷ்டியா கரெயுத பாரே
மன காமனெயா சித்தியு தோரே
தினகர கோடி தேஜதி ஹொளெயுத
ஜனகராயன குமாரி பேக (பாக்யதா)


தங்க மழை பெய்தவாறே வாராய்
என் விருப்பங்களை நிறைவேற்றுவாய்
கோடி சூரியர்களின் ஒளியை (போல தேஜஸ்) கொண்ட
ஜனகனின் மகளே (சீதையே) சீக்கிரம் (பாக்யதா)

அத்தித்தகலதே பக்தர மனெயொளு
நித்ய மஹோத்ஸவ நித்ய சுமங்கள
சத்யவ தோருவ சாது சஜ்ஜனர
சித்ததி ஹொளெயுவ புத்தளி பொம்பே (பாக்யதா)


அங்கிங்கு போகாமல் (நேராக) பக்தர்களின் வீட்டிற்கு (நீ வந்தால்)
(அங்கே) எப்போதும் திருவிழா; தினமும் சந்தோஷம்
(வேத சாஸ்திரங்களின்) உண்மையை எடுத்துரைக்கும் பக்திமான்களின்
மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் லட்சுமி (பாக்யதா)

சங்க்யே இல்லதா பாக்யவ கொட்டு
கங்கண கையா திருகுத பாரே
குங்குமாங்கிதே பங்கஜ லோசன
வேங்கடரமணன பட்டத ராணி (பாக்யதா)


கணக்கேயில்லாத பாக்கியத்தைக் கொடுக்கும்
வளையல்கள் கூடிய (உன்) வலது கையை காட்டியவாறே வாராய்
குங்குமம் இட்ட நெற்றியோடு, தாமரை (போல்) விழிகளை கொண்டவளே,
வேங்கடரமணனின் பட்டத்து ராணியே (பாக்யதா)

சக்கரே துப்பவ காலுவே ஹரிசி
சுக்ரவாரதா பூஜய வேளகே
அக்கரெயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணி (பாக்யதா)


சக்கரையும், நெய்யும் மழையாய் பெய்ய
வெள்ளிக்கிழமை பூஜை வேளையில்
கருணையே வடிவான ரங்கனின்,
புரந்தர விட்டலனின் ராணியே (பாக்யதா)


*****


இந்தப் பாடலை நம்ம பீமண்ணவர் எப்படி அனாயாசமாக பாடுகிறார்னு கேட்டு ரசியுங்கள்.




மேலே பாடியவர் ஒரு விதம்னா, நம்ம எம்.எஸ்.அம்மா மற்றொரு விதமா பாடுறாங்க.
(இந்த ராகத்தில்தான் எங்க வீட்டிலேயெல்லாம் பாடுவார்கள்).




**இந்தப் பாடல் பிடிக்க இன்னொரு சிறப்புக் காரணம், மேலே பாட்டில் சொன்ன மாதிரி

சுக்ர வாரதா பூஜெய வேளகே

வரலக்‌ஷ்மி பூஜையன்று வெள்ளிக்கிழமை காலை பூஜை நேரத்தில் - சஹானா பிறந்தார்.

*****

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாக்யத சஹானா பாரம்மா - சத்யனின் மனைகே
பாக்யத சஹானா பாரம்மா :)

இரண்டு பாடல் கேட்பும் அருமை! பீம்சென் ஜோஷி கலை நயம்! எம்.எஸ் அம்மா வீட்டு நயம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அதே மெட்டில், அன்னையின் பிள்ளையாய் தமிழாக்கி, அவளைக் கூப்பிட முனைகிறேன்!

பாக்ய லட்சுமி வா அம்மா - அம்மம்மா நீசெள
பாக்ய லட்சுமி வா அம்மா

கால்களில் கலகல கிங்கிணி ஆர்ப்ப
குறுகுறு என்றே பொடிநடை சேர்ப்ப
தாசர் உன் அடியார் பூசையின் வேளையில்
தயிரினில் தளும்பும் வெண்ணையைப் போலே
(பாக்ய லட்சுமி வா அம்மா)

பொன்மழை மாரிகள் பெய்திட வாராய்
என்மன ஆசைகள் எய்திட வாராய்
செங்கதிர் கோடி முகந்தனில் மின்ன
சனகனின் கண்ணே சீதையே வாராய்
(பாக்ய லட்சுமி வா அம்மா)

அங்கிங்(கு) எங்கும் ஓடா திங்கே
அன்பர்கள் மனையில் என்றுமே தங்கேன்
அருமறை ஓதிடும் அடியவர் உள்ளம்
அகலாது உறையும் அன்னையுன் இல்லம்
(பாக்ய லட்சுமி வா அம்மா)

நீங்குதல் இல்லாச் செல்வங்கள் தாராய்
நிறையவே வளையல் குலுங்கிட வாராய்
குங்குமத் திலகம் கண்களில் கமலம்
வேங்கட வீட்டின் விளக்கே தாயே
(பாக்ய லட்சுமி வா அம்மா)

சீனியும் நெய்யும் இனிப்பைச் சேர்க்க
வெள்ளிக் கிழமை மங்கள வேளை
அருளின் உருவே அரங்கன் திருவே
புரந்தர விட்டலன் புகழும்-என் அரசே
(பாக்ய லட்சுமி வா அம்மா)

சின்னப் பையன் said...

வாங்க KRS, லலிதாம்மா வர்றதுக்குள்ள நீங்க வந்து தமிழிட்டீங்க! அருமை! நேரடி தமிழ்ப் பாட்டு போலவே இருக்கு. சூப்பர்.

Lalitha Mittal said...

late due to guests[athithi devo bhava]!
vaah,krs,vaah!yr thamizh verses are too good!
actually i know little bit of spoken kannada
as i lived in bg 32yrs back.but you appear to be too good in this!ammaavai ambel solla vachchitte!

குமரன் (Kumaran) said...

சஹானாவிற்கு என் வாழ்த்துகள் ச்சின்னப்பையன்!

வடக்கு, தெற்கு இரண்டு வழிமுறைகளிலும் இனிமையான பாட்டு இது. அடிக்கடி கேட்டதாலோ என்னவோ அம்மாவின் மெட்டு தான் மனத்தில் நிற்கிறது.

இரவி, பாக்யத்தின் லக்ஷ்மி வா அம்மா என்று எழுதினால் இன்னும் பொருத்தமாக வருமோ? பாக்யத லக்ஷ்மி என்னும் போது வரும் சில மாத்திரைகள் பாக்ய லட்சுமி என்னும் போது குறைவது போல் இருக்கிறது! (நக்கீரர் எட்டிப்பார்க்கிறார். கண்டுகொள்ளாதீர்கள். :-) )

Mala Krishnan said...

சௌபாக்ய என்றும் பாடினால் அழகுதான்.