Friday, November 18, 2016

என்ன சொல்லிப் பாடுவேன்?

என்ன சொல்லிப் பாடுவேன்?

கனகதாசருக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘முண்டிக தாசரு (Mundige)'. இவரது பாடல்களை சாதாரணமாகப் படித்தால் ஒரு பொருளும், சொற்களில் இருக்கும் குறியீடுகளைப் பிரித்துப் படித்தால் பல்வேறு அர்த்தங்களும் தெரியும். அதற்கே இவருக்கு அப்படி பெயர்.

இன்றைய பாடல் அப்படியில்லாமல், நேரடியாக, எளிமையாக பொருள் கொள்ளக்கூடிய பாடல். தன்னை தாழ்த்திக் கொண்டு, இறைவனின் பல்வேறு குணங்களை பாடும் பாடல்.

***

ஏனெந்து கொண்டாடி ஸ்துதிசலோ தேவா
நானேனு பல்லே நிம்ம மகிமே மாதவா (ஏனெந்து)

என்னவென்று சொல்லி உன்னைப் பாடுவேன் தேவா
எனக்கென்ன தெரியும் உன் மகிமையைப் பற்றி மாதவா (ஏனெந்து)

ஹரி முகுந்தனு நீனு நரஜன்ம ஹுளு நானு
பரமாத்மா நீனு பாமரனு நானு
கருடகமனனு நீனு மருளு பாபியு நானு
பரஞ்சோதி நீனு திருகனு நானு (ஏனெந்து)

ஹரி & முகுந்தன் நீ; மனித ஜென்மம் எடுத்து (சம்சாரத்தில் மூழ்கி) புழுவாய் இருப்பவன் நான்
அனைவருக்கும் கடவுள் நீ; எதுவுமே தெரியாதவன் நான்
கருட வாகனத்தில் பறப்பவன் நீ; பாவம் மட்டுமே செய்பவன் நான்
ஒளி ரூபமாய் இருப்பவன் நீ; சும்மா சுற்றித் திரிபவன் நான் (ஏனெந்து)

வாரிதிசயனனாத காருண்யபதி நீனு
கோரதிந்திஹ காமி க்ரோதி நானு
ஈரேளு புவனதொளு இருவ மூர்த்தி நீனு
தூரி நின்னனு பய்யுவ துஷ்ட நானு (ஏனெந்து)

பாற்கடலில் படுத்திருக்கும், மிக்க கருணை மிக்கவன் நீ
காமம் குரோதம் இவற்றில் மூழ்கியிருப்பவன் நான்
ஈரேழு உலகத்திலும் இருப்பவன் நீ
எப்பொழுதும் உன்னைத் திட்டிக் கொண்டே இருப்பவன் நான் (ஏனெந்து)

அணுரேணு த்ருணகளல்லி பரிபூர்ண நீனு
க்‌ஷண க்‌ஷணக்கே அணுகுணத கர்மி நீனு
வாணியரசன பெத்த வைகுண்டபதி நீனு
தனு நித்யவல்லத கொம்பே நானு (ஏனெந்து)

ஒவ்வொரு அணு, துகள்களிலும் பரிபூர்ணனாக இருப்பவன் நீ
ஒவ்வொரு நொடியிலும் குணங்களை மாற்றுபவன் நான்
சரஸ்வதியின் கணவரான பிரம்மனின் தந்தை, வைகுண்டத்தில் வசிப்பவன் நீ
நிலையில்லாத இந்த சரீரத்தைக் கொண்டவன் நான் (ஏனெந்து)

கம்பதலி பந்த ஆனந்தமூர்த்தி நீனு
நம்பிகேயில்லத ப்ரபஞ்சகனு நானு
அம்பரீசனிகே ஒலித அக்ரூரசக நீனு
டம்பகர்மியு நானு நிர்ஜிதனு நீனு (ஏனெந்து)

தூணிலிருந்து வந்த ஆனந்தமே உருவானவன் நீ
எதன்/யார் மீதும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் மனிதன் நான்
அம்பரீசனை காப்பாற்றிய - அக்ரூரரின் நண்பன் நீ
தற்பெருமை கொண்டவன் நான் - உலகத்தை வென்றவன் நீ (ஏனெந்து)

திருப்பதிய வாசா வெங்கடேச நீனு
ஸ்மரிசி நின்னய நாம பதுகுவவ நானு
பிரிதுள்ளவ நீனு மொரெஹொக்கவ நானு
ஸ்ரீகாகிநெலெ ஆதிகேசவனு நீனு (ஏனெந்து)

திருப்பதியில் இருக்கும் வெங்கடேன் நீ
உன்னையே எப்போதும் நினைத்து வணங்குபவன் நான்
பல பெருமைகளைக் கொண்டவன் நீ; உன் கருணையை வேண்டுபவன் நான்
ஸ்ரீ காகிநெலெ ஆதிகேசவன் நீ (ஏனெந்து)

***

Thursday, November 17, 2016

அந்த நிலவு வேண்டும்

அந்த நிலவு வேண்டும்

ஸ்ரீராமன் குழந்தையாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி. தான் விளையாட அந்த நிலவு வேண்டுமென்று குழந்தை அழுததாகவும், அப்போது தசரதன், கௌசல்யா மற்றும் மந்திரிகள் எப்படி ஆறுதல் கூறினார்கள் என்று விவரிக்கும் நிகழ்ச்சியை அப்படியே ஒரு அழகான பாடலில் பாடியிருக்கிறார் கனகதாசர்.

***

அங்கனதொளு ராமனாடித சந்திர பேகெந்து தான் ஹடமாடிதா

தன் வீட்டு முற்றத்தில் ராமன் ஆடினான்
அந்த நிலவு வேண்டும் என்று அடம் பிடித்தான் (அங்கனதொளு)

தாயிய கரெது கை மாடி தோரிதா முகில கடெகொம்மெ திட்டிசி நோடிதா
சின்னி கோலு சண்டு புகுரி எல்லவ பேடா பேடா எந்து தான் பிசாடிதா (அங்கனதொளு)

தன் தாயைக் கூப்பிட்டு (நிலவைக்) காட்டினான்
மேகங்களின் நடுவில் இருக்கும் நிலவைப் பார்த்தான்
தன் விளையாட்டுப் பொருட்கள் எதையும் வேண்டாம் என்றான்
அவற்றைத் தூக்கிப் போட்டான் (அங்கனதொளு)

கந்தா பா எந்து தாயி கரெதளு மம்மு உண்ணு எந்து பன்னிசுத்தித்தளு
தாயி கௌசல்யா களவள கொண்டளு கந்தா அஞ்சிதனு என்னுத்தித்தளு (அங்கனதொளு)

மகனே, வருவாய் என்று தாய் கூப்பிட்டாள்
சாப்பாடு சாப்பிடு என்று வேண்டிக் கொண்டாள்
தாய் கௌசல்யா கவலைப் பட்டாள்
குழந்தை (எதையோ பார்த்து) பயந்திருக்கிறது என்று கூறினாள் (அங்கனதொளு)

அளுவ த்வனி கேளி ராஜனு மந்திரி சஹிதாகி தாவிசி பந்தனு
நிலுவ கண்ணாடி தந்திசித ஸ்ரீ ராமன எத்தி முத்தாடித (அங்கனதொளு)

குழந்தை அழும் சத்தம் கேட்டு தசரதன்
தன் மந்திரி சகிதமாக ஓடி வந்தான்
ஒரு நிலைக் கண்ணாடி கொண்டு வந்து காட்டினான்
ஸ்ரீ ராமனை தூக்கிக் கொஞ்சினான் (அங்கனதொளு)

கண்ணாடியொளு பிம்ப நோடித சந்திர சிக்கிதானெந்து குணிதாடிதா
சம்ப்ரம நோடி ஆதி கேசவ ரகு வம்சவன்னே கொண்டாடிதா (அங்கனதொளு)

அந்த கண்ணாடியில் நிலவைப் பார்த்து
நிலவே பக்கத்தில் வந்ததென்று ஆனந்தப்பட்டான் இராமன்
இந்த நிகழ்ச்சியைப் பார்த்த காகிநெலெ ஆதிகேசவன்
ரகு வம்சம் மொத்தத்தையுமே ஆசிர்வதித்தான் (அங்கனதொளு)

***


Wednesday, November 16, 2016

தாசரின் வீட்டைக் காப்பேன்


தாசரின் வீட்டைக் காப்பேன்

கனகதாசரின் இன்னொரு அற்புதமான பாடல். ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றி, பாடி அவன் கோயிலில் வேலை செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவனைப் புகழ்ந்து பூசிக்கும் பக்தர்களின் வீட்டிலும் பல வேலைகளைச் செய்வேன். காசே இல்லாமல் அவர்களுக்கு பல வகைகளில் உதவியாக இருப்பேன் என்று பாடுகிறார்.

***

பண்டனாகி பாகிலு காயுவே நா
வைகுண்ட ஸ்ரீ ஹரிய தாசர மனெயா (பண்டனாகி)

ஒரு வேலைக்காரனாய், (வீட்டை) காவல் காப்பேன், நான்
வைகுண்டபதியான ஸ்ரீஹரியின் பக்தர்களின் வீட்டை (பண்டனாகி)

ஹொரெசுத்து பிரகார சுத்தி நா பருவே
பருவ ஹோகுவர விசாரிசித்திருவே
கரெதி கம்பிய பொத்து திருகுத இருவே
ஸ்ரீ ஹரிய சன்முகத ஒலகதல்லிருவே (பண்டனாகி)

வீட்டைச் சுற்றிச்சுற்றி வருவேன்
வீட்டுக்கு வருபவர் போகுபரை விசாரித்தே அனுப்புவேன்
இரும்புக் கம்பியைப் பிடித்தவாறே சுற்றி வருவேன்
ஸ்ரீஹரியின் திருமுகம் எப்போதும் தெரியுமாறு அங்கேயே இருப்பேன் (பண்டனாகி)

வேளே வேளேகே நான் ஊளிகே மாடுவே
ஆள கொண்டிகே சாமராவ பீசுவே
தாள மத்தள பிருங்கி மேளகிந்தள கூடி
ஸ்ரீ லோலன பாத கொண்டாடுத்தலிருவே (பண்டனாகி)

வேளா வேளைக்கு கொடுத்த வேலைகளைச் செய்வேன்
தேவைப்படும்போது சாமரம் வீசுவேன்
மத்தளம், மேளம் ஆகியவை கொண்டு தாளத்துடன்
ஸ்ரீபதியின் பாதங்களைப் பற்றி பாடிக் கொண்டிருப்பேன் (பண்டனாகி)

மீசலு ஊளிகே மாடிகொண்டிருவே
சேஷ பிரசாதவ உண்டு கொண்டிருவே
சேஷகிரி காகிநெலெ ஆதிகேசவன
தாசர தாசர தாசர மனெயா (பண்டனாகி)

சொல்லப்படும் வேலைகளைச் செய்து வருவேன்
மீந்து போகும் பிரசாதங்களை உண்டு வருவேன்
சேஷகிரி காகிநெலெ ஆதிகேசவனின்
பக்தரின் பக்தரின் பக்தரின் வீட்டை (பண்டனாகி)

***

Tuesday, November 15, 2016

பஜிஸி பதுகெலோ மானவா

பஜிஸி பதுகெலோ மானவா

கனகதாசர். புரந்தரதாசரின் சமகாலத்தவர். பிராமண குலத்தில் பிறக்காத காரணத்தினால், உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டவர். ஆனால், கண்ணன் மேல் இருந்த இடையறா பக்தியினால், ‘ஆதிகேசவன்’ என்னும் தன் அங்கிதம் (signature) கொண்டு எண்ணற்ற பாடல்களைப் பாடியவர்.

இவரது பக்தியைக் கண்டு, ஸ்ரீவியாசராயர் இவருக்கு ஆசி புரிந்தார். தன் சீடனாகவும் ஏற்றுக் கொண்டார். கனகதாசரின் ஒரு பாடலை இன்று பார்ப்போம்.

இறைவனின் பாதத்தைப் பற்றிக் கொண்டு, அவன் புகழைப் பாடி வந்தால், மறுபிறவி இல்லாமல் முக்தி அடையலாம் என்ற கருத்தைக் கொண்ட பாடல்.

***

பஜிஸி பதுகெலோ மானவா
அஜபவேந்திராதிகள வந்திசுவ பாதவனு (பஜிஸி)

புகழ்த்து பாடி பிழைத்துக் கொள் மனிதனே
பிரம்மன் & இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் பாதத்தை (பஜிஸி)

பாகசாசன கொலிது பலிய மெட்டித பாத
காகு ஷகடன துளிது கொந்த பாத
லோகேஷனிகே ஒலிது பூஜெகொம்புவ பாத
லோக பாவன கங்கே ஜனிசித பாத (பஜிஸி)

இந்திரனுக்கு அருள் புரியும்; பலியை மிதித்த பாதம்
ஷகடாசுரனை மிதித்துக் கொன்ற பாதம்
சிவனுக்கு அருள் புரிந்து, அவரால் பூஜை செய்துக் கொள்ளப்படும் பாதம்
உலகத்தைக் காக்கும் கங்கையை உயிர்ப்பித்த பாதம் (பஜிஸி)

கல்லாத அஹல்யேய சுத்த மாடித பாத
ஒலிது பார்த்தன ரதவ தூளித பாத
கலி துரியோதனன கெளெகே அடகிசித பாத
பலத காளிங்கன ஹெடெய துளித பாத (பஜிஸி)

கல்லாகி இருந்த அகல்யையை உயிர்ப்பித்த பாதம்
அர்ச்சுனனின் ரதத்தை (மிதித்து) அலங்கரித்த பாதம்
கலி ஆவேசமான துரியோதனனை கீழே தள்ளி அடக்கிய பாதம்
காளிங்கனின் தலை மேல் நடனமாடிய பாதம் (பஜிஸி)

கருட சேஷாதிகளு ஹொத்து திருகுவ பாத
தரெய ஈரடி மாடி அளெத பாத
சிரி தன்ன தொடெய மேலே இத்து ஒட்டுவ பாத
சிரிகாகினெலெ ஆதிகேசவன பாதவ (பஜிஸி)

கருடன் சேஷன் ஆகியவர்கள் தூக்கிக் கொண்டு திரியும் பாதம்
தன் இரண்டு அடிகளால் உலகை அளந்த பாதம்
இலக்குமி தன் தொடை மேல் வைத்து பூஜை செய்யும் பாதம்
காகினெலெ ஆதிகேசவனின் பாதத்தை (பஜிஸி)

******


Wednesday, October 21, 2015

நல்லவங்ககூட சண்டை போடலாமா?

நல்லவங்ககூட சண்டை போடலாமா?

இன்றைய பாடலை எழுதியவர் கனகதாசர். வாழ்க்கையில் பல சமயங்களில், நாம் செய்வது சரியா தவறா என்று தெரியாமலே முழித்திருப்போம். அந்த இடங்களில் என்ன செய்யலாம் என்று தாசர் சொல்கிறார்.

மற்றவர்களைப் புகழ்ந்து பேசி, வெட்டி அரட்டை அடித்து காலத்தைக் கழிப்பதற்கு பதில், ஏதாவது ஒரு காட்டில் போய் தலைமறைவு வாழ்வு வாழலாம் என்கிறார்.

***

அஞ்ஞானிகளகூட அதிக ஸ்னேஹக்கிந்தா
சுஞ்ஞானிகளகூட ஜகளவே லேசு (அஞ்ஞானி)

முட்டாள்களுடன் நட்பு கொண்டாடுவதை விட
ஞானிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே மேல் (அஞ்ஞானி)

உம்புடுவதக்கில்லத அரசனோலகக்கிந்தா
தும்பிதூரொளகே திரிதும்புவுதே லேசு
ஹம்பலிஸி ஹாள் ஹரட்டே ஒடயுவுதக்கிந்தா
ஹரி எம்ப தாசர கூட சம்பாஷணெயே லேசு (அஞ்ஞானி)

உடுக்க, உண்ண (இந்த) தேவைகளுக்காக அரசனை (புகழ்ந்து பாடி) அவனுடன் இருப்பதற்கு
மக்கள் நிறைந்த ஊரில் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்
வேலையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைவிட
ஹரியின் தாசர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் (அஞ்ஞானி)

ஒடனே ஹங்கிசுவனு கரவ நுங்குதகிந்தா
குடிநீரு குடிதுகொண்டு இருவுதே லேசு
பிடதே பாந்தவரொடனே கடிதாடுவுதக்கிந்தா
அடவியொள் அஞ்ஞாதவாசவே லேசு (அஞ்ஞானி)

செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பார்ப்பவரின் கைகளில் சாப்பிடுவதற்கு பதிலாக
குடிநீர் குடித்துக்கொண்டு இருப்பதே மேல்
உறவினர்களுடன் (அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன்) சண்டை சச்சரவுடன் இருப்பதற்கு
காட்டில் அஞ்ஞாதவாசம் (யாருக்கும் தெரியாமல் ஒளிந்து) வாழ்வதே மேல் (அஞ்ஞானி)

மசெயுதிஹ மத்சரத நெரெயொளகே இருவகிந்தா
ஹசனில்லத ஹாளு குடியே லேசு
பிசஜாக்‌ஷ காகிநெலெ ஆதி கேசவ ராயா
வசுமதியொளு நின்ன தாசத்வவே லேசு (அஞ்ஞானி)

பொறாமையுடன் வாழ்பவர் நடுவில் இருப்பதற்கு பதிலாக
(ஆளில்லாத) பாழடைந்த கோயிலில் வசிப்பதே மேல்
தாமரைக் கண்ணனாக காகிநெலெ ஆதிகேசவனே,
நல்ல புத்தியுடன் உன் தாசனாக இருப்பதே மேல் (அஞ்ஞானி)

***

Tuesday, October 20, 2015

தர்மத்தின் வாழ்வுதனை..


தர்மத்தின் வாழ்வுதனை..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
இந்த வாக்கியத்தின் பொருளையே இந்த முழுப்பாடலில் சொல்லியிருக்கிறார் புரந்தரதாசர்.

நமக்கு கெட்டது நினைப்பவர்கள், நம் எதிரிகள், இப்படி அனைவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பாடலைக் கேட்டு, விளக்கத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்ய முடியுமா? செய்யவும் வேண்டுமா என்ற கேள்விகளுக்கு பதில்? தாசர் சொன்னபிறகு அதற்கு எதிராக ஏதேனும் சொல்ல முடியுமா? அதனால் அவர் சொன்னதேதான் பதில்.***

தர்மவே ஜயவெம்ப திவ்ய மந்த்ர
மர்மவனரிது மாடலு பேகு தந்த்ர (தர்மவே)

தர்மம் வெல்லும் - இதுவே உண்மையான மந்திரம் ஆகும்
அது எப்படி என்று தெரிந்து கொள்வது சுலபமல்ல (சில வழிகளைக் கையாள வேண்டும்)

விஷவிக்கிதவகே ஷட்ரசவனுணிசலு பேகு
த்வேஷ மாடிதவன போஷிசலு பேகு
புசியாடி கெடிசுவன ஹாடி ஹரசலு பேகு
மோச மாடுவன ஹெசரு மகனிகிட பேகு (தர்மவே)

விஷம் கொடுத்தவருக்கு அறுசுவை உணவுகளையும் கொடுக்க வேண்டும்
விரோதம் செய்தவனிடம் நட்பு பாராட்ட வேண்டும்
பொய்களைச் சொல்லி (நம்மை) கெடுப்பவனை, பாடிப் புகழ்ந்து பாராட்ட வேண்டும்
மோசம் செய்பவனின் பெயரை நம் வாரிசுக்கு வைக்க வேண்டும் (தர்மவே)

ஹிந்தே நிந்திபரன்னு வந்திசுதலிரபேகு
பந்தனதொளிட்டவர பெரெய பேகு
கொந்த வைரிய மனெகே நடெது ஹோகலு பேகு
குந்தெணிசுவவர கெளெதன மாட பேகு (தர்மவே)

நம் பின் நம்மைப் பற்றி புரளி பேசுபவரை எப்போதும் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்
நம்மை கைது செய்ய வைத்தவரை (பிரச்னைகளிலிருந்து) காப்பாற்ற வேண்டும்
எதிரியின் வீட்டுக்கு நடந்து சென்று (அவரிடம்) பேச வேண்டும்
நமக்கு கெட்டது நடக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்லதே செய்ய வேண்டும் (தர்மவே)

கொண்டைது படியுவர கொண்டாடுதிர பேகு
கண்டு சஹிசதவர கரெய பேகு
புண்டரீகாக்‌ஷ ஸ்ரீ புரந்தர விட்டலன்ன
கொண்டாடி தான் தன்யனாக பேகு (தர்மவே)

நமக்கு துன்பம் கொடுப்பவரை, புகழ்ந்து கொண்டாட வேண்டும்
நம்மைக் கண்டு பொறாமை கொள்பவரை வீட்டுக்குக் கூப்பிட்டு (உபசரிக்க) வேண்டும்
புண்டரிகாட்சனான ஸ்ரீ புரந்தர விட்டலனை
கொண்டாடி, மகிழ்ச்சி பெற வேண்டும் (தர்மவே)


******

Monday, October 19, 2015

வழியைக் காட்டு கோபாலா!

ஸ்ரீ வாதிராஜர் எழுதிய பாடல். அவர் எழுதும் பாடல்களில் 'ஸ்ரீ ஹயவதன' என்னும் அவரது முத்திரை காணப்படும். இலக்குமியுடன் கூடிய ஸ்ரீ ஹயவதனன், ஞான பக்தி வைராஞத்தை அளிக்கக்கூடியவனாக இருக்கிறான்.

இந்த தளத்தில் நாம் பார்க்கும் இந்தப் பாடல், ஸ்ரீ வாதிராஜரின் மூன்றாவது பாடல்.தாரிய தோரோ கோபாலா
வாரிஜனாபஸ்ரீ வைகுண்ட லோலா (தாரிய)

வழியைக் காட்டு கோபாலா
இலக்குமியின் தலைவனே, வைகுண்ட வாசனே (தாரிய)

சிக்கிதே பவ பாஷ தொளகே நான்
லெக்கவில்லத ஜந்துகளிகே
திக்கொப்பரில்லா எனகே, என்னா
திக்கேடிகள களெது கருணிசு எனகே (தாரிய)

வாழ்க்கை என்னும் காட்டில் மாட்டிக் கொண்டேன்
கணக்கற்ற மிருகங்களினால் (காயப் பட்டேன்)
என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை, எந்தன்
கஷ்டங்களை தீர்த்து, எனக்கு கருணை காட்டு (தாரிய)

கஜரக்ஷகனு நீனெந்து தேவா
அஜருத்ராதிகளெந்து
நிஜவாகி பொகளிதரெந்து
சுஜனர நோடய்யா பேடிதே நானெந்து (தாரிய)

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் நீ என்று
பிரம்மா, சிவன் முதலானோர்
உண்மையிலேயே சொன்னார்கள்  (அப்படிப்பட்ட நீ)
நல்லவர்களை பாருய்யா, உன்னை வேண்டினேன் நான் (தாரிய)

வரத ஸ்ரீ ஹயவதனனே பாரை
கரெதன்ன தாரிய தோரை
பரம பக்தரொளின் யாரை செலுவ
பரபுருஷ நீனல்லதே இன் யாரை (தாரிய)

ஸ்ரீ ஹயவதனனே, இங்கு வாராய்
என்னை அழைத்து, எனக்கு நல்வழி காட்டுவாய்
உந்தன் பக்தனான எனக்கு வேறு யார் உளர்?
சிறந்த தெய்வமான உன்னைத் தவிர இங்கு யாரிடம் போய்க் கேட்பேன்? (தாரிய)

****

வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.


***