Monday, March 24, 2014

நடப்பதெல்லாம் நன்மைக்கே...



புரந்தரதாசரின் வாழ்க்கை வரலாறு 

மேற்கண்ட பதிவில், தாசரின் கதையை படித்துவிட்டு வரவும். முதலில் கருமியாக இருந்த தாசர், எப்படி பல்வேறு தத்துவார்த்த விசாரங்கள், வேத சாரங்கள், பகவானின் அவதாரங்கள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பாடல்கள் இயற்றலானார்? அந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம்தான் அதற்கு காரணம். அந்த சம்பவமும் அதே பதிவில் உள்ளது.

தன் பக்தையை கருமியான கணவனிடமிருந்து காப்பாற்ற இன்னொரு மூக்குத்தியைக் கொடுத்த கருணை வடிவானவனைப் போற்றிப் பாட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தாசர். சம்சார சாகரத்தில் மூழ்கியிருந்த அவர், உடனடியாக தம்புரா, கைத்தடி, பிச்சை எடுப்பதற்கு ஒரு தட்டு ஆகியவற்றை எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் முதன்முதலாக இயற்றிய பாடல் என்று இந்தப் பாடலையே குறிப்பிடுகிறார்கள். தன் இந்த மாற்றத்திற்குக் காரணமான மனைவியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆதத்தெல்லா ஒளிதே ஆயித்து நம்ம
ஸ்ரீதரன சேவே மாடலு சாதன சம்பத்தாயித்து (ஆதத்தெல்லா)

நடந்தவையெல்லாம் நல்லதாகவே ஆயிற்று நம்
ஸ்ரீதரனின் சேவையைச் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது (ஆதத்தெல்லா)

தண்டிகே பெட்டா ஹிடியுவுதக்கே
மண்டே பாகி நாசுதலித்தே
ஹெண்டத்தி சந்ததி சாவிரவாகலி
தண்டிகே பெட்டா ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

தம்புரா & கைத்தடி (இந்த இரண்டையும்) பிடிப்பதற்கு
தலை குனிந்து வெட்கப்பட்டேன்
என் மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)
தம்புரா & கைத்தடியை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

கோபாள புட்டி ஹிடியுவுதக்கே
பூபதி எந்து கர்விசுதித்தே
ஆ பத்னீ குல சாவிரவாகலி
கோபாள புட்டி ஹிடிசிதளய்யா (ஆதத்தெல்லா)

பிட்சைத் தட்டு பிடிப்பதற்கு
(நான் ஒரு) பணக்காரன் என்று எண்ணி கர்வத்தோடு இருந்தேன்
அந்த (என்) மனைவியின் குலம் ஆயிரம் ஆகட்டும் (செழிக்கட்டும்)
பிட்சைத் தட்டை (என்னை) பிடிக்கவைத்தாளே (ஆதத்தெல்லா)

துளசிமாலே ஹாகுவதக்கே
அரசனெந்து திருகுதலித்தே
சரசிஜாக்‌ஷ புரந்தரவிட்டலனு
துளசிமாலே ஹாகிதனய்யா (ஆதத்தெல்லா)

துளசிமாலையை அணிந்துகொள்வதற்கு
(நான் ஒரு) அரசன் என்று நினைத்து திரிந்து கொண்டிருந்தேன்
அந்த தாமரைக் கண்ணனான புரந்தரவிட்டலன்
(என் கழுத்தில்) துளசிமாலையை அணிவித்தானே (ஆதத்தெல்லா)

***

இந்தப் பாடலைப் பாடும் திருமதி அருணா சாய்ராம்:

http://www.youtube.com/watch?v=0gFu8hdVQeA

தாசரைப் பற்றிய திரைப்படத்தில் இந்தப் பாடலைப் பாடிய திரு பாலமுரளிகிருஷ்ணா:

http://www.youtube.com/watch?v=pumAat4mk98

***

Wednesday, March 19, 2014

அழைத்தால் உடனே வருபவன் யார்?



அ. கஜேந்திரன் என்னும் யானை ஆபத்துக் காலத்தில் ‘ரங்கா’ என்று அழைத்ததும் வந்து காப்பாற்றியவர்
ஆ. தன்னால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்றபோது இரு கைகளையும் தூக்கி ‘கிருஷ்ணா, என்னைக் காப்பாற்று’ என்று தொழுத திரௌபதியை காப்பாற்றியவர்
இ. இங்கே கண்டிப்பாக இறைவன் இருப்பான் என்ற பிரகலாதன் நம்பிக்கையை காப்பாற்ற தூணில் வந்து நின்றவர்.
ஈ. தன் பக்தர்களை எப்பொழுதும் கைவிடாதவர்

என்றெல்லாம் இறைவனை, அந்த ஸ்ரீமன் நாராயணனின் புகழை பல்வேறு பாடல்களில் புரந்தரதாசர் பாடியிருக்கிறார்.

அதேபோல் இன்றைய பாடலிலும் கூப்பிட்ட குரலுக்கு வருபவன் யார், அந்த ரங்கனா? அல்லது கிருஷ்ணனா? என்று பாடி, இறுதியில் அந்த புரந்தரவிட்டலன் யார் அழைத்தாலும் வருவான் என்ற பொருள் படுமாறு பாடலை முடிக்கிறார். வழக்கம்போல் எளிமையான, மொழிபெயர்க்கவே தேவையில்லாத இந்த பாடலை பார்த்துவிட்டு, வித்யாபூஷணர் குரலிலும் கேட்டுவிடலாம்.

***

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன
யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

ரங்கனை, கிருஷ்ணனை யார் அழைத்தார்கள்?
(அழைத்தால் உடனே வந்துவிடுவானே என்று பொருள்)

கோபால கிருஷ்னன பாப விநாசன
ஈபரி இந்தலி கரெய பந்தவனு (யாரே)

கோபால கிருஷ்னனை பாவங்களை போக்குபவனை
இந்த கணத்தில் அழைத்த மாத்திரத்தில் வருபவன் யார்? (யாரே)

வேணு விநோதன ப்ராண ப்ரியன
ஜானெயரரசன கரெய பந்தவனு (யாரே)

புல்லாங்குழல் ஊதுபவனை என் உயிரிலும் மேலானவனை
நல்லனவற்றை ஏற்றுக்கொள்பனை யார் அழைத்தது? (யாரே)

கரிராஜ வரதன பரம புருஷன
புரந்தர விட்டலன கரெய பந்தவனு (யாரே)

கஜேந்திரனை (யானை) காப்பாற்றியவன் அனைவரிலும் சிறந்தவனை
புரந்தர விட்டலனை கூப்பிட்டால் உடனே வருவானே (யாரே)

***

இந்தப் பாடலை அழகாகப் பாடும் வித்யாபூஷணர்:

https://www.youtube.com/watch?v=43An2WlsRjA

***

Saturday, March 15, 2014

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும்?


கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் (தாத்தா) என்று போற்றப்படும் புரந்தரதாசர், இந்த சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய முறை, துவக்கத்தில் பாடப்பட வேண்டிய பாடல்கள், மாயாமாளவகொளை ராகம் என பலவற்றை உருவாக்கியவர். தனது அனைத்துப் பாடல்களிலும் ‘புரந்தர விட்டல’ என்னும் தன் முத்திரையைப் பதித்து, அவை அனைத்தையும் அந்த புரந்தரவிட்டலனுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தவர். இறைவனின் பல அவதாரங்கள், வேத உபநிஷத்துகள், த்வைத சித்தாந்தத்தின் சாரங்கள் என அனைத்தைப் பற்றியும் பாடியுள்ள தாசர், மக்களுக்கு அறிவுரை வழங்கியும் பாடல்களைப் புனைந்துள்ளார். ஒரு ராகம் எப்படிப் பாடப்பட வேண்டும், வர்ண மெட்டுக்கள் என்றால் என்ன என்று இன்றளவும் பாடகர்கள் பயன்படுத்தும் விஷயங்களைக் குறித்து விதிகளை வகுத்தவர் தாசரே.

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியதுடன், ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்ற லட்சணங்களைக் குறித்தும் ஒரு பாடல் பாடியுள்ளார். நல்ல தாளத்துடன், பின்னணி இசையுடன் இருக்க வேண்டுமாம். பாடலைப் பாடுபவர் அந்தப் பாடலின் மொழி, பொருள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, உணர்ந்து பாட வேண்டும் என்றும் சொல்கிறார். அந்தப் பாடலை கேட்பவர் மனம் ஆனந்தப்படுமாறு இருக்க வேண்டும் என்று சொல்லி இறுதியில் தன் முத்திரையுடன் பாடலை முடிக்கிறார்.

***

தாள பேகு பக்க மேள பேகு
சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

தாளம் இருக்க வேண்டும்; பக்க வாத்தியங்களும் இருக்க வேண்டும்
அமைதியான நேரம்/காலம் இருக்க வேண்டும்; பாடலை கேட்க விரும்புபவர்களுக்கு (தாளம்)

கள சுத்த இரபேகு திளிது பேளலு பேகு
களவள பிடபேகு களெமுக இரபேகு (தாள)

(பாடுபவர்) குரல் சுத்தமாக இருக்க வேண்டும்;
(பாடும் வரிகளை) தெரிந்து புரிந்து உச்சரிக்க வேண்டும்
(பாடுபவர், அவரது) மனதில் குழப்பங்களை விடவேண்டும்
(பாடுபவர் முகம்) நல்ல களையுடன் இருக்க வேண்டும் (தாள)

ஜதிப்ராச இரபேகு கதிகே நில்லச பேகு
ரதிபதிபிதனோளு அதி ப்ரேம இரபேகு (தாள)

எதுகை/மோனை இருக்க வேண்டும்;
(தக்க இடத்தில்) நிறுத்திப் பாட வேண்டும்;
ரதியின் கணவனான மன்மதனின் தந்தையான ஸ்ரீமன் நாராயணனிடத்தே பக்தி இருக்க வேண்டும் (தாள)

அரிதவரு இரபேகு ஹருஷ ஹெச்சலி பேகு
புரந்தரவிட்டலனல்லி த்ருட சித்த இரபேகு (தாள)

(என்ன பாடுகிறோம் என்று) தெரிந்தவராக இருக்க வேண்டும்;
(பாடலை) கேட்பவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும்
புரந்தரவிட்டலனிடம் திடமான பக்தி இருக்க வேண்டும் (தாள)

***

இந்தப் பாடலை பாடியுள்ள Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள்:

http://www.youtube.com/watch?v=0HHvYcFk8H8

***

Tuesday, March 11, 2014

எதை செய்யணுமோ அதை செய்யாமல்...!!


நம்மை பெற்ற தாய், தந்தை; மனைவி, மக்கள், சொந்தபந்தம் இவர்களை எல்லாம் கஷ்டப்படுத்திவிட்டு, காயப்படுத்திவிட்டு, தேவைப்படும்போது அவர்களுக்கு உதவி செய்யாமல், தானங்கள், ஜப தப ஹோமங்கள் செய்வதால் எந்தவித பலனும் கிடையாது. முதலில் இதையெல்லாம் சரியாகச் செய்துவிட்டு பிறகு மற்ற காரியங்களைச் செய் என்று கூறும் தாசர், கூடவே மறக்காமல் புரந்தரவிட்டலனையும் நினைக்கவேண்டும்; இல்லையேல் இந்த ஜென்மம் எடுத்து எந்த பலனும் இல்லை என்றும் கூறி முடிக்கிறார்.

***

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி
நித்ய தானவ மாடி பலவேனு
சத்ய சதாசார இல்லதவனு ஜப
ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

பெற்ற தாய் தந்தையின் மனதை நோகவிட்டு
தினமும் தானங்கள் செய்து என்ன பலன்?
உண்மை பேசாமலும், நல்ல பழக்கங்களும் இல்லாதவன்
பத்தாயிரம் ஜபங்கள் செய்து என்ன பலன்?

தன்ன சதிசுதரு பந்துகள நோயிசி
சின்ன தானவ மாடி பலவேனு
பின்னானந்ததலி தேசதேசவ திருகி
அன்ன தானவ மாடி பலவேனு (ஹெட்ட)

தன் மனைவி மக்கள் உறவினர்களை நோகவிட்டு
செல்வத்தை தானம் செய்வதில் என்ன பலன்?
பகட்டுக்காக ஊர் ஊராகப் போய்
அன்னதானங்கள் செய்வதில் என்ன பலன்? (ஹெட்ட)

ஸ்னானக்கே பானக்கே ஆகுவ திளி நீரு
கானனதொளகித்து பலவேனு
ஆனந்த மூர்த்தி புரந்தர விட்டலன
நெயெனாத தனுவித்து பலவேனு (ஹெட்ட)

குளிக்கவும் குடிக்கவும் முடியாத சுத்தமான நீரானது
(யாரும் புகமுடியாத) காட்டுக்குள் இருந்து என்ன பலன்?
நமக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரும் புரந்தரவிட்டலனை
நினைக்காத இந்த உடம்பு இருந்து என்ன பலன்? (ஹெட்ட)

***

முதல் & இறுதி பத்திகள் மட்டும் பாடும் வித்யாபூஷணர்.




***


Thursday, March 6, 2014

பயப்படாதீங்க.. பயப்படாதீங்க...



த்வைத மார்க்கத்தில் ஸ்ரீ மத்வாச்சாரியர் முந்தைய அவதாரங்களில் ஹனுமன் மற்றும் பீமனாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஹனும, பீம, மத்வ என்ற இந்த வரிசையை புரந்தரதாசர் மற்றும் பிற தாசர்கள் தங்கள் பாடல்களில் பாடியிருக்கின்றனர். இன்றைய பாடலிலும் இம்மூவரையும் நம்பியவருக்கு இவ்வுலகில் எதைப்பற்றிய பயமும் தேவையில்லை என்கிறார் தாசர். மிகவும் எளிமையான, சிறிய பாட்டு. தாசர் பாடல் போட்டிகளில் யாராவது சிறுவர்கள் கண்டிப்பாக பாடும் பாட்டு ஆகும்.

***

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே
பயவு இன்யாதகய்யா
சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு
பயமும் எதுக்கய்யா
ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

கனசல்லி மனசல்லி களவளவாதரெ
ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)
ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித
பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த
பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ
குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை புஜை செய்யும்
குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

***

http://www.youtube.com/watch?v=5SFeaJgfTow

***

Saturday, March 1, 2014

அறிவுரை: கருமியாக இருக்காதீர்கள்...


தங்கள் செல்வத்தை தானும் அனுபவிக்காமல், வேண்டியவர்களுக்கும் கொடுக்காமல் கருமியாக இருப்பவர்களைப் பார்த்து தாசர் பாடும் பாடல் இது. பணத்தை வீட்டினுள் பதுக்கிவிட்டு, சரியாக வயிறார சாப்பிடவும் செய்யாமல், கருமியாக இருப்பவர்களே, உதவி வேண்டும் உறவினர்களுக்கு எதுவும் செய்யாமல் சாக்கு சொல்லி அனுப்பிவிடுகிறீர்களே, எமன் வந்து கூப்பிடும்போது, இது எதுவும் கூட வராது - அப்போது உங்களுக்கு இருக்கும் ஒரே உறவினன் நம் புரந்தரவிட்டலன்தான் என்று சொல்கிறார்.

***

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா
ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

ஹரி (உனக்கு) அதிகமாக கொடுத்தபோது (அதை) பயன்படுத்தவில்லை
ஹரி கொடுக்காத சமயங்களில் (இன்னும் அதிகம் வேண்டுமென்று) கேட்க மறக்கவில்லையே மனிதனே (ஹரி)

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி ஹோளிட்டு
மத்தே உப்பில்லதே உண்டேயல்லோ ப்ராணி
ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி போபாகா
ம்ருத்திகே பாயல்லி பித்தல்லோ ப்ராணி (ஹரி)

பத்தாயிரம் தங்கக் காசுகளை உள்ளே பத்திரமாக இட்டுவிட்டு
(கருமியாக) உப்பில்லாமல் உண்டாயே மனிதனே
(அந்த) பத்தாயிரம் தங்கக் காசுகள் காணாமல் போய்விட்டால்
உயிரையே விட்டுவிடுகிறாயே மனிதனே (ஹரி)

ஹுக்கியு துப்பவு மனெயொளகிரலிக்கே
குக்குரி அன்னவ திந்தெயல்லோ ப்ராணி
ஹெக்களத பாக்ய களிகெயலி போபாக
புக்கெய ஹொய்கொண்டு ஹோதேயல்லோ ப்ராணி (ஹரி)

நெய்யும், அரிசியும் வீட்டில் நிறைய இருந்தாலும்
(கருமியாக) கடலை கலந்த அன்னத்தை தின்கிறாயே மனிதனே
நிறைந்த செல்வம் ஒரு நாழிகையில் போய்க்கொண்டிருக்கும்போது
நீ காணாமல் போன ஒரு காசை தேடிப் போகிறாயே மனிதனே (ஹரி)

நெண்டரிஷ்டரு பந்து மனெ முந்தே குளிதிதரு
குண்ட சுத்தி நீனாடித்யல்லோ ப்ராணி
கண்டக யமனவரு குண்டிசுத எளெவாக
நெண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனு ப்ராணி

உறவினர்கள் உன் வீட்டுமுன் (உதவிகள் வேண்டி) காத்திருந்தபோது
சாக்குகள் சொல்லி அவர்களை தவிர்த்தாயே மனிதனே
யமதூதர்கள் உன்னை கயிற்றில் கட்டி இழுக்கும்போது
உன் உறவினர் (ஒரே ஒருவன்தான், அவனே) ஸ்ரீ புரந்தரவிட்டலன் (ஹரி)

***

பாடலை அனுபவித்து பாடியுள்ள வித்யாபூஷணர்:

http://www.youtube.com/watch?v=1VSuctLiyQc

***