Tuesday, May 3, 2011

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீரங்கம். திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீரங்கநாதர்.

த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர். இவர்கள் பாடிய பாடல்கள் / பாசுரங்கள் இந்த விக்கி பக்கத்தில் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.
அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி-தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர். அவற்றில் ஒரு பாட்டுதான் இன்று பார்க்கப் போவது.

***

புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார். வாழ்ந்த ஆண்டு 1420 - 1486. ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.கன்னடத்தில் செய்யப்படும் எந்த கதாகாலட்சேபத்திலும் முதலில் சொல்லப்படும் ஸ்லோகத்தில், ஸ்ரீபாதராயருக்கு வந்தனம் செய்து துவக்குவதே மரபாக உள்ளது. அந்த ஸ்லோகம் இதோ.

நம: ஸ்ரீபாதராஜாய நமஸ்தே வியாஸயோகினே
நம: புரந்தரார்யாய விஜயார்யாய தே நம:


கிருஷ்ணா நீ பேகனே பாரோ - என்று பாடிய ஸ்ரீ வியாஸராயருக்கு வித்யாகுருவானவர் நம் ஸ்ரீபாதராயர்.

தன் எல்லாப் பாடல்களின் முடிவிலும் ‘ரங்க விட்டலா’ என்று முத்திரையை பதித்து பாடிய ஸ்ரீ பாதராயர், கர்னாடகாவில் முளபாகலு என்னும் இடத்தில் சமாதியடைந்தார்.

இன்று இவரின் புகழ்பெற்ற பாடலான ‘கண்களித்யாதகோ’வை பார்க்கலாம்.

கண்களித்யாதகோ
காவேரி ரங்கன நோடதா


இந்த கண்கள் எதற்கு
காவேரி ரங்கனை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

ஜகங்களொளகே மங்கள மூருத்தி
ரங்கன ஸ்ரீ பாதங்கள நோடதா (கண்களித்யாதகோ)


இந்த உலகத்தில் மிக அழகான வடிவான
ஸ்ரீ ரங்கனாதனின் பாதங்களை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

எந்திகாத ரொம்மே ஜனரு
பந்து பூமியல்லி நிந்து
சந்திர புஷ்கரணி ஸ்நாநவ மாடி
ஆனந்த திந்தலி ரங்கன நோடதா (கண்களித்யாதகோ)


என்றாவது (ஒரு நாளாவது) இந்த மக்கள்
வந்து இந்த புண்ணிய பூமியில் நின்று
சந்திர புஷ்கரணியில் நீராடி
ஆனந்தத்துடன் ஸ்ரீ ரங்கனை பாராமல் (கண்களித்யாதகோ)

ஹரி பாதோதக சம காவேரி
விரஜா நதியல்லி ஸ்நாநவ மாடி
பரம வைகுண்ட ரங்கன மந்திர
பர வாசுதேவன நோடதா (கண்களித்யாதகோ)


ஹரியின் பாதம் பட்ட நீருக்கு சமமானதும்
பூலோக விரஜா நதியுமான காவேரியில் குளித்து
வைகுண்ட ராஜனான ரங்கனின் கோயிலில்
அந்த வாசுதேவனை காணாமல் (கண்களித்யாதகோ)

ஹார ஹீர வைஜயந்தி
தோர முத்தின ஹார பதக
தேரனேறி பீதிலி பருவ
ஸ்ரீரங்க விட்டல ராயன நோடதா(கண்களித்யாதகோ)


வைரம் மற்றும் வைஜயந்தியினாலான மாலை
முத்து இழைத்த பதக்கத்துடன்
தேரில் ஏறி வீதியில் பவனி வரும்
ஸ்ரீரங்க விட்டலனை பார்க்காமல் (கண்களித்யாதகோ)

***

பாடலில் வரும் விரஜா நதியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

சொர்க்கத்தில் இருக்கும் நதியின் பெயர் விரஜா நதி என்று சொல்லப்படுகிறது. அந்த நதியில் ஒரு முறை முங்கி எழுந்ததும், ஆத்மாவிற்கு சம்சார பந்தங்கள் அனைத்தும் அறுந்து, அதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் போய்விடுமாம்.

***

இந்த பாடலை நம் பீமண்ணர் மிகமிக பக்தியுடன் பாடியுள்ளதை கேட்போம்.***

6 comments:

Lalitha Mittal said...

ஜோஷிஜியின் பக்திக்குரலைக் கேட்கும்போதெல்லாம் அந்தப்பேரிழப்பு

ப்ரம்மாண்டமாகி மனத்தை வாட்டுகிறது;ரங்கனைக் காணாத கண்கள் வெறும் புண்களே;

பாதராயரே!ரங்க நேயரே!

இனிய ரங்க கீதத்துக்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

பீமசேனரின் தேனினும் இனிய குரலையும் இந்துஸ்தானி இசையையும் மீண்டும் மீண்டும் கேட்கும் வாய்ப்பினை உங்கள் இடுகைகள் தருகின்றன. நன்றி.

காவேரி ரெங்கன், கஸ்தூரி ரெங்கன் என்று சொல்லும் மரபு தாஸர்களிடையேயும் இருந்ததை அறிந்தேன். சௌராஷ்ட்ர பாடல்கள் பாடிய நாயகி சுவாமிகளும் இந்த மரபினைப் பின்பற்றுவார்.

சந்திர புஷ்கரிணியில் தீர்த்தமாடுவதும், கங்கையில் புனிதமாய விரஜையைப் போன்ற காவிரியில் தீர்த்தமாடுவதும் திருவரங்கத் திருத்தல யாத்திரையின் முதன்மையான பகுதிகள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலிலும் பாதராயர் சொல்கிறார். அருமை.

நுணுக்கமான இன்னொன்றையும் சொல்ல வேண்டும். விரஜை சொர்க்கத்தில் இல்லை. சுவர்க்கம் என்பது தேவலோகம். அதுவும் பூவுலகைப் போல் பிரகிருதி மண்டலத்திலேயே இருப்பது. கருமவினைகளால் உடல் பெறும் ஜீவர்கள் தேவர்களாகத் தங்கள் நல்வினைப்பயனால் வாழும் இடம் சொர்க்கம். விரஜை என்பது பிரகிருதி மண்டலத்திற்கும் வைகுண்டமெனும் மோட்சத்திற்கும் இடையில் இருக்கும் நதி. வைகுந்தம் புகுவதற்கு வரும் மண்ணவர் (அதாவது அனைத்து ஜீவர்களும் - தேவர்கள் உட்பட) இந்த நதியில் மூழ்கி அப்ராகிருதமான முக்த உடலைப் பெற்ற பின்னர் வைகுந்தம் புகுவர் என்பது வைணவ மரபு.

கெக்கே பிக்குணி said...

எனக்குப் பிடித்த பாடல், பீமண்ணா பாடிக் கேட்டது இது தான் முதல். அதுவும் ஒரு சொல்லுக்குப் பொருள் இன்னிக்குத் தான் தெரிஞ்சுது: "பாதோதக" (கன்னட தெரியும்னு துண்டைத் தாண்டிப் போட்டுச் சொன்னவரைப் பூரிக்கட்டையாலேயே...:-)))

//கங்கையில் புனிதமாய விரஜையைப் போன்ற காவிரியில் தீர்த்தமாடுவதும் // //விரஜை என்பது பிரகிருதி மண்டலத்திற்கும் வைகுண்டமெனும் மோட்சத்திற்கும் இடையில் இருக்கும் நதி. வைகுந்தம் புகுவதற்கு வரும் மண்ணவர் (அதாவது அனைத்து ஜீவர்களும் - தேவர்கள் உட்பட) இந்த நதியில் மூழ்கி அப்ராகிருதமான முக்த உடலைப் பெற்ற பின்னர் வைகுந்தம் புகுவர் என்பது வைணவ மரபு. //

மிக அழகாக குமரன் விளக்கி விட்டார். ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரியை விரஜையாகவே கருதுவது வைணவ மரபு. அரங்கன் காலடியில் விரஜா இருக்கிறாள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். விரஜ‌ என்கிற வடமொழிச் சொல்லே அழகு.

குமரன் (Kumaran) said...

பாதோதக கன்னடம் கிடையாது. அதனால பூரிக்கட்டையைத் தூக்கிப் போடுங்க. அது வடமொழி. பாத+உதக. பாதம்ன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியும். உதகம்ன்னா நீர். ஹரி பாதோதகம்ன்னா கங்கை. கங்கையின் புனிதமாயன்னு ஆழ்வார் பாடினார்; கங்கைக்குச் சமமானன்னு தாஸர் பாடியிருக்கார்.

கெக்கே பிக்குணி said...

பாதோதக-வுக்கு கன்னடத்துல அல்ரெடி தப்பா அர்த்தம் சொன்னதால்...., பூரிக்கட்டை எடுத்தது எடுத்தது தான். (இப்ப என்ன, வடமொழியில இருக்கிறதை நான் கன்னட-னு நினைச்சதைப் பத்தி மிஸ்டருக்குத் தெரிய வேண்டாம்:-)

அர்த்தம் சொன்னதுக்கு நன்றி. Valiant effort to save a fellow too!

குமரன் (Kumaran) said...

:-)