Tuesday, February 1, 2011

இரட்டை அர்த்தத்தில் பேசலாமா கூடாதா?

ஆஹா. என்னாதிது? தாஸர் பாடல்கள்னு சொல்லிட்டு - இங்கே இரட்டை அர்த்தத்தில் பேசலாமா கூடாதான்னு ஒரு இடுகை?

நாட்டாமை, தலைப்பை மாத்து!

யாருப்பா அது, பேசிட்டிருக்கம்லே. சைலன்ஸ்.. தீர்ப்பு கடைசியில். இப்ப இடுகை.

***

எல்லாத்தையும் துறக்கறதுன்னா என்ன? சமகாலத்துலே நிறைய பேர் முற்றும் துறந்தவங்களா தங்களை அறிவிச்சிக்கிட்டு செய்யுற அட்டகாசங்களை பாத்திருப்பீங்க. நோ. மூச். நாம அவங்களப் பத்தி பேசப்போறதில்லே. வழக்கம்போல் புரந்தரதாஸரைப் பத்திதான் பேசப்போறோம்.

நம்ம தாஸரும் முற்றும் துறந்தவர்தான். அவரோட சொத்து ஒரே ஒரு தம்பூரா மட்டும்தான். வீடு? நோ. வேலைக்காரர்கள்? லேது. கைகால் அமுக்க பக்தகோடிகள்? ம்ஹூம். அட இதெல்லாம் பரவாயில்லே. சாப்பாட்டுக்காக மளிகைச் சாமான்களைக்கூட சேமிச்சி வைக்காமே, தினந்தோறும் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் பொருட்களை வைத்துத்தான் அன்றைய சமையல்னா பாத்துக்கங்க.

Stop stop. உஞ்சவிருத்தின்னா என்ன?

அட இது தெரியாதா? உஞ்சவிருத்தின்னா பிக்‌ஷைதாங்க. ஒரே வித்தியாசம் என்னன்னா - தாஸர் வீடு வீடா பாட்டு பாடிக்கிட்டே போவாரு. எதையும் தாங்கன்னு கேக்கமாட்டாரு. இவர் பாடலைக் கேட்டு, அந்தந்த வீட்டிலிருந்து அவங்களா வந்து அரிசி, கோதுமை, ராகி எதாவது பிக்‌ஷை போட்டுட்டு போவாங்க. அதை எடுத்துட்டு போய் சமைச்சி சாப்பிடுவாரு.

மறுபடி Stop. மேலே சொன்னதில் அரிசி, கோதுமை தெரியும். அது என்ன ராகி?

என்னப்பா? ராகி தெரியாதா? ராகி தெரியாதா? சரி பரவாயில்லை. ராகின்னா நம்ம கேழ்வரகுதான்.

ஓகே? டவுட் க்ளியர்? மேலே போகலாமா?

விட்டலனின் பெருமை, பக்தி, வைராக்கியம், தாஸ்யம், அப்படி இப்படின்னு பல்வேறு பாவங்களோடு, ஏகப்பட்ட நீதிபோதனை பாடல்களையும் நம்ம தாஸர் பாடியுள்ளார். மக்களின் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, சம்சார சாகரம்ற மாயவலையிலிருந்து அவங்களை கரையேத்தணுமே? அதுவும் ஒரு சங்கீதக்காரருடைய கடமைதானே. அதை மிக மிக அருமையாக செய்த நம்ம தாஸர், மக்கள் என்னென்ன செய்யணும், எதையெல்லாம் செய்யக்கூடாது, என்னெல்லாம் செய்தால் விட்டலனின் பார்வை நம்மேல் படும் என்றெல்லாம் தன் நீதிபோதனை பாடல்கள் மூலமாக நமக்கு அருளியுள்ளார்.

அப்படிப்பட்ட நீதிபோதனை பாடல்களில் ஒன்றுதான் நாம் இன்று பார்க்கப் போவது.

பாடலுக்குப் போவதற்கு முன் ஒரு சிறிய ப்ரேக்.

***


சென்னை திருவல்லிக்கேணியில், புரந்தரதாஸர் பஜனைக்குழு ஒன்று உள்ளது. (எந்த பதிவு போட்டாலும், அதில் திருவல்லிக்கேணி வரலேன்னா ஏதோ ஒண்ணு மிஸ்ஸு!) பல்வேறு வருடங்களாக அவர்கள் தாஸரின் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அந்நாளில், பாட்டுப் போட்டி, கச்சேரிகள், தாஸரின் படத்தை வைத்து மாடத்தெருக்களில் ஊர்வலம் இதெல்லாம் செய்து பட்டையை கிளப்புவார்கள்.

தாஸரின் தினமாகிய புஷ்ய மாத அமாவாசையன்று காலையில் அவர் படத்தை வைத்து ஒரு கோஷ்டி உஞ்சவிருத்திக்கு புறப்படும். பாடல்களை பாடிக் கொண்டே செல்லும்போது, பக்தர்கள் தங்களால் இயன்ற அரிசி, பருப்பு, வெல்லம் இதெல்லாம் கொடுப்பார்கள். அதை வைத்து அன்றைய தினம் அனைவருக்கும் சாப்பாடு. நானும் சில தடவைகள் இந்த கோஷ்டியுடன் பாடிக் கொண்டே(?) பொருட்களை சேகரித்த காலம் ஒன்றுண்டு.

அதை விடுங்க. இன்னொண்ணு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். தாஸர் தினத்தை ஒட்டி பாட்டுப் போட்டு நடைபெறும்னு சொன்னேனில்லையா? இதுதான் முக்கியான இடம். மனதை திடப்படுத்திக்கோங்க. அதில் நானும் கலந்து கொண்டு, சோப் டப்பாவில் ஆரம்பித்து, சாப்பாட்டு டப்பா, குத்து விளக்கு வரை பரிசு பெற்றிருக்கிறேன். இருங்க இருங்க.

இதுக்கே ஜெர்க் ஆனா எப்படி? இந்த இடுகையின் கடைசியில் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கு.

இப்போ பாடல்.

***

ராகி தந்தீரா பிக்‌ஷக்கே ராகி தந்தீரா

ராகி கொண்டு வந்தீரா
பிக்‌ஷைக்கு ராகி கொண்டு வந்தீரா

யோக்யராகி போக்யராகி
பாக்யவந்தராகி நீவு (ராகி)

நல்லவராகி, (தானத்தை) கொடுப்பதில் மகிழ்ச்சியுடையவராகி
சகல சௌபாக்கியங்களையும் பெற்று நீங்கள் (ராகி)

அன்னதானவ மாடுவராகி
அன்ன சத்ரவன்னிட்டவராகி
அன்ய வார்த்தையா பிட்டவராகி
அனுதின பஜனெய மாடுவராகி (ராகி)

(தானத்தில் சிறந்த தானமாகிய) அன்ன தானத்தை செய்பவராய்,
பசியால் வாடுபவர்களுக்கு சத்திரத்தை நிறுவியவராய்,
புறம் பேசாமல் இருப்பவராய்,
தினந்தோறும் பகவானின் பெயர் சொல்லி பஜனை செய்பவராய் இருப்பீராக.. (ராகி)

மாதா பிதரனு சேவிதராகி
பாதக கார்யவ பிட்டவராகி
க்யாதியல்லி மிகிலாவதராகி
நீதி மார்கதல்லி க்யாதராகி (ராகி)

தந்தை தாயை மதித்து அவர்களை வழிபடுபவராய்,
யாருக்கும் கெடுதல் செய்யும் காரியங்களை விட்டவராய்,
நீதி நேர்மைக்கு பயந்து அதன்படி நடப்பவராக இருந்து.. (ராகி)

ஸ்ரீ ரமணன சதா ஸ்மரிசுவராகி
குருவிகே பாகோரந்தவராகி
கரெ கரெ சம்சாரா நீகுவராகி
புரந்தர விட்டலன சேவிதராகி (ராகி)

இலக்குமியின் பதியான ரமணனை எப்பொழுதும் நினைப்பவராய்,
(உபதேசம் செய்யும்) குருவின் சொற்படி நடப்பவராய்,
(உங்களுக்கு அமைந்துள்ள) குடும்ப வாழ்க்கையை பொறுப்புடன் நடத்தும் ஒரு இல்லத்தரசனாய்,
அந்த புரந்தர விட்டலனை வணங்குபவாய் இருந்து (ராகி)

***

இந்த பாடலில் ‘ராகி’ என்ற அந்த ஒரு வார்த்தையை வைத்து - பிட்ஷையும் கேட்ட அதே சமயத்தில், தாஸர் மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளதை கவனியுங்கள்.

யோக்யராகி போக்யராகி - இதில்தான் மேலே சொன்ன அந்த ‘இரட்டை அர்த்தம்’. அப்பாடா, தலைப்புக்கு வந்தாச்சு.

சரி என்ன அது இரட்டை அர்த்தம்?

வெயிட். அதையும் பாத்துடுவோம்.

யோக்யராகி -

அ. யோக்யர் + ஆகி = (நீங்க) நல்லவரா இருங்கன்னு சொல்ற அதே நேரத்துலே;
ஆ. யோக்ய + ராகி = நல்ல ராகியை பிட்ஷைக்கு போடுங்கன்னு சொல்ற மாதிரியும் இருக்கு.

அதே மாதிரி -

போக்யராகி -

அ. போக்யர் + ஆகி = (நீங்க) தானத்தை கொடுப்பதில் மகிழ்ச்சியுடைவராக இருங்கன்னு சொல்ற அதே நேரத்துலே;
ஆ. போக்ய + ராகி = (சாப்பிட்டா) மகிழ்ச்சிகொடுக்ககூடிய ராகி பிக்‌ஷைக்கு போடுங்கன்னு சொல்ற மாதிரியும் இருக்கு.

இதில் இரண்டாவது அர்த்தங்களை பாருங்க. நல்ல ராகி கேக்குற மாதிரி - மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கறாரு. நாம முதல் அர்த்தத்தையே எடுத்துக்கிட்டு ’கரையேற’ முயற்சி பண்ணுவோம்.

சரியா?


***

அடுத்து AV பகுதி.

பாம்பே ஜெயஸ்ரீயின் அருமையான ஆலாபனையுடன் ராகி தந்தீரா:



விசாகா ஹரியின் சுந்தரகாண்ட கதையின் நடுவே இந்த பாடல்:



அடுத்து நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஒலித்துண்டு. பயந்து ஓடாமே கேளுங்க. அந்த புரந்தரவிட்டலன் உங்களுக்கு மனவுறுதியை தரட்டும்.




ஒலித்துண்டு சரியா ஓடலேன்னா, இங்கே போயும் கேக்கலாம்.

***

நாரதரின் மறுஅவதாரமாக கருதப்படும் புரந்தரதாஸரின் ஆராதனை தினம் நாளை மறுநாள் (2/2) அன்று வருகிறது. நாளை இன்னொரு சிறப்பு பதிவும் இங்கு வரும்.

அதுவரை -

ஜெய ஜெய விட்டல ! பாண்டுரங்க விட்டல !!
ஜெய ஜெய விட்டல ! புரந்தர விட்டல !!

**

பிகு: இப்போ (முதல்லே சொல்லாமல் விட்ட) தீர்ப்பு.

இரட்டை அர்த்தத்தில் பேசலாம்.
பேசலாம். பேசலாம்.

ஆனா, ரெண்டு அர்த்தமும்
நல்ல அர்த்தமா இருக்கணும்.

இதுதான் தீர்ப்பு.

****

3 comments:

குமரன் (Kumaran) said...

நாட்டாமை தீர்ப்பை மாத்த வேணாம். நல்ல தீர்ப்பு! :-)

நாடி நாடி நரசிங்கா! said...

அடுத்து நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஒலித்துண்டு. பயந்து ஓடாமே கேளுங்க. அந்த புரந்தரவிட்டலன் உங்களுக்கு மனவுறுதியை தரட்டும்.

:))

Hai how to download this song.(mp3 formet)

சின்னப் பையன் said...

வணக்கம் திரு.ராஜேஷ். mp3 தேடிப் பாக்கிறேன். நான் எப்பவுமே இணையத்திலிருந்து அப்படியே கேக்கறதுதான்.