Friday, January 28, 2011

கதவைத் திறந்து தரிசனம் தருவாய் கிருஷ்ணா!


உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில். காலை வேளை பூஜைகள் முடிந்து பாலகிருஷ்ணன் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கிறான். ஒரு கையில் மத்து, இன்னொரு கையில் புல்லாங்குழலுடன், நாளொரு அர்ச்சனையும் பொழுதொரு அலங்காரமுமாய் இருக்கும் ச்சின்ன கிருஷ்ணன் இதழோரம் புன்னகைத்துக் கொண்டு தன்னை காண வருவோரை பார்த்தவாறு நின்றிருக்கிறான்.


அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதே அகிலம் மதுரம்

மதுரா நகரின் தலைவனே, கண்ணனே, உன் உதடுகள், முகம், கண்கள், புன்னகை, இதயம், நடை ஆகிய அனைத்தும் மிக இனிமையாக இருக்கின்றது.


குழந்தைகள் என்றாலே ஆச்சரியம்தான். அதுவும் அந்த பகவானே குழந்தையாய், குறும்பு சிரிப்போடு நின்றிருக்கையில், பக்தர்களுக்கு சன்னிதியை விட்டு விலகவும் மனம் வருமோ? கோயிலுக்கு வருவோரும் திரும்பிச் செல்ல மனமில்லாமல் அவனழகில் மனதை பறி கொடுத்தவாறு நின்றிருக்கிறார்கள்.

அப்போது கோயிலுக்கு பின்புறம் ஏதோ சத்தம். யாரோ கனகதாஸராம். கிருஷ்ணனை தரிசிக்க வந்திருக்கிறாராம். ஆனால், அவர் இடையர் குலமாகையால் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டு பின்பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார். பக்த கனகதாஸர் மிகவும் வருத்தமுற்று, கோயிலுக்குள் செல்ல வேண்டி கிருஷ்ணனை துதித்தவாறு உள்ளார்.

ஆமா, இந்த கனகதாஸர் என்பவர் யார்? அதை முதலில் பார்ப்போம்.

**


த்வைத சித்தாந்தத்தை நிறுவிய மத்வரின் வழிவந்த ஸ்ரீ வாதிராஜர் மற்றும் ஸ்ரீ வியாஸராயர் வாழ்ந்த காலத்தில் [16ம் நூற்றாண்டு] வாழ்ந்து, அந்த பரம்பொருள் மேல் பற்பல பாடல்கள் இயற்றி, பக்திமணம் பரப்பியவர்தான் ஸ்ரீ கனகதாஸர். காகிநெலெ என்னும் ஊரில் உள்ள ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு வந்த ஸ்ரீ கனகதாஸர் எண்ணற்ற பாடல்களையும், புத்தகங்களையும் நமக்கு அளித்துள்ளார். தன் எல்லா பாடல்களிலும் கடைசி வரியாக தன் இஷ்ட தெய்வமாகிய ‘காகிநெலெ ஆதிகேசவ’ என்னும் நாமத்தை பாடி அனைத்தையும் அந்த ஆதிகேசவனுக்கு அர்ப்பணம் செய்தவர். ஸ்ரீ புரந்தரதாஸரைப் போலவே இவரது பாடல்கள் அனைத்தும் கன்னடத்தில் அமைந்துள்ளன.


தன் குரு ஸ்ரீ வியாஸராயரின் விருப்பப்படி, கிருஷ்ணனை தரிசிக்கும் வண்ணம் உடுப்பி வந்திருக்கிறார். அப்போதுதான் மேற்சொன்ன சம்பவம்.

**

கோயிலுக்குள் அனுமதி கிடையாது, கிருஷ்ணன் வெளியே வரும்போது பார்த்துக்கொள் என்று சொன்ன அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல், ஸ்ரீ கனகதாஸர் கிருஷ்ணனை வேண்டி பாட ஆரம்பிக்கிறார்.

பாகிலனு தெரது சேவெயனு கொடு ஹரியே
கூகிதரு த்வனி கேளலில்லவே நரஹரியே (பாகிலனு)

உன் திருக்கதவைத் திறந்து தரிசனம் தருவாய் ஹரியே
நான் கூப்பிடுவது உன் காதில் விழவில்லையா, நரஹரியே...

பரமபததொளகே விஷதரண தல்பதல்லி நீ
ஸ்ரீ சஹித க்‌ஷீரவாரிதியொளிரலு
கரிராஜ கஷ்டதல்லி ஆதிமூலாயெந்து
கரெயலாக்‌ஷண பந்து ஒதகிதயோ நரஹரியே (பாகிலனு)

பரமபதத்தில் (வைகுண்டத்தில்) ஆதிசேஷன் மேல்
இலக்குமியுடன் நீ அமர்ந்திருக்கையில்
கஷ்டத்தில் இருந்த கஜேந்திரன் ஆதிமூலா என்று
கூப்பிட்ட அந்த நொடியில் வந்து காப்பாற்றிய நரஹரியே (பாகிலனு)

கடுகோபதிம் களனு கட்கவனெ பிடிது
நின்னொடெய எல்லிஹனெந்து நுடியே
த்ருட பகுதியல்லி சிசுவு பிடதே நின்னனு பஜிஸே
சடகரதி ஸ்தம்பதிந்தொடதே நரஹரியே (பாகிலனு)


கடும்கோபத்தில் இருந்த மன்னன் (இரண்யகசிபு) தன் வாளை எடுத்து
உன் கடவுள் எங்கே என்று வினவ
உன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அந்த சிறுவன் (பிரகலாதன்) உன்னை வணங்கி வழிபடும்போது
அந்த தூணை உடைத்து வெளிவந்து அவனை ரட்சித்த நரஹரியே (பாகிலனு)

யமசுதன ராணிகே அக்‌ஷயவசனவானித்தே
சமயதல்லி அஜாமிளன பொரெதே
சமயாசமயவுண்டே பக்தவத்சல நினகே
கமலாக்‌ஷ காகிநெலெ ஆதிகேசவனே (பாகிலனு)

யமதர்மனின் மகனாகிய தர்மனின் மனைவிக்கு (த்ரௌபதி) முடிவில்லாத ஆடையை கொடுத்தாய்
தன் கடைசி காலத்தில் ‘நாராயணா’ என்றழைத்த அஜாமிளனுக்கும் அபயமளித்தாய்
உன் பக்தர்கள் கஷ்டப்படும் சமயத்திலெல்லாம் தவறாது வந்து அவர்களை
காப்பாற்றிய பக்தவத்ஸலனே
காகிநெலெ ஆதிகேசவனே (பாகிலனு)

**

இப்படி ஸ்ரீ கனகதாஸர் தன் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அந்த கண்ணனே ஆயர்குலத்தில் உதித்தவனாயிற்றே, அவன் தன் தாஸனாகிய கனகதாஸருக்கு தரிசனம் கொடுக்காமல் இருப்பானா? தன் பக்தன் உள்ளே வரமுடியாவிட்டால் என்ன, நானே அவனை நோக்கிப் போவேன் என்று சொல்லி, அதுவரை கிழக்கு நோக்கி நின்றிருந்த கண்ணன், நம் கனகதாஸருக்காக மேற்கு நோக்கி திரும்பினான். அப்படியும் தாஸருக்கு தரிசனம் எப்படி கிட்டும்? நடுவில் சுவர்கள் உள்ளனவே? படார்.. படார். சுவர்கள் உடைந்தன. தடைகள் நீங்கின. தாஸருக்கு அற்புதமான தரிசனத்தை வழங்கினான் கிருஷ்ணன்.

தாஸருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கண்கள் புஷ்பவாரி பொழிந்தன. கிருஷ்ணா கிருஷ்ணா என்ற கோஷங்கள் விண்ணை முட்டின. தன் பக்தனின் மகிமையை உலகுக்கு உணர்த்தினான் அந்த பக்தவத்சலன்.

அந்த சுவர் இருந்த இடத்தில் ’கனகன கிடுக்கி’ - கனகனின் ஜன்னல் என்று அழைக்கப்படும் ஒரு ஜன்னல் வைக்கப்பட்டு அதன் வழியே மட்டும் பக்தர்கள் அனைவரும் தன்னை காணவேண்டுமென்று சொன்னான் கண்ணன். அதேபோல் இன்றளவும் ஒரு சிறிய ஜன்னல் மூலமாகவே கண்ணனை தரிசிக்கிறார்கள் பக்தர்கள்.

**


‘கனகதாஸர்’ என்ற திரைப்படத்தில் ராஜ்குமார் நடித்து P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியுள்ள இதே பாடல் இதோ.
**

மேற்கண்ட காணொளியில் ’ஜன்னல்’ சரியா தெரியலியேன்னு கேட்பவர்களுக்கு, இன்னொரு பாடல் காணொளி. ‘இந்து எனகே கோவிந்தா’ என்ற இந்த பாடலின் விவரம் இன்னொரு இடுகையில் வரும். இங்கே போட்டிருப்பது அந்த ஜன்னல் வழியே கிருஷ்ணனை எப்படி பார்ப்பது என்று காட்ட மட்டுமே.**

பக்தர்கள் வேண்டுகோளை பக்தவத்சலன் நிறைவேற்றுவான் என்று காட்டிய கனகதாஸரின் பிற பாடல்களை அடுத்துவரும் இடுகைகளில் பார்க்கலாம்.

**

4 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அருமை! அருமையான ஜன்னல் வழி தரிசனம்! அதுவும் தாசர் நாமாக்கள் வழியாக!

தாச-சாகித்யங்கள் (தாச பாசுரம்) ஒவ்வொன்றும் ஊனை உருக்கும் உள்ள மொழிகள்!
கன்னடத்தில் தனியான இலக்கிய வகை! ஆழ்வார் பாசுரங்களைப் போலவே!

அதை இங்கே தொகுத்தளிக்கும் முயற்சிக்கு, அடியேன் சார்பிலும், முருகனருள்-கண்ணன்பாட்டு வலைப்பூ அன்பர்கள் சார்பிலும் இனிய வாழ்த்துக்கள்! தாச பாசுரங்கள் மணம் பரப்பட்டும்!

ஜன்னல் வழிக் குட்டிப்பையன் அறிமுகத்துக்கு நன்றி ச்சின்னப்பையன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சமயா சமயவுண்டே பக்தவத்சல நினகே//

இது தான் எத்தனை ஆழமான கன்னடம் துள்ளும் நன்னட வரி?
சமயா சமயவுண்டே-வாம்!
அதாச்சும் அன்பர்களைக் காப்பாற்ற சமயம் வரும்...சரி, அது என்ன சமயா சமயம்? ரெண்டு சமயம் சொல்றாரு?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கனகதாசர் சும்மாப் பாடலை! கனக வரிகள் அவை!
சும்மா கற்பனை செஞ்சிப் பாருங்க...

ஆனை அலறியது! இந்த மலரை உனக்கு இன்று தர முடியலையே! ஆதிமூலமே என்றது! ஆனால் அவன் வர இயலவில்லை! முதலை வாயில் போனது!

கோவிந்தா என்று அலறினாள்! இங்கு இனி யார் மேலும் நம்பிக்கை இல்லை, கணவர்-குரு-பெரிய தாய் தந்தையர்! நீ ஒருவனே தஞ்சம் என்றாள்! ஆனால் ஒன்றும் நடக்கவில்லை! அசிங்கப்பட்டாள்! சபை சிரித்தது!

எங்குமளன் கண்ணன் என்றான் சிறுவன்! மாங்கா மடையா, தூணில் உள்ளானா அதை மட்டும் சொல்! உள்ளான்! உடைத்தான்! ஒன்னும் நடக்கவில்லை! குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே-ன்னு மகனை ஒரே வீச்சால் வெட்டினான்!

இப்படியெல்லாம் ஆகியிருந்தால் என்ன நடந்து இருக்கும்? எம்பெருமான் கேலிப் பொருளாய்ப் போய் இருப்பான்!
எனவே, இது யாருக்குச் சமயம்? அடியவர்க்கு வந்த சோதனையா? இல்லை...எம்பெருமானுக்கு வந்த சோதனை! "சமயா சமயம்"

அன்பர்களுக்குச் சோதனை வந்த = சமயம்
எம்பெருமானுக்குச் சோதனை வந்த = சமயம்
அதான் சமயா சமயம்!!

அதைக் கனக தாசர் ஒரே வரியில் பாடிக் கரைகிறார் பாருங்கள்! சமயாசமயம் உண்டே! பக்த வத்சல நினகே! நினகே!

கனகதாசர் திருவடிகளே சரணம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அன்பர்களுக்குச் சோதனை வந்த = சமயம்
அது எம்பெருமானுக்கே சோதனை வந்த = சமயம்
அதான் சமயா-சமயம்!!
சமயாசமயம் உண்டே! யாருக்கு? = பக்த வத்சல நினகே! நினகே!

ஏ எம்பெருமானே
* ஆனை அசிங்கப்படாது! சாகும்!
* பெண் அசிங்கப்பட்டாலும், செத்து விடுவாள்!
* குழந்தை "அசிங்கம்-அசிங்கமில்லை" என்றால் என்னென்னே அதற்குத் தெரியாது, ஐயோ அவர் வரலையே வரலையே-ன்னு ஏங்கிச் செத்து விடும்!

ஆனால் அசிங்கப்பட்டு, என்றும் இருக்கப் போவதும் யார்? = நீ தான்! நினகே!
அதனால் இந்தச் சமயாசமயம் உனக்குத் தான்! சமயா சமயம் பக்தவத்சலா நினகே நினகே!