Sunday, April 10, 2011

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பது,

எல்லா குழந்தைகளும் ஒருவராகவே தெரிவது -

இந்த மாயையெல்லாம் இறைவன் எப்போது காட்டுகிறார்?

டக்குன்னு சொல்லிடுவீங்க.

சிறுவனாக மாயைகளை காட்டுவதும்; பின்னாளில் (கீதையை உபதேசித்து) மாயைகளை நீக்குவதும் கிருஷ்ண அவதாரத்தில்தானே. இதைத்தான் நம்ம விசாகா ஹரி எப்படி அருமையா சொல்றாங்கன்னு ஒரு தடவை கேட்டுடுங்க.

http://www.youtube.com/watch?v=eHA9oKVxkFw

நிற்க.

இந்த மாயாஜாலங்களை கிருஷ்ண அவதாரத்துக்கு ரிசர்வ் செய்து வைத்திருந்தாலும், ரொம்ப நாளைக்கு முன், ராமாவதாரத்திலேயே நமக்கு ஒரு ச்சின்ன முன்னோட்டம் கிடைத்து விடுகிறது.

அட, அது எப்படி?

அதுதான் இன்றைய பாடல். ஸ்ரீ புரந்தரதாசருடையது.

***

ராம ராவண யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திரஜித் மரணமடைந்த தருணத்திற்கு வருவோம். ராவணன் தன்னுடைய core சேனையை யுத்தத்துக்கு அனுப்புகிறான். இந்த சேனையில் இருக்கும் ஒவ்வொருவரும் ராவணன் அளவுக்கு பலம் வாய்ந்தவர்கள். இந்த சேனை நகர்ந்து வரும்போது தூசி பறந்து அந்த இடத்தையே மறைத்ததாம். ஈட்டிகளின் உரசல்கள் காட்டுத்தீ அளவுக்கு தீயை வளர்த்ததாம்.

எண்ணிக்கையில் மிகவும் அதிகமான இந்த ராவண சேனையைக் கண்டு, வானர சேனைகள் பயந்து ஓடின. சுக்ரீவன், நீலன், அங்கதன் ஆகியோர் வானர சேனையை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அவர்களால் முடியவில்லை. மெல்ல மெல்ல ராவண சேனை, வானரர்களை அழித்துக் கொண்டே வந்து, ராமனையும் நெருங்கியது.

தனியொருவனாக ராமன், மிகப்பெரிய ராவண சேனையை எப்படி எதிர்கொள்வான்? அவனால் முடியுமா, முடியாதா என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, ராமன் யுத்தத்தை துவக்குகிறான். ராமன் விட்ட அம்புகள் மழை போல் தொடர்ந்து சென்று ராவண சேனைகளை அழிக்க ஆரம்பித்தன. எப்போது அம்பை எடுக்கிறான், எப்போது வில்லில் தொடுக்கிறான், எப்போது அதை விடுவிக்கிறான் என்பதே தெரியாமல் மிகமிக வேகமாக யுத்தம் செய்கிறான் ராமன்.

ஆனாலும், ராவண சேனைகள் மிக அதிகமான எண்ணிக்கையில் இருப்பதால் வேறொரு உபாயம் செய்தே அவர்களை முடிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இப்போதுதான், மேலே சொன்ன அந்த 'முன்னோட்டம்' வருகிறது.

பூம்.
திடீரென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து வீரர்களும், மற்றவர்களுக்கு ராமனைப் போலவே காட்சி தருகின்றனர். இங்கே பார்த்தால் ராமன். அங்கே ராமன். யாரைப் பார்த்தாலும் ராமனைப் போலவே தெரிகிறது. யுத்தகளத்தில் இடமே இல்லாமல், எல்லா இடத்திலும் ராமன். திடீரென்று எப்படி இவ்வளவு ராமன் வந்தான் என்று அனைவருக்கும் குழப்பம்.

ராவண சேனைகளுக்கு பயங்கர கோபம். ராமனாக தெரிபவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். அதாவது தங்கள் சேனையிலிருப்பவர்களையே கொன்றனர். இப்படியே எதிரிகள் தங்களை தாங்களே கொன்று அழிய ஆரம்பித்தனர்.

இந்தப் பக்கம், வானரர்கள். ஒரே ஒரு ராமன் இருந்தாலே அவனுக்கு சேவைகள் செய்து மகிழ்பவர்கள். இப்போது பற்பல ராமன்கள். ஆனந்தம் தாங்கவில்லை அவர்களுக்கு. ஆடுகின்றனர். பாடுகின்றனர். தலைகால் புரியவில்லை. இப்படி அனைத்து ராவண சேனையும் அழிந்தபிறகு, ராமன் இந்த மாயையை நிறுத்தி, மறுபடி ஒருவனாக நின்றான். ராமாயணத்தில் வரும் இந்த யுத்தக் காட்சியை, ஸ்ரீ புரந்தரதாசர் அப்படியே தன எளிமையான கன்னடத்தில் பாடியிருக்கிறார்.

***

அல்லி நோடலு ராம இல்லி நோடலு ராம

எல்லெல்லி நோடிதரல்லி ஸ்ரீ ராம

அங்கு பார்த்தாலும் ராமன் இங்கு பார்த்தாலும் ராமன்

எங்கெங்கு பார்த்தாலும் அங்கு ஸ்ரீ ராமன்

ராவணன மூலபல கண்டு கபிசேனே

ஆவாகலே பெதரி ஓடிதவு

ஈவேளே நரனாகி இரபார தென்தெணிசி

தேவ ராமச்சந்திர ஜகவெல்ல தானாத (அல்லி)

ராவணனின் முக்கிய படையினரின் பலத்தைப் பார்த்த வானர சேனைகள் உடனடியாக அடித்துப் பிடித்து ஓடியது இனிமேல் (சாதாரண) மனிதனாக இருக்கக்கூடாது என்றெண்ணிய ராமன் உலகம் முழுக்க அவனே வியாபித்தான். (பற்பல அவதாரங்கள் எடுத்தான்).

அவனிகே இவ ராம இவனிகே அவ ராம

அவனியோள்ளுபரி ரூப உண்டே

லவ மாத்ரதி அசுர துருவலெல்லரு

அவரவர் ஹோடெதாடி ஹதராகி ஹோதரு (அல்லி)

அவனுக்கு இவன் ராமன் இவனுக்கு அவன் ராமன் உலகத்தில் ராமனைத் தவிர இன்னொரு ரூபமும் உண்டோ இது நடந்த உடனே, அசுரர்களின் பக்கத்தில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு வீழ ஆரம்பித்தனர்

ஹனுமதாதி சாது ஜனரு அப்பி கொண்டு

குணிகுனி தாடிதரு ஹருஷ திந்தா

க்ஷண தல்லி புரந்தர விட்டல ராயனு

கொனேகொனேயனு தானொப்பனாகி நிந்தா (அல்லி)


அனுமன் முதலாத வானர சேனைகள் (ஒருவரையொருவர்) கட்டிப் பிடித்துக் கொண்டு குதித்து குதித்து ஆடினர் சந்தோஷத்துடன் உடனே (ஒரு நிமிடத்தில்) புரந்தர விட்டலனான ஸ்ரீ ராமன் தன் அனைத்து ரூபங்களையும் மறைத்துக் கொண்டு ஒருவனாகி நின்றான்.


***


Dr.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தன் அருமையான குரலில் இந்த பாடலை பாடியிருக்கிறார்.
**Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள் பாடியது.
***


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!


***


1 comment:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அங்கு-காணினும் ராகவா, இங்கு-காணினும் ராகவா!
எங்கெங்கு காணினும் என் ராகவா ராகவா!

இலங்கை மாயப் படைகண்டு கலங்கிய நம் சேனைகள்
இடறி மிடறி, கதறி உதறி, இருண்டு போய் ஓடவே
இனி மனித உருவினால், இயலுமோ போர்க் களம்
தனி மனித ராகவன் படை முழுதும் ஆகினான்!

அவனுக்கு இவன் ராகவன், இவனுக்கு அவன் ராகவன்!
அமர் மொத்தம் ராகவன், அங்கே சமர் மொத்தம் ராகவன்!
அவரோ என்றிவர் வீழ்த்த, இவரோ என்றவர் வீழ்த்த
அவரே அவரை வீழ்த்த, அரக்கர் மொத்தம் வீழவே!

அனுமன் அகம் மகிழ, அமர்வீரர் அகம் மகிழ
அணுகின அத்தனையும், அனந்த ராமன் ஆனதே!
அணுப் பொழுதில் புரந்தர விட்டலனின் இராகவன்
அணுவுக்குள் அணுவாகி ஒன்றாகி நின்றனன்!

அங்கு-காணினும் ராகவா, இங்கு-காணினும் ராகவா
எங்கெங்கு காணினும் என் ராகவா ராகவா!!!

இனிய இராம நவமி வாழ்த்துக்கள், தாசர் பாட்டு அன்பர்கள் அனைவருக்கும்!