Tuesday, June 21, 2011

அஜாமிளன் என்ன உன் அக்கா மகனா?தாசர்கள் ஸ்ரீமன் நாராயணனை குழந்தையாக, மகனாக, தோழனாக, தகப்பனாக - இப்படி பல்வேறு ரூபங்களில் நினைத்து பாடியிருக்கின்றனர். ஒவ்வொன்றிலும் அந்த உறவிற்கேற்ப - கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல், அதட்டல் என்று பாடும் தொனி மாறும்.

திருப்பதி வேங்கடரமணனிடம், தாசர், தனக்கு தரிசனம் / மோட்சம் தரவேண்டி பல நாட்களாய் வேண்டிக் கொண்டிருக்கிறார். பல்வேறு பாடல்கள் பாடுகிறார். இறைவனுக்கு சேவை செய்கிறார். அப்படியும் இறைவன் வரவில்லை. இவருக்கு கோபம் (மாதிரி!) வந்துவிடுகிறது. அதெப்படி எனக்கு கருணை காட்டாமல் போகலாம்? பல்வேறு சமயங்களில் பல பேருக்கு கருணை
/ தரிசனம் தந்திருக்கிறாயே, ஹரியே, எனக்கு மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறாய்? என்று உதாரணங்கள் காட்டி ‘நானேன மாடிதேனொ’ என்று இறைவனை தோழனாக வரித்து, உரிமையுடன் கோபமாக பாடுகிறார்.

இப்படி கோபப்பட்டு, கடவுளை திட்டுகிறா மாதிரி பாடுவதை ‘நிந்தா ஸ்துதி’ என்று அழைக்கிறார்கள்.

சரி. அது என்ன உதாரணங்கள்?

திரௌபதி தேவி, அகலிகை, துருவன், குசேலன் - இப்படி பல்வேறு உதாரணங்களை சொன்னாலும், highlightஆ ஒண்ணு சொல்றாரு தாசர். அஜாமிளன். தன் வாழ்நாள் முழுக்க பாவ காரியங்களை செய்தவனாகிய அஜாமிளன், மரணப்படுக்கையில், தன் கடைசி மகனான நாராயணனைக் கூப்பிட்டதால், மோட்சத்துக்கு சென்றான். நான் இப்படி கஷ்டப்பட்டு உனக்கு தினமும் சேவை செய்கிறேன். ஆனா நீ என்னடான்னா, எதுவுமே கேட்காத, எதுவுமே (சத்காரியங்கள்) செய்யாத அந்த அஜாமிளனுக்கு முக்தியைக் கொடுத்தாய். அவன் என்ன உனக்கு அக்கா மகனா? என்று கேட்கிறார்.

வாங்க. அந்த பாட்டையும் பொருளையும் பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சிடும். மிகமிகமிக அற்புதமான பாடல்.

***

நானேன மாடிதேனோ ரங்கய்யா ரங்கா
நீ என்ன காய பேகோ (நானேன)


நான் என்ன (பாவம்) செய்தேன், ரங்கா
நீ என்னை காப்பாற்ற வேண்டும் (நானேன)

மானாபி மானவு நின்னது எனகேனு
தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா (நானேன)


(பக்தர்களுக்கு காட்டும்) அன்பு, பாசம் முதலியன உன்னுடையது எனக்கென்ன++
தீன ரக்‌ஷகனே திருப்பதி வேங்கடரமணா (நானேன)

கரிராஜ கரெசிதனே த்ரௌபதி தேவி
பரெதோலே களுஹிதளே
ஹருஷதிந்தலி ரிஷிபத்னிய சாபவ
பரிஹரிசிதேயல்லோ (நானேன)


துரியோதனன் கூப்பிட்டு (அவமானப்படுத்தியபோது) திரௌபதி தேவி
கடிதமா எழுதி அனுப்பினாள்?
(கூப்பிட்ட நேரத்திற்கு வந்து காப்பாற்றினாயல்லவா?)
ஒரு நிமிடத்தில் ரிஷிபத்தினியின் (அகலிகை) சாபத்தை
போக்கினாய் அல்லவா? (நானேன)

ரக்கசசூதனனே கேளோ
த்ருவராயா சிக்கவனல்லவேனோ
உக்கிபருவா கர்மா மாடித அஜாமிள
நின்னக்கன மகவேனோ (நானேன)


அரக்கர்களை அழித்தவனே கேளாய்
துருவ மகாராஜா சின்னப்பையன்தானே?
மறுபிறவி எடுக்கும்படியான பாவத்தை செய்த அஜாமிளன்
(அப்படி எடுக்காமல் மோட்சத்தை கொடுத்து காப்பாற்றினாயே)
அவன் என்ன உன் அக்கா மகனா? (நானேன)

முப்பிடி அவலக்கியா தந்தவனிகே
வப்புவந்தே கொடலில்லவே
சர்ப்பசயன ஸ்ரீ புரந்தரவிட்டலா
அப்ரமேய காயோ (நானேன)


மூன்று பிடி அவல் தந்தவருக்கு
உலகிலுள்ள அனைத்து செல்வங்களையும் நீ கொடுத்தாய் அல்லவா?
சர்ப்பத்தின் மேல் சயனித்திருக்கும் புரந்தர விட்டலனே
இறைவனே (எண்ணிக்கையில் அடங்காதவனே) என்னைக் காப்பாற்று (நானேன)

***

இணையத்தில் இந்த பாடல் சரியாக கிடைக்கவில்லை. ஊரில் taperecorder cassetteலும், என் நினைவில் மட்டுமே இருப்பதால், கிடைத்ததை போட்டிருக்கிறேன். ஒரு பத்தியும் மிஸ்ஸு. பஞ்ச் லைனையும் (தலைப்பு) மாத்தி பாடிட்டாங்க.

ஆனாலும் கேட்கலாம். நல்லாவே பாடியிருக்காங்க.

***

++நான் பக்தவத்சலன் - அதாவது பக்தர்களை அரவணைத்து காப்பாற்றுவேன் என்று நீயே கூறியிருக்கிறாய். அதனால் உன் வாக்குப்படியே நீ என்னை காப்பாற்றி ஆகவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அதைப் பற்றி கவலைப்படுபவன் நீதானேயன்றி நானில்லை.

***

தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா!

***

9 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவன் என்ன உனக்கு அக்கா மகனா?//

ஏன் மாமன் மகன், அத்தை மகன்-ன்னு பாடாம, குறிப்பிட்டு அக்கா மகன்-ன்னு பாடணும்? யோசித்தீர்களா?:)

அத்தை மகன்=அருச்சுனன்!
அக்கா மகன்=யாரு? :)

Anonymous said...

KRS,

கண்ணன் அக்கா சுபத்ரா.
சுபத்ராவின் மகன் அபிமன்யு.

சரிதானே?

ஆனா, நீங்க கேட்ட kELvikkaana பதிலை நீங்களே சொல்லிடுங்க.

--சத்யா

ச்சின்னப் பையன் said...

test

குமரன் (Kumaran) said...

ஆமாம். ஏன் அக்கா மகன்னு சொன்னார்? தெரியலையே?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கண்ணன் அக்கா சுபத்ரா.
சரிதானே?//

தவறு!:)
கண்ணன் தங்கை=சுபத்திரை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்ணனுக்கு முன்பே பிறந்த பொண்ணு தானே அக்கா?
யாரு பொறந்தா அப்படி = மாயா என்னும் காத்யாயினி தேவி(துர்க்கை)
அப்படீன்னா அக்கா மகன் = துர்க்கையின் மகன் = என் முருகன்!:)

முருகனை, மால் மருகன் என்று அழைப்பதில் அருணகிரி முதற்கொண்டு அத்தனை பேருக்கும் தனி சுகம்!

தனிப் பாசத்துக்குரிய மருகன் = அக்கா மகன் = முருகன்!
இது என் கற்பனையில் சும்மா உதிச்சது!:)
தாசர் முருகனை எண்ணித் தான், அவன் என்ன உன் செல்லமான அக்கா மகனா? என்று கேட்டாரா-ன்னு தெரியாது:)

குமரன் (Kumaran) said...

சுபத்ரா, விஷ்ணுமாயா/காத்யாயனி/துர்கை - ரெண்டு பேருமே தங்கைகள் தான்; கண்ணனுக்கு அக்கா இல்லை. தாசர் சொல்ற அக்கா மகன் வேற யாரோ?!

அபிமன்யுன்னு சொல்ல முடியலை. அவன் பொறக்குறதுக்கு முன்னாடியிருந்தே அவனைத் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மாமன் தானே இவன்?! (அதனால தான் அபிமன்னனுக்கு பெரும்புகழ் கிடைச்சதுன்னு தெரியும் தான்!)

இரவிசங்கர் வேணும்னா முருகன்னு சொல்லிக்கட்டும்! :-)

Lalitha Mittal said...

"செங்கண்மால் திருத்தங்கச்சி"=அபிராமி==துர்க்கை =விஷ்ணுமாயா

"ஆதிமூலம்"=விஷ்ணு

அஜாமிளனைப்பற்றி பாடுகையில் நம் "வள்ளியமுதனை"பற்றி தாசர் குறிப்பிடுவார் என்று தோன்றவில்லை.

தாசரின் உரிமைக்குரல் ஓங்கியொலிக்கும் பாட்டு அருமை!

Narayanan Varagooran said...

https://www.youtube.com/watch