Thursday, February 21, 2013

எப்போதும் ஹரியை நினை மனமே!



அஜாமிளன். துவக்கத்தில் ஒரு நல்ல பக்தனாக இருந்து தினசரி பூஜைகளெல்லாம் செய்து வந்தவர். நடுவில் மதி மயங்கி, அனைத்தையும் மறந்து வேறொரு பெண்ணின் பின்னால் திரிந்து வாழ்ந்தார். தன் இறுதிக் காலத்தில் அவரை அழைத்துப் போக எமதூதர்கள் வந்து நின்றிருந்தபோது, கடைசி மகனை ‘நாராயணா’ என அழைத்த நேரத்தில் உயிர் பிரிந்ததால், நாராயணனின் தூதர்கள் வந்து அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துப் போனார்கள் என்று சொல்வார்கள்.

அப்படின்னா, நாம ஏன் வாழ்நாள் முழுக்க நாராயணனை நினைக்கணும்? அவன் பெயரை சொல்லணும்? அஜாமிளன் மாதிரி கடைசி காலத்தில் மட்டும் சொன்னால் போதுமேன்றவங்களுக்கு தாசர் ஒரு தனி பாடலில் - தம்பி, அப்படி முடியாது. அந்த நேரத்தில் உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்கிறார். அந்த பாட்டு வேறொரு நாளில். இன்றைய பாட்டு வேறே.

இன்னிக்கு தாசர் சொல்றது - எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டேயிரு; அதுவே மோட்சத்திற்காக சுலபமான வழி என்கிறார். அதற்கு அவர் சொல்கிற உதாரணங்கள்,  நாம அடிக்கடி, எல்லா பாடல்களிலேயும் பார்க்கிற உதாரணங்கள்தான். கஜேந்திரன், திரௌபதி, மேலே பார்த்த அஜாமிளன் இப்படி. ’ஹரி ஸ்மரணே மாடோ’ என்ற இந்தப் பாட்டு மிகவும் புகழ்பெற்றது. யூட்யூபில் தேடினால் பற்பல பாடகர்கள் பாடியுள்ளதாக காணொளிகளை காணலாம்.

ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர
பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டே இரு
மோட்சத்திற்கு இதுதான் கண்டிப்பான வழி பாரு (ஹரி)

துரித கஜக்கே கண்டீரவ எனிசித
சரணாகத ரக்‌ஷக பாவன நீ (ஹரி)

கஷ்டத்தில் இருந்து பிளிறிய கஜேந்திரனுக்கு விரைவாக
சரணாகதி கொடுத்து ரட்சித்தவனை நீ (ஹரி)

ஸ்மரணேகைத ப்ரஹ்லாதன ரக்‌ஷிஸித 
துருள ஹிரண்யகன கரவ சீளித
தருணி த்ரௌபதி மொரெயிடதாக்‌ஷண
பரதிந்தாக்‌ஷயவிட்ட மஹாத்மன (ஹரி)

எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருந்த பிரகலாதனை ரட்சித்து
ஹிரண்யகசிபுவின் கையை முறித்து
(காப்பாற்று என்று) த்ரௌபதி முறையிட்ட அதே நொடியில்
முடிவில்லாத ஆடையை வழங்கிட்ட மகாத்மாவான (ஹரி)

அந்து அஜாமிள கந்தன கரெயலு
பந்து சலஹி ஆனந்தவ தோரித
ஸ்ரீஷ புரந்தர விட்டல ராயன
சிருஷ்டிகொடேயன முக்தி பஜிஸி நீ (ஹரி)

அன்று அஜாமிளன் தனது மகனை கூப்பிட்டபோது
உடனே வந்து அவனுக்கு ஆனந்தத்தை காட்டிய
ஸ்ரீபதியான புரந்தர விட்டலனிடம்;
பிறப்பை தருபவனிடம், முக்தியை வேண்டி பாடல்களைப் பாடி நீ (ஹரி)

***

இந்தப் பாடலை மிகவும் பக்தியுடன் அழகாகப் பாடியிருக்கும் திரு.வித்யாபூஷணர்.


நடுவில் ஒரு பத்தியை விட்டுப் பாடியிருக்கும் எம்.எல்.வி. அம்மா.

***
038/365


Monday, February 18, 2013

எழுந்தருள் எழுந்தருள் கோவிந்தா!



திருப்பதியில் தினமும் அந்த ஏழுமலையானை எழுப்பும் எம்.எஸ்.அம்மா பாடும் சுப்ரபாதம் ஆகட்டும், அதையே தமிழில் மொழிபெயர்த்து வந்திருக்கும் திருப்பள்ளியெழுச்சி ஆகட்டும், கேட்கும்போதே எவ்வளவு இனிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது. நாராயணனின் அவதாரங்கள், லீலைகள், பெருமைகள் என அனைத்தையும் பாடியுள்ள தாசர்கள், அந்தக் கண்ணனை தாலாட்டு பாடி தூங்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், தூங்கும் இறைவனை எழுப்பும் சுப்ரபாத பாடல்களையும் பாடியுள்ளனர்.

ஒரு வருடம் கழித்து மறுபடி பதிவுகளைத் துவக்கும் இந்த நாளில், இறைவனை எழுப்பி, நம்மை பார்த்து அருளுமாறு கேட்போம். யுத்தத்திற்கு உதவி செய்ய அழைக்க வந்த அர்ஜுனன், தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனின் காலடியில் அமர்ந்து, அவனுடைய முதல் பார்வை தன் மேல் பட்டதாலேயே, தான் வேண்டிய வரத்தைப் பெற்றான் என்பது போல், நாமும் அவன் காலடியில் அமர்ந்து, இந்த சுப்ரபாதத்தைப் பாடி, அவன் கருணைப் பார்வை நம் மேல் படுமாறு வேண்டுவோம்.

இனி கனகதாசர்.

ஏளு நாராயணனே ஏளு லட்சுமி ரமணா
ஏளு ஸ்ரீ கிரியொடெயா, வேங்கடேசா

எழுந்தருள் நாராயணனே, எழுந்தருள் லட்சுமி ரமணனே
எழுந்தருள் மலைவாசனே, வேங்கடேசனே

காசித ஹாலன்னு காவடியொளு ஹெப்பிட்டு
லேசாகி கடெது ஹொசபெண்ணெ கொடுவே
சேஷ சயனனே ஏளு சமுத்ர மதனவ மாடு
தேச கெம்பாயித்து ஏளய்யா ஹரியே (ஏளு)

காய்ச்சிய பாலை பாத்திரத்தில் நிரப்பி
மெதுவாக கடந்து புதிதாக திரட்டிய வெண்ணையை கொடுப்பேன்
நாகத்தில் படுத்திருப்பவனே எழுந்திரு, பாற்கடலை கடைய வா
வானம் சிவந்துவிட்டது, எழுந்திருப்பாயாக (ஏளு)

அரளு மல்லிகே ஜாஜி பரிமளத புஷ்பகள
சுரரு தந்தித்தாரே பலு பகுதியிந்தா
அரவிந்தனாபா சிரி விதி பவாதிகளொடேயா
ஹிரிதாகி கோளி கூகிது, ஏளய்யா ஹரியே (ஏளு)

அரளி, மல்லிகை, ஜாஜி  (ஒரு விதமான Jasmine) போன்ற மணம் மிகுந்த பூக்களை
பக்தர்கள் மிகவும் பக்தியுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்
தாமரை மணாளனே லட்சுமிதேவி, பிரம்மா, சிவன் ஆகியவர்களை கொண்டவனே,
கோழி கூவியாயிற்று, எழுந்திருப்பாயாக (ஏளு)

தாசரெல்லரு பந்து, தூளி தர்சன கொண்டு
லேசாகி தாள தண்டிகேயனு பிடிது
ஸ்ரீஷ நெலெயாதி கேசவ நிம்ம பாதவனு
லேசாகி ஸ்மரிசி பொகளுவரு ஹரியே (ஏளு)

தாசர்கள் அனைவரும் அதிகாலையில் உன் தரிசனத்தை வேண்டி
மெதுவாக தாளத்துடன் ஜதி சேர்த்து
ஆதிகேசவனான உன் பாதத்தை நினைத்து
எந்த நேரமும் உன்னை புகழ்ந்தவாறே இருக்கின்றனர் (ஏளு)

***

காலையில் பாடும் ராகத்தில் இந்தப் பாடலை பக்தியுடன் பாடியிருக்கும் வித்யாபூஷணர்.


***

037/365





Tuesday, March 6, 2012

எப்போதும் என் இதயத்திலேயே வசிப்பாயாக.

இந்த உடம்பே ஆலயம்; என் இதயமே உன் கோயில்; இங்கேயே இருந்துவிடு. ஆரத்தி எடுத்து, பாட்டு பாடி, உன்னை வணங்கியவாறே இருப்பேன். என்னை விட்டு போய்விடாதே. என்னை காப்பாற்று.


இதைத்தான் ஸ்ரீ விஜயதாசர் இந்த பாடலில் பாடுகிறார்.



***

சதா என்ன ஹ்ருதயத்தல்லி
வாச மாடோ ஸ்ரீ ஹரி (சதா)

எப்போதும் என் இதயத்திலேயே
வசிப்பாயாக, ஸ்ரீ ஹரியே (சதா)

நாதமூர்த்தி நின்ன பாத
மோததிந்தா பஜிசுவே (சதா)

நாத வடிவானவனே, உன் பாதங்களை
மகிழ்ச்சியுடன் (உணர்ச்சி வசப்பட்டு) வணங்குவேன் (சதா)

ஞானவெம்போ நவரத்னத மண்டபத மத்யதல்லி
கானலோலன குள்ளிரிசி த்யானதிந்தா பஜிசுவே (சதா)

அறிவு என்னும் நவரத்தின மண்டபத்தின் நடுவே
பாடல்களின் ரசிகனே உன்னை உள்ளிறுத்தி, த்யானம் செய்து, வணங்குவேன் (சதா)

பக்தி ரசவெம்போ முத்து மாணிக்யத ஹரிவாணதி
முக்தனாக பேகு எந்து முத்தினாரதி எத்துவே (சதா)

முத்து மற்றும் மாணிக்கத்தால் ஆன,
பக்தி என்னும் இந்த கூடையால்,
முக்தி வேண்டும் என்று வேண்டி ஆரத்தி எடுப்பேன் (சதா)

நின்ன நானு பிடுவேனல்லா என்ன நீனு பிடது சல்லா
பன்னக சயன விஜயவிட்டல நின்ன பகுதர கேளோ சொல்லா (சதா)

உன்னை நான் விடப்போவதில்லை; என்னை நீயும் விட்டுவிடாதே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் விஜயவிட்டலனே,
உன் பக்தர்களின் குரலை கேட்பாயாக (சதா)

***

பீமண்ணர் மிக அற்புதமாக பாடியுள்ள இந்த பாடல்.


***

இதே பாடல் மற்றொரு ராகத்தில்

.

***

Tuesday, February 28, 2012

பாரய்யா வேங்கடரமணா...



புரந்தரதாசருக்கு திருப்பதி வெங்கடரமணன் மேல் அபார பிரியம். அவரைக் குறித்து பற்பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அனைத்துமே புகழ் பெற்ற பாடல்கள்தான். அவற்றில் ஒன்றுதான் இன்று பார்க்கப் போவது. இதுவும் ஒரு புகழ்பெற்ற பாடல்தான்.


ஸ்ரீமன்நாராயணனின் பத்து அவதாரங்களையும் சொல்லி, அவன் சிறப்புகளை பாடி, அவனை எப்படி அழைக்கிறார் என்று இந்த பாடலில் பார்ப்போம்.


பாரய்யா வேங்கடரமணா பாக்யதா நிதியே
பாரோ விஸ்வம்பரனே பாரோ
பக்தர சலஹுவனே பாரோ (பாரய்யா)

அளவில்லாத செல்வத்தை வேண்டியவருக்கு
வாரி வழங்கும் வேங்கடரமணனே, நீ வாராய்.
உலகத்தையே ஆடை/அணிகலனாக அணிந்தவனே,
பக்தர்களை கைவிடாமல் காப்பவனே, நீ வாராய் (பாரய்யா)

வேத கோசரனே பாரோ ஆதி கஷ்யபனே பாரோ
மேதினி சுரரொடெயனே பாரோ
பிரஹ்லாதன காய்தவனே பாரோ (பாரய்யா)

வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே,
முதன்முதலில் தோன்றிய கூர்மமே,
வராகனாய் உலகத்தை மீட்டவனே,
பிரகலாதனை காத்த நரசிம்மனே நீ வாராய் (பாரய்யா)

வாமன பார்கவனே பாரோ ராம கிருஷ்ணனே பாரோ
பிரேமதிம் பௌத்தனே பாரோ சுவாமி கல்கி நீ பாரோ (பாரய்யா)

வாமனனே, பார்கவனே, ராம, கிருஷ்ணனே,
அன்பே உருவான பௌத்தனே, கல்கியே நீ வாராய் (பாரய்யா)

குரு மத்வபதி நீ பாரோ வரத கேசவனே பாரோ
பரமாத்மா நீ பாரோ புரந்தரவிட்டலனே நீ பாரோ (பாரய்யா)

மத்வபதியான ஸ்ரீ மத்வரே, வரதராஜனே,
பரமாத்மனே, ஸ்ரீ புரந்தர விட்டலனே, நீ வாராய் (பாரய்யா)

*** மிகவும் அழகான இந்த பாடலை கேட்க:

http://www.muzigle.com/track/baarayya-venkataramana

***

அதே பாடல் முழுவதுமாக இல்லை, ஆனாலும் இவர் பாடும்போது கேட்பதற்கு ஆனந்தமாக இருக்கும்.

***

பாரய்யா வேங்கடரமணா!

***

Saturday, February 25, 2012

தேனீயை போன்ற வாழ்க்கை என்னுடையது.



***

தோழனாக, தாயாக, குழந்தையாக இன்னும் பலவாறெல்லாம் தன்னை எண்ணி பாடியிருக்கும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த பாடலில், தன்னை ஒரு தேனீ'யாக நினைத்து பாடியிருக்கிறார்.

தேனுக்காக எப்பொழுதும் மலர்களையே சுற்றி வரும் தேனீயைப் போல, இவரும் அந்த புரந்தரவிட்டலனின் பாதமலர்களையே சுற்றி வருவதாக கற்பனை செய்து பாடுகிறார்.

இதோ பாடல்.

***

மதுகர விருத்தி என்னது -
அது பலு சன்னது
பதுமனாபன பாத - பதும மதுபவெம்ப (மதுகர)

தேனீயைப் போன்ற வாழ்க்கை என்னுடையது
அது (வாழ்க்கை) மிக அருமையானது
பத்மனாபனின் சரணத்தை - தாமரையாக பாவித்து
அதை சுற்றி வரும் (மதுகர)

காலிகெ கெஜ்ஜெ கட்டி நீல வர்ணன குண
ஆலாபிஸுத்த பலு ஒலக மாடுவந்த (மதுகர)

கால்களில் கொலுசு அணிந்து - நீலவண்ணனின் குணத்தை
புகழ்ந்து பாடியவாறே திரிந்தவாறு இருக்கும் (மதுகர)

ரங்கனாதன குண ஹிங்கதெ பாடுத்த
சிருங்கார நோடுத்த கண்களானந்த வெம்ப (மதுகர)

ரங்கனாதனின் குணங்களை மறைக்காமல் பாடியவாறு
அவன் அழகை என் கண்களால் ரசித்தவாறே இருக்கும் (மதுகர)

இந்திராபதி புரந்தர விட்டலனல்லி செந்தத
பக்தியிந்தானந்தவ படுவந்த (மதுகர)

இலக்குமியின் கணவனாகிய புரந்தர விட்டலனிடத்தில்
ஆழமான பக்தி வைத்து
அதனால் ஆனந்தமாய் பாடியவாறு இருக்கும் (மதுகர)

***

இந்த பாடலை அருமையாக பாடும் வித்யாபூஷணர்.



புரந்தரதாஸரைப் பற்றிய கன்னட திரைப்படம் - நவகோடி நாராயணா படத்தில் வந்த இந்த பாடல்.

***

Friday, February 10, 2012

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா...



இன்றைய பாட்டின் முன்னுரை - திரு. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் தொடர் 'கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்'லிருந்து எடுக்கப்பட்டது.


பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.



ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!



எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது… உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!


***

நரஜன்ம பந்தாக நாலிகே இருவாக
கிருஷ்ணா என பாரதே

கிருஷ்ணா எந்தரே கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

மனிதப் பிறவி வாய்த்திருக்கும்போது,
நாக்கும் (பேச்சும்) இருக்கும்போது
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

கிருஷ்ணா என்று சொன்னால்,
அனைத்து கஷ்டங்களும் போய்விடுமே,
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

ஸ்நான பான ஜப தபகள மாடுத்தா
கிருஷ்ணா என பாரதே

ஷால்யான்ன ஷடுரச திந்து த்ருப்தனாகி
கிருஷ்ணா என பாரதே

கந்தன்ன பிகி பிகிதப்பி முத்தாடுதா
கிருஷ்ணா என பாரதே

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

குளிக்கும்போதும், குடிக்கும்போதும்,
தியானங்கள் செய்யும்போதும்

அறுசுவைகளுடன் செய்த விருந்தினை உண்டு
திருப்தியாக இருக்கும்போதும்

உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்ளும்போதும்

மனதுக்கு பிரியமானவளுடன் சிரித்துப் பேசும்போதும்
கிருஷ்ணா என சொல்லக்கூடாதா?

பரிஹாஸ்யத மாத ஆடுத லொம்மே
கிருஷ்ணா என பாரதே

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து
கிருஷ்ணா என பாரதே

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ
கிருஷ்ணா என பாரதே

கருடகமன நம்ம புரந்தர விட்டலன
கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக)

நகைச்சுவையாக பேசும்போதும்

தினப்படி வேளைகளில் இன்னொரு வேலையாகவும்

துஷ்ட ராசிகள் தூர விலகிப் போகும்படியான

கருட வாகனனான நம் புரந்தர விட்டலனை
கிருஷ்ணா என சொல்லக் கூடாதா?

****

கேட்டீங்கல்லே? சொல்லுங்க. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா..

***

இப்போ ஸ்ரீ வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.

***

Saturday, February 4, 2012

ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவும் தெரியாதுப்பா!

கருணிசோ ரங்கா கருணிசோ
 
மிக மிக அழகான பாடல். பதிவைப் பார்க்க கண்ணன் பாடல்களுக்கு செல்லவும். சுட்டி இதோ.