Thursday, February 28, 2013

ராம நாமம் என்னும் பாயசம்.


பாயசம். பால் பாயசம். இப்படி சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறும். அது சாதாரண மக்களாகிய நமக்கு.

புரந்தரதாசருக்கு?

வேதங்கள், புராண இதிகாசங்கள் அனைத்தையும் கற்றதோடு இல்லாமல், அவற்றின் சாரத்தை அனைவருக்கும் புரியும்வண்ணம் எளிய கன்னடத்தில், பல இடங்களில் நகைச்சுவையையும் சேர்த்துக் கொடுப்பவராயிற்றே. அவருக்கு இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறதாம்.

ராமா. கிருஷ்ணா. விட்டலா.

இந்தப் பெயர்களை அடிக்கடி சொன்னால், பால் பாயசத்தைக் குடித்தது போல் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.

நாமும் சொல்லிப் பார்ப்போமா?

ராமா
கிருஷ்ணா
விட்டலா

இப்போ பாட்டு.

இந்தப் பாட்டில் பாயசம் செய்வதற்கான சமையல் குறிப்பைச் சொல்லி, அதே போல் இறைவனின் நாமங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகிறார் தாசர்.

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே
விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;
விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி
சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு
அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு
புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு
ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக
ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு
புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு
(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது
ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***சஜ்ஜிகே - கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.
ஷாவிகே - சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

மேலே கூறிய பாட்டின் பொருளில் பாயசத்திற்கான குறிப்புகளை நீக்கிவிட்டுப் படித்தால் தாசர் கூறவரும் பக்தியின் தத்துவம்; ராம நாமத்தின் மகிமை ஆகியவை புரியும்.

அதாவது இப்படி:

கவனத்துடனும், வைராக்யத்துடனும் செய்ய வேண்டியது என்னவென்றால்; இதயத்தில் (ராமா) என்கிற எண்ணத்தை விதைத்து; புத்தியால் அதன் மகிமையை உணர்ந்து கொண்ட பிறகு, வரும் சந்தோஷத்தை / ஆனந்தத்தை எப்படி கொண்டாடுவது? மறுபடி ராமா, ராமா என்கிற புரந்தர விட்டலனை நினைத்துதான்.

***

ப்ரியா சகோதரிகள் அருமையாக பாடும் ராம நாம பாயசக்கே...


***

040/365

1 comment:

maithriim said...

கன்னடகாரர்களே விருந்தோம்பலுக்கும் நல்ல உணவை சமைத்துத் தருவதற்கும் பேர் போனவர்கள். தாசர் தான் என்ன அருமையாக இராம நாமத்தின் சுவையை நமக்கு எடுத்துக் காட்டுகிறார்! பாடல் தேவாம்ரிதம் :-)

நன்றி.

amas32