புரந்தரதாஸர், கனகதாஸர், விஜயதாஸர் மற்றும் சிலரின் கன்னடப் பாடல்கள் தமிழ் விளக்கத்துடன். Haridasa songs with Tamil Translations
Monday, March 14, 2011
அனைத்திற்கும் தலைவன் யார்?
மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மாபெரும் வெற்றியடைந்தாலும், தர்மருக்கு அவ்வளவாக சந்தோஷமில்லை. அவரிடம் பதில் தெரியாத பல கேள்விகள் இருந்தன. அப்படி என்ன கேள்விகள்?
ஏன் இந்த யுத்தம் நடைபெற்றது?
தர்மம் என்றால் என்ன?
பாவ புண்ணியம் என்றால் என்ன?
இப்படி பற்பல கேள்விகள்.
தர்மரின் மனக்குழப்பத்தை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், அவரை அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் ஸ்ரீபீஷ்மரிடம் அழைத்துச் சென்றார். ஸ்ரீ பீஷ்மரே எல்லா சந்தேகங்களையும் தீர்க்க வல்லவர் என்றும் கூறுகிறார்.
இப்போது தர்மர் பீஷ்மரிடம் கேள்விகள் கேட்கிறார்.
கிமேகம் தைவதம் லோகே
கிம் வாப்யேகம் பராயணம் !
ஸ்துவம்த:கம் கமர்சந்த:
ப்ராப்னுயுர் மானவா சுபம் !!
கோ தர்ம: சர்வதர்மாணாம்
பவத: பரமோமத:!
கிம் ஜபன் முச்சதே ஜந்துர்
ஜன்ம சம்சார பந்தனாத்!!
1. உத்தமமான கடவுள் யார்?
2. யாரிடம் போய் நாம் அனைவரும் சரணமடையலாம்?
3. யாரை புகழ்ந்து பாடினால், நாம் அமைதியையும், வளர்ச்சியையும் (முக்தி) அடையலாம்?
4. யாரை வணங்குவதால், நமக்கு மோட்சம் கிட்டும்?
5. மிகவும் உயர்ந்த தர்மமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
6. யார் பெயரை உச்சரிப்பதன் மூலம், ஜீவராசிகள் மறுபிறப்பு அடையாமல் இருப்பார்கள்?
இவைகளுக்கு பதில் சொல்லும் பீஷ்மர், பகவான் விஷ்ணுவின் அருமை பெருமைகளை சொல்லும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளுகிறார்.
ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!
அனைவரிலும் உத்தமமானவன் அந்த புருஷோத்தமன். அவனை வணங்குவதாலேயே மறுபிறப்பு கிட்டாமல், மோட்சம் கிட்டும் என்று சொல்கிறார்.
***
இப்படி சர்வோத்தமனான அந்த நாராயணனே, எங்கும் வியாபித்திருக்கிறான். அவனாலேயே அனைத்தும் இயங்குகின்றன. இந்த கோள்கள், நட்சத்திரங்கள், சூரிய சந்திரர்கள் முதற்கொண்டு அனைத்திலும் இருப்பது அவனே.
இந்த விளக்கத்தையே ஸ்ரீ புரந்தரதாஸர் இந்த அற்புதமான பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.
இனி பாடல்.
***
சகல க்ரஹபல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வரக்ஷா (சகல)
அனைத்து கிரகங்களின் பலன்களும் நீயே, தாமரை போல் கண்களை உடையவனே,
எல்லா இடத்திலும் இருந்து, இந்த உலகத்தை கட்டிக்காப்பவனே (சகல)
ரவிசந்திர புத நீனே ராஹு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவராத்ரியு நீனே நவவிதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)
சூர்ய, சந்திர, புதனும் நீயே, ராகு கேதுவும் நீயே
வியாழன், சனி மற்றும் வெள்ளியும் நீயே
பகலும் இரவும் நீயே, ஒன்பது விதானங்களும் நீயே++
நோய்களை தீர்க்கும் மருத்துவனும் நீயே, மருந்தும் நீயே (சகல)
பக்ஷமாசவு நீனே பர்வகாலவு நீனே
நக்ஷத்ர யோக கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்த நீ
பக்ஷிவாகன லோக ரக்ஷகனு நீனே (சகல)
(சுக்ல & கிருஷ்ண) பட்சமும் நீயே, மாதங்கள், பர்வ காலங்கள் நீயே
நட்சத்திர, யோக, கரணங்களும் நீயே
திரௌபதியின் மானத்தை குறைவில்லாத ஆடையளித்து காப்பாற்றிய நீ
கருட வாகனத்தில் வந்து உலகத்தை காப்பாற்றுபவனும் நீயே (சகல)
ருது வாசர நீனே ப்ருதிவிகாதியு நீனே
க்ரது ஹோம யஞ்ய சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடைய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகதா அப்ரதிம மஹிம நீனே (சகல)
(ஆறு) காலமும், வருடங்களும், வருடப்பிறப்பும் நீயே
ஹோம, யாகங்களினால் அடையும் முக்தியும் நீயே
யாராலும் தோற்கடிக்க முடியாத என் தலைவன் புரந்தர விட்டலனே,
நீ வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே (சகல)
***
++ஒன்பது விதானங்கள் என்றால் என்ன?
அவை 6 வேதாங்கங்கள் மற்றும்
7. மீமாம்சம்
8. நியாய
9. சாங்க்யம்
ஆகும்.
இப்போ 6 வேதாங்கங்கள் அப்படின்னா என்ன?
1. சிக்ஷா
2. கல்பா
3. வ்யாகரணம்
4. நிருக்தா
5. சந்தஸ்
6. ஜ்யோதிஷ
வேதங்களை படித்து அறிந்து கொள்ளுவதற்கு முன், இந்த ஆறு வேதாங்கங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு விதி உள்ளதாம்.
***
திருமதி.விசாகா ஹரி, ஒரு கதையின் நடுவில் பாடிய இந்த பாடல்.
***
யூட்யூபில் சிக்கிய இந்த பாடலின் இன்னொரு காணொளி.
***
Labels:
நாராயணன்,
புரந்தரதாஸர்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்றென் செயும்... என்ற பாடலும்
கோளறு பதிகமும் நினைவிற்கு வருகின்றன இந்தப் பாடலைப் படிக்கும் போதும் கேட்கும் போதும். :-)
Post a Comment