Showing posts with label கனகதாஸர். Show all posts
Showing posts with label கனகதாஸர். Show all posts

Friday, January 30, 2015

தற்காலிகமான இந்த வாழ்க்கையில்..

தற்காலிகமான இந்த வாழ்க்கையில்..

பக்தி மார்க்கத்தை தங்களின் இனிய பாடல்களால் பரப்புவதை முக்கிய வேலையாகக் கொண்டிருந்த ஹரிதாசர்கள், மக்களை நல்வழிப்படுத்த நல்ல அறிவுரைப் பாடல்களையும் பாடியுள்ளனர்.




மனிதராகப் பிறந்த இப்பிறவியானது நிரந்தரமானதல்ல. ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இந்த இடைப்பட்ட சிறு வேளையில், நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்கள் நிறைய இருக்கின்றன. வறியவர்களுக்கு உதவுங்கள், திருட்டுத்தனம் செய்யாதீர்கள். ஆணவத்தில் ஆடாதீர்கள். அந்த ‘காகிநெலெ’ ஆதிகேசவனை வழிபட்டு, நற்கதி அடையுங்கள் என்று பாடியுள்ளார் கனகதாசர். அந்தப் பாடலைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

***

ஏனு இல்லத இரெடு தினத சம்சார
ஞானதல்லி தான தர்மவ மாடிரய்யா (ஏனு)

ஒன்றுமேயில்லாத இரண்டு நாட்களைக் கொண்ட இந்த வாழ்க்கையில்
தான தர்மங்களைச் செய்யுங்கள் (ஏனு)

ஹசிது பந்தவரிகே அஷனவீயலு பேகு
சிசுவிகே பால் பெண்ணே உணிசபேகு
ஹசனாத பூமியனு தாரெயெரெயலி பேகு
ஹுசி மாடதலே பாஷே நடேசலே பேகு (ஏனு)

பசியுடன் வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்
குழந்தைகள் உண்பதற்கு பால் & வெண்ணெய் கொடுக்க வேண்டும்
இந்த வளமான பூமியை தானமாக கொடுக்க வேண்டும்
கொடுத்த வார்த்தை தவறாத வாழ்க்கை வாழ வேண்டும் (ஏனு)

கள்ளதனகள மாடி ஒடல ஹொரெயலு பேடா
குள்ளிர்த சபெயொளகே குடில நடெசலு பேடா
ஹொள்ளேயவ நானெந்து பஹு ஹெம்மெ லிரபேடா
பாள்வே ஸ்திரவெந்து நீ நம்பி கெட பேடா (ஏனு)

(பிறர் பொருட்களைத்) திருடி உடலை வளர்க்காதே
சபைதனில் (சிறப்பான ஏதாவது அமைப்பில்) மோசடிகளைச் செய்ய வேண்டாம்
நான்தான் மிகவும் நல்லவன் என்று கர்வப்பட வேண்டாம்
(நாம்) வாழும் இந்த வாழ்க்கை நிரந்தரமானது என்று நம்பி கெட்டுப் போக வேண்டாம் (ஏனு)

தொரெதனவு பந்தாக கெட்ட நுடியலு பேடா
சிரி பந்த காலக்கே மெரெய பேடா
சிரிவந்தனாதரே நெலெ ஆதிகேசவன
சரண கமலவ சேரி சுகியாகு மனுஜா (ஏனு)

பெரிய பதவிகளில் இருக்கும்போது கொடும் சொற்களைப் பேச வேண்டாம்
செல்வம் வந்து சேரும்போது, பகட்டு வேண்டாம்
அப்படி செல்வந்தன் ஆகும்போது, ஏ மனிதனே,
காகிநெலெ ஆதிகேசவனின் சரணங்களை வந்து அடைந்து ஆனந்தப்படு. (ஏனு)

****







Monday, March 4, 2013

இறைவனின் திருவடிக்காக எதையெல்லாம் இழக்க முடியும்?

கனகதாசர். இவரது வரலாற்றை ஏற்கனவே இந்த பதிவில் பார்த்துட்டோம். அதில் இருக்கும் கமெண்ட்ஸ்களையும் பார்த்துடுங்க. அருமையான தகவல்கள் அங்கு இருக்கின்றன.

கனகதாசருடைய பெரும்பாலான பாடல்களில் வைராக்கியம் நிரம்பியிருக்கும். அதாவது, மனைவி, மக்கள், ஊர், உலகம் அனைத்தையும் விட்டுடறேன் - எனக்கு நீதான் வேண்டும். உன் திருவடிகளே போதும். வேறு எதையும் நாம் விரும்ப மாட்டேன். எதுவுமே எனக்கு வேண்டாம். இப்படி.

இன்றைய பாடலும் அப்படியே. இறைவா, உன் திருவடிகளுக்காக, அவற்றை பார்த்துக் கொண்டேயிருப்பதற்காக, நான் எதையும் விடத் தயாராக இருக்கிறேன்னு அவர் சொல்ற பட்டியலைப் பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது. இவ்வளவையும் சொல்றவர் அடக்கத்துடன் ‘இவற்றை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை. நிஜமாவே (அனுபவத்திலும்) சொல்றேன். உன்னை விட்டு என்னால் ஒரு நொடியும் இருக்கவே முடியாது என்று பாடுகிறார்.

இதில் (பட்டியலில்) இருக்கும் எதுவும் என்னால் முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீங்க பாத்துட்டு சொல்லுங்க.

***

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணவ
பரிதே மாதேகின்னு அரிது பேளுவேனய்யா (தொரெது)

உன் காலடியை விட்டு (யாராலும்) சந்தோஷமாய் வாழமுடியுமா (முடியாது)
தற்பெருமைக்காக சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன் ஐயா (தொரெது)

தாயி தந்தெயா பிட்டு தபவு மாடலு பஹுது
தாயாதி பந்துகள பிடலு பஹுது
ராய முனிதரே ராஜ்யவ பிடபஹுது
காயஜாபித நின்ன அடிய பிடலாகது (தொரெது)

தந்தை தாயை விட்டுப் போய் தவம் செய்யவும் முடியும்
தாயாதி (பங்காளிகள்) உறவினர்களை உதறவும் முடியும்
அரசன் (நம் மேல்) கோபப்பட்டால், ஊரை விட்டுப் போய்விடவும் முடியும்
என்னை இந்தப் பிறப்பை அளித்தவனே, உன் அடியை விடவே முடியாது (தொரெது)

ஒடலு ஹசிதரே அன்னவ பிடபஹுது
படெத க்‌ஷேத்ரவ பிட்டு ஹொரடலுபஹுது
மடதி மக்கள கடெகே தொளகிஸி பிடபஹுது
கடலொடெய நிம்மடியா களிகே பிடலாகது (தொரெது)

பசித்த வயிறாயினும் உணவை விட்டு (பட்டினியாக) இருக்க முடியும்
இருக்கும் இடத்தை விட்டு கிளம்பவும் முடியும்
மனைவி மக்களை (குடும்பத்தை) விட்டு போகவும் முடியும்
பாற்கடலில் இருப்பவரே, உன் அடியை ஒரு நொடியும் விடமுடியாது (தொரெது)

பிராணவா பரரிகே பேடிதரே கொடபஹுது
மானாபிமானவ தக்கிச பஹுது
ப்ராணதாயகனாத ஆதிகேசவராய
ஜான ஸ்ரீ கிருஷ்ணா நின்னடிய பிடலாகது (தொரெது)

யாராவது (என்) உயிரைக் கேட்டாலும் கொடுக்க முடியும்
(என்) கௌரவம் / சுயமரியாதையை குறைத்துக் கொள்ளவும் முடியும்
எனக்கு உயிரைக் கொடுத்த ஆதிகேசவனே
தலைசிறந்தவனே, கிருஷ்ணனே, உன் அடியை விடவேமுடியாது (தொரெது)

***
***



***

041/365

***

Monday, February 18, 2013

எழுந்தருள் எழுந்தருள் கோவிந்தா!



திருப்பதியில் தினமும் அந்த ஏழுமலையானை எழுப்பும் எம்.எஸ்.அம்மா பாடும் சுப்ரபாதம் ஆகட்டும், அதையே தமிழில் மொழிபெயர்த்து வந்திருக்கும் திருப்பள்ளியெழுச்சி ஆகட்டும், கேட்கும்போதே எவ்வளவு இனிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது. நாராயணனின் அவதாரங்கள், லீலைகள், பெருமைகள் என அனைத்தையும் பாடியுள்ள தாசர்கள், அந்தக் கண்ணனை தாலாட்டு பாடி தூங்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், தூங்கும் இறைவனை எழுப்பும் சுப்ரபாத பாடல்களையும் பாடியுள்ளனர்.

ஒரு வருடம் கழித்து மறுபடி பதிவுகளைத் துவக்கும் இந்த நாளில், இறைவனை எழுப்பி, நம்மை பார்த்து அருளுமாறு கேட்போம். யுத்தத்திற்கு உதவி செய்ய அழைக்க வந்த அர்ஜுனன், தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனின் காலடியில் அமர்ந்து, அவனுடைய முதல் பார்வை தன் மேல் பட்டதாலேயே, தான் வேண்டிய வரத்தைப் பெற்றான் என்பது போல், நாமும் அவன் காலடியில் அமர்ந்து, இந்த சுப்ரபாதத்தைப் பாடி, அவன் கருணைப் பார்வை நம் மேல் படுமாறு வேண்டுவோம்.

இனி கனகதாசர்.

ஏளு நாராயணனே ஏளு லட்சுமி ரமணா
ஏளு ஸ்ரீ கிரியொடெயா, வேங்கடேசா

எழுந்தருள் நாராயணனே, எழுந்தருள் லட்சுமி ரமணனே
எழுந்தருள் மலைவாசனே, வேங்கடேசனே

காசித ஹாலன்னு காவடியொளு ஹெப்பிட்டு
லேசாகி கடெது ஹொசபெண்ணெ கொடுவே
சேஷ சயனனே ஏளு சமுத்ர மதனவ மாடு
தேச கெம்பாயித்து ஏளய்யா ஹரியே (ஏளு)

காய்ச்சிய பாலை பாத்திரத்தில் நிரப்பி
மெதுவாக கடந்து புதிதாக திரட்டிய வெண்ணையை கொடுப்பேன்
நாகத்தில் படுத்திருப்பவனே எழுந்திரு, பாற்கடலை கடைய வா
வானம் சிவந்துவிட்டது, எழுந்திருப்பாயாக (ஏளு)

அரளு மல்லிகே ஜாஜி பரிமளத புஷ்பகள
சுரரு தந்தித்தாரே பலு பகுதியிந்தா
அரவிந்தனாபா சிரி விதி பவாதிகளொடேயா
ஹிரிதாகி கோளி கூகிது, ஏளய்யா ஹரியே (ஏளு)

அரளி, மல்லிகை, ஜாஜி  (ஒரு விதமான Jasmine) போன்ற மணம் மிகுந்த பூக்களை
பக்தர்கள் மிகவும் பக்தியுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்
தாமரை மணாளனே லட்சுமிதேவி, பிரம்மா, சிவன் ஆகியவர்களை கொண்டவனே,
கோழி கூவியாயிற்று, எழுந்திருப்பாயாக (ஏளு)

தாசரெல்லரு பந்து, தூளி தர்சன கொண்டு
லேசாகி தாள தண்டிகேயனு பிடிது
ஸ்ரீஷ நெலெயாதி கேசவ நிம்ம பாதவனு
லேசாகி ஸ்மரிசி பொகளுவரு ஹரியே (ஏளு)

தாசர்கள் அனைவரும் அதிகாலையில் உன் தரிசனத்தை வேண்டி
மெதுவாக தாளத்துடன் ஜதி சேர்த்து
ஆதிகேசவனான உன் பாதத்தை நினைத்து
எந்த நேரமும் உன்னை புகழ்ந்தவாறே இருக்கின்றனர் (ஏளு)

***

காலையில் பாடும் ராகத்தில் இந்தப் பாடலை பக்தியுடன் பாடியிருக்கும் வித்யாபூஷணர்.


***

037/365





Wednesday, April 20, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா
தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)

பாடல் மற்றும் அதன் விளக்கத்திற்கு கண்ணன் பாடல்களுக்கு செல்லவும்.

http://kannansongs.blogspot.com/2011/04/blog-post_18.html

Wednesday, April 6, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 2 of 2

சென்ற பதிவில் கேசவன் முதலான 24 நாமங்களில், முதல் 12 மட்டும் பார்த்தோம். இந்த பதிவில் மீதம் 12 ஐ பார்ப்போம். அதாவது:


பார்த்தது:


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன


திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர


பார்க்கப் போவது:


சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா


நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


***


இந்த பாடலை கேட்பதற்கு இங்கே செல்லவும்:


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana


இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


அந்த நாராயணனின் அருமை பெருமைகளை எழுதுவதால் என்ன பயன்? இதற்கு ஸ்ரீ கனகதாசர் அருமையாக ஒரு பயனை சொல்கிறார், இந்த பாடலின் கடைசி பத்தியில்.


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


கூப்பிட்டு கொடுப்பான் என்று சொல்கிறார். இதைவிட பேரானந்தம் வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்ன?


***


இப்போ பாடலின் தொடர்ச்சி:


பங்கஜாக்‌ஷ நேனு என்னா மந்த புத்தியன்னு பிடிசி கிங்கரன்னா மாடிகொள்ளோ சங்கர்ஷணா!


தாமரைக் கண்ணனே, என் மந்த புத்தியை நீக்கி என்னை உன் வேலையாளாக வைத்துக்கொள் சங்கர்ஷணா.


யேசு ஜன்ம பந்தரேனு தாசனல்லவேனொ நானு காசி மாடதிரு இன்னு வாசுதேவனே!


எவ்வளவு ஜென்மம் எடுத்தாலென்ன, நான் உன் வேலையாள்தானே, என்னை காயப்படுத்தாதே வாசுதேவனே.


புத்தி சூன்யனாகி என்ன பத்த கார்ய குஹகமனவ தித்தி ஹ்ருதய சுத்தி மாடோ ப்ரத்யும்னனே!


ஞானமில்லாமல் செய்த கெட்ட செயல்களினால், என் மனதில் கெட்ட எண்ணங்கள் வந்துவிட்டது. அதை சுத்தப்படுத்து பிரத்யும்னனே.


ஜனனிஜனக நீனே எந்து நெனெவேனய்யா தீனபந்து எனகே முக்தி பாலிசய்யா அனிருத்தனே!


என் தாயே, தந்தையே, கஷ்டப்படுபவர்களுக்கு உதவுபவனே, எனக்கு முக்தியை கொடு அநிருத்தனே.


ஹருஷதிந்தா நின்ன நாமா ஸ்மரிசுவந்தே மாடு நேமா விரிசு சரணதல்லி புருஷோத்தமா!


தூய்மையான மனதுடனும், சந்தோஷத்துடனும் என்றும் உன் பெயரை ஜபித்து உன் காலடியில் நான் இருக்குமாறு செய்வாய் புருஷோத்தமா.


சாதுசங்க கொட்டு நின்ன பாதபஜனெயிட்டு என்ன பேதமாடி நோடதிரோ ஸ்ரீ அதோக்‌ஷஜா!


என்னை வேற்று மனிதராக நினைக்காமல், நல்ல மனிதர்களின் நட்பைத் தருவாய், உனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை தருவாய் அதோக்ஷஜனே.


சாரு சரண தோரி எனகே பாருகாணிசய்யா கொனேகே பார ஹகுதிருவே நினகே நாரசிம்ஹனே!


உன் காலடியை காட்டி எனக்கு, கடைசியில் முக்தியை கொடுப்பாய், உன்னையே நம்பியிருக்கிறேன் நாரசிம்ஹனே.


சஞ்சிதார்த்த பாபகளனு கிஞ்சிதாத பீடேகளனு முஞ்சிதவாகி களேது பொரெயோ ஸ்வாமி அச்சுதா!


சென்ற ஜென்மங்களில் சேர்ந்துவிட்ட பாவங்களையும், மீதமிருக்கும் கஷ்டங்களையும் களைந்து என்னை நீயே காப்பாற்ற வேண்டும் அச்சுதனே.


ஞான பக்தி கொட்டு நின்னா த்யானதல்லி இட்டு சதா ஹீனபுத்தி பிடிசு முன்ன ஸ்ரீ ஜனார்த்தனா!


ஞானத்தையும் பக்தியையும் கொடுத்து, உன்னைப் பற்றிய தியானத்திலேயே என்னை இருக்கச் செய்து, என் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை விலக்கிடுவாய் ஸ்ரீ ஜனார்தனா.


ஜபதபானுஷ்டான வில்லதே குபதாகமியாத என்ன க்ருபேயமாடி க்‌ஷமிசபேகு உபேந்திரனே!


ஜபங்கள், தபங்கள் எதுவும் செய்யாது, கெட்ட வழியில் சென்ற என்னை தயவு செய்து மன்னித்து அருளவேண்டும் ஸ்ரீ உபேந்த்ரனே.


மொரெய இடுவெனய்யா நினகே ஷரதி சயன சுபமதிய இரிசு பக்தனெந்து பரமபுருஷ ஸ்ரீ ஹரி!


பாற்கடலில் படுத்திருக்கும் பரமபுருஷனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன், என்னை உன் பக்தனென்று எண்ணிக் கொண்டு, எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பாய், ஸ்ரீ ஹரியே.


புட்டிசலேபேட இன்னு புட்டிசிதகே பாலிசென்னா இஷ்டு மாத்ர பேடிகொம்பே ஸ்ரீ கிருஷ்ணனே!


என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், எனக்கு இன்னொரு ஜென்மமே வேண்டாம்; இந்த ஜென்மம் கொடுத்துவிட்டாய், அதனால் நீயே காப்பாற்றியும்விடு, ஸ்ரீ கிருஷ்ணனே.


சத்யவாத நாமகளனு நித்யதல்லி பதிசுவவரா அர்தியிந்தா சலஹுவனு கர்த்ரு கேசவா!


(மேற்கூறிய) கடவுளின் பெயர்களை யார் சொல்கிறார்களோ, சந்தேகமில்லாமல் அவர்களை காப்பான் ஸ்ரீ கேசவன்.


மரேயதலே ஹரியநாம பரெது ஓடி கேளிதவகே கரெது முக்தி கொடுவா நெலெ ஆதிகேசவா!


யாரொருவர் ஹரியின் பெயர்களை மறக்காமல் கேட்கிறார்களோ, எழுதுகிறார்களோ, காகிநெலே ஆதிகேசவன் அவர்களை கூப்பிட்டு முக்தி கொடுப்பான்.


***


Tuesday, April 5, 2011

கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 1 of 2


விஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தில் 24 நாமங்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. அவை என்ன?


கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன



திரிவிக்கிரம வாமன ஸ்ரீதர் ரிஷிகேஷ பத்மநாபா தாமோதர



சங்கர்ஷன வாசுதேவ பிரத்யும்ன அநிருத்த புருஷோத்தமா அதோக்ஷஜா



நரசிம்ஹா அச்யுத ஜனார்த்தன உபேந்திரா ஹரி ஸ்ரீகிருஷ்ணா.


எந்த காரியத்தை செய்வதானாலும், மனத்தூய்மையுடன் கடவுளை வணங்கி செய்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பது நம்பிக்கை. அதற்காகவே பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவைகளை துவக்கும்போது 'ஆசமனம்' செய்யவேண்டுமென்றும், அப்படி செய்யும்போது மேற்கூறிய கடவுளின் 24 நாமாக்களையும் சொல்ல வேண்டும் என்றும் நிர்ணயித்திருக்கிறார்கள். பொருள் அறிந்தோ அறியாமலோ இந்த நாமாக்களை சொல்வதால் உள்ளே இருக்கும் பாவங்கள் போகும், மோட்சம் கிட்டும் என்பது அஜாமிளன் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நாமாக்களின் மகிமையை நமக்கு தெரிவிக்க வேண்டுமென்று ஸ்ரீ கனகதாஸர் ஒரு பெரிய்ய்ய பாடலை பாடியிருக்கிறார். ஒவ்வொரு நாமாவுக்கும் கடவுளிடம் ஒரு வேண்டுகோள், இரண்டு வரி. வேண்டுகோள்னா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் - கிரைண்டர், மிக்சி இதெல்லாம் கிடையாது. அவன் கருணைப் பார்வை மட்டுமே.


மிகப் பெரிய பாடல் ஆகையால், இரண்டு பகுதியா பிரிச்சி போடறேன். இதற்கு சரியான காணொளியும் கிடைக்கலை. வெறும் ஒலிதான். அதை இரண்டு பதிவிலும் இணைத்திருக்கிறேன். கேட்டு ரசிங்க. வித்யாபூஷணரின் குரலில் இந்த மிக மிக அழகான பாடலை கேட்டு மகிழுங்கள்.



***


ஈச நின்ன சரண பஜனே ஆசேயிந்தா மாடிதேனோ தோஷராசி நாச மாடோ ஸ்ரீச கேசவ!

ஈசனே உன் பாதத்தை ஆசையுடன் வணங்கி பஜனை செய்தேன் நான் செய்த பாவத்தை நாசம் செய்வாம் ஸ்ரீ கேசவனே.

சரணு ஹொக்கேனய்யா என்ன மரண சமயதல்லி நின்ன சரண ஸ்மரணே கருணிசய்யா நாராயணா!


உன் பாதத்தை விடமாட்டேன், என்னை மரண சமயத்தில் உந்தன் சரணத்தை நினைக்கும்படி வைப்பாய் நாராயணா.

சோதிசென்ன பவத கலுஷ போதிசய்யா ஞானவெனகே பாதிசுவ யமன பாதே பிடிசு மாதவா!


வாழ்க்கையின் கஷ்டங்களை போக்கி, ஞானத்தை கொடுப்பாய் யமனால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுவிப்பாய் மாதவா.


ஹிந்தனேக யோனிகளல்லி பந்து பந்து நொந்தேனய்யா இந்து பவத பந்த பிடிசோ தந்தே கோவிந்தா!


நிறைய பிறவிகள் எடுத்து வந்து நொந்து போயுள்ளேன் இந்த பந்த பாசத்திலிருந்து என்னை விடுவிப்பாய் கோவிந்தா.


ப்ரஷ்டனெனிச பேட கிருஷ்ணா இஷ்டு மாத்ர பேடிகொம்பே சிஷ்டரொடனே இஷ்டு கஷ்ட பிடிசு விஷ்ணுவே!

சுயநலவாதி என்றெண்ணாமல் இது மாத்திரம் செய்துவிடு நல்லவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்காதே விஷ்ணுவே.


மதனனய்யா நின்ன மஹிமே வதனதல்லி நுடியுவந்தே ஹ்ருதயதொளகே ஹுதுகிசய்யா மதுசூதனா!

மன்மதனின் தந்தையே, உன் மகிமையை என் வாயால் எப்போதும் பாடுவதற்கு இதயத்திலே (உன் மகிமையை) வைத்திருப்பாய் மதுசூதனா.


கவிதுகொண்டு இருவ பாப சவிது போகுவந்தே மாடோ ஜவன பாதேயன்னு பிடிசோ ஸ்ரீ த்ரிவிக்ரம!

என்னை சூழ்ந்திருக்கும் பாபத்தை ஓடஓட விரட்டுவாய் யமனின் செயல் தரும் கஷ்டத்திலிருந்து என்னை காப்பாய் திரிவிக்ரமா.


காமஜனக நின்ன நாமா ப்ரேமதிந்தா பாடுவந்தா நேமவெனகே பாலிசய்யா ஸ்வாமி வாமனா!


மன்மதனின் தந்தையே உன் நாமத்தை ப்ரேமத்துடன் பாடுவதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ள அருள்வாய் வாமனா.


மொதலு நின்ன பாத பூஜே ஒதகுவந்தே மாடோ என்ன ஹ்ருதயல்லி சதன மாடோ முததி ஸ்ரீதரா!

காலையில் (முதல்வேலையாக) உன் பாதபூஜை செய்ய அருள்வாய் என் இதயத்தில் வாசம் செய்வாய் ஸ்ரீதரா.


ஹுசியனாடி ஹொட்டே ஹொரெவ விஷயதல்லி ரசிகனெந்து ஹுசிகே ஹாகதிரோ என்ன ரிஷிகேசனே!

வெறும் பொய்களைச் சொல்லி (சம்பாதித்து) வயிற்றை ரொப்பும் மனிதனென்று எண்ணி என்னை புறக்கணித்துவிடாதே ரிஷிகேசனே.


பித்து பவதனேக ஜனும பத்தனாகி கலுஷதிந்தா கெத்துபோப புத்தி தோரோ பத்மனாபனே!


எல்லா ஜென்மங்களிலும் பாவங்களையே செய்து வந்திருக்கிறேன் - இதை வெல்லும் புத்தியைக் கொடு பத்மநாபனே.


காமக்ரோத பிடிசி நின்ன நாம ஜிஹ்வெயொளகே நுடிசோ ஸ்ரீ மஹானுபாவனாத தாமோதரா!


காம, க்ரோதங்களிலிருந்து விடுவித்து, உன் பெயரையே என் நாவில் இருக்கச் செய்வாய் எல்லோருக்கும் தலைவனான தாமோதரனே.


*****


http://music.raag.fm/Carnatic_Movies/songs-19128-Udaya_Raaga-Sri_Vidyabhushana இந்த சுட்டியில் உள்ள பட்டியலில் இரண்டாவது பாடலே நாம் மேலே பார்த்தது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் வித்யாபூஷணர்.


***


Thursday, March 31, 2011

ஆண்டவன் காப்பாற்றுவான், இதில் சந்தேகமேயில்லை

இந்த உலகத்தில் எல்லாரும் சந்தோஷமாயிருக்காங்க. என்னை மட்டும் ஏன் இந்த ஆண்டவன் இப்படி படுத்தறான்? ஆண்டவன்னு ஒருவன் இருக்கானா இல்லையான்னே தெரியலியே? - இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கலாம். வாழ்க்கையில் மேல் விரக்தி அடைந்து இப்படி புலம்புபவர்களுக்காக ஸ்ரீ கனகதாஸர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்று இன்று பார்ப்போம். முன்னாடி பார்த்த நிறைய பாடல்களில் - கடவுள் கஜேந்திர மோட்சம் கொடுத்தான், திரௌபதிக்கு சேலை கொடுத்தான் - இப்படியெல்லாம் உதாரணம் காட்டி, எனக்கும் தயை காட்டு என்று தாஸர்கள் வேண்டுவதை பார்த்தோம். ஆனால் இந்த பாடலில், புராண உதாரணங்கள் எதுவுமில்லாமல், எல்லாம் சமகாலத்தில் நடக்கும் சாதாரண விஷயங்களையே சொல்லி, துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு தைரியம் கொடுக்கிறார் கனகதாஸர். மனதில் உறுதி வேண்டும், தைரியத்தை இழக்காதே, கண்டிப்பாக ஆண்டவன் உனக்கு கைகொடுப்பான் என்று கூறி தாஸர் பாடும் பாடல்தான் ‘தள்ளனிசதிரு கண்ட்யா’. *** திருவிளையாடல்(?) படத்தில் ஒரு காட்சி வரும். உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கிவிட்டேன் என்று சிவபெருமான் கூறும்போது, பார்வதிதேவி தான் மறைத்து வைத்திருந்த ஒரு டப்பாவில் உள்ள ஒரு எறும்புக்கு நீங்கள் உணவளிக்க மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே என்று கூறுவார். அப்போது சிவன், அதைத் திறந்து பார் எனவும், அங்கே பார்த்தால், அந்த எறும்புக்கு அருகில் அதற்கான உணவு இருக்கும். அகில உலகத்திற்கும் படியளப்பவன் அந்த பரம்பொருளே என்று கூறும் அந்த காட்சியின் சாரத்தையே ஸ்ரீகனகதாஸரும் இந்த பாடலில் பாடுகிறார். *** தள்ளனிசதிரு கண்ட்யா தாளு மனவே எல்லரனு சலஹுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) சஞ்சலப்படாமல் பொறுமையுடன் இருப்பாய் மனமே எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) பெட்டதா துதியல்லி ஹுட்டிருவ விருக்ஷக்கே கட்டேயனு கட்டி நீர் எரேதவரு யாரு புட்டிசித சுவாமிதான் ஹோடேகாரனாகிரலு கெட்யாகி சலகுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) மலைமேல் வளர்ந்திருக்கும் மரங்களுக்கெல்லாம் (அங்கேயே) குட்டையை கட்டி நீர் இறைத்தவர் எவரோ பிறக்கவைத்த கடவுளே காப்பாற்றுபவனாகவும் இருப்பதால் கண்டிப்பாக காப்பாற்றுவான் இதில் சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) அடவியொளகாடுவா மிருக பக்ஷி களிகெல்லா அடிகடிகே ஆஹாரா இட்டவரு யாரு படேத ஜனனிய தெரதி சுவாமி ஹோடேகீடாகி பிடதே ரட்சிபநிதகே சந்தேக பேடா. அடர்ந்த காடுகளில் உலவும் மிருக, பறவைகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆகாரம் கொடுப்பவர் யாரோ இந்த உலகத்தை படைத்த கடவுளே காப்பாற்றுவான் கைவிடமாட்டான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) கல்லொளகே ஹுட்டிருவ க்ருமிகீட களிகெல்லா அல்லல்லி ஆஹார இத்தவரு யாரு புல்லலோசன காகிநெலெ ஆதிகேசவனு எல்லரனு சலஹனுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) கல்லுக்குள் இருக்கும் தேரைக்கெல்லாம் அங்கங்கேயே உணவு கொடுப்பவர் யாரோ மலரைப் போலவும், ஒளியுடைய கண்களையுடவனுமாகிய காகிநெலெ ஆதிகேசவன் எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) *** திருமதி. ஜெயவந்தி அவர்கள் பாடிய பாடல்: ஒரு கன்னட திரைப்படத்தில் வந்த இந்த பாடல்: *** பின்குறிப்பு: அப்போ கடவுளே எல்லாத்தையும் பாத்துப்பாரா, நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லையான்னு கேக்கப்படாது. பிரச்சினைகளில் இருந்து விடுபட மனித முயற்சியும் கண்டிப்பாக தேவை. அப்போதுதான் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். சித்தி மனித முயற்சி. அருள் தெய்வ அனுக்கிரகம். மனித முயற்சி முடியுமிடத்தில் தெய்வ அருள் செயல்படும். இந்த பழமொழிகளெல்லாம் தெரியும்தானே? ***

Friday, January 28, 2011

கதவைத் திறந்து தரிசனம் தருவாய் கிருஷ்ணா!


உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில். காலை வேளை பூஜைகள் முடிந்து பாலகிருஷ்ணன் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கிறான். ஒரு கையில் மத்து, இன்னொரு கையில் புல்லாங்குழலுடன், நாளொரு அர்ச்சனையும் பொழுதொரு அலங்காரமுமாய் இருக்கும் ச்சின்ன கிருஷ்ணன் இதழோரம் புன்னகைத்துக் கொண்டு தன்னை காண வருவோரை பார்த்தவாறு நின்றிருக்கிறான்.


அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதே அகிலம் மதுரம்

மதுரா நகரின் தலைவனே, கண்ணனே, உன் உதடுகள், முகம், கண்கள், புன்னகை, இதயம், நடை ஆகிய அனைத்தும் மிக இனிமையாக இருக்கின்றது.


குழந்தைகள் என்றாலே ஆச்சரியம்தான். அதுவும் அந்த பகவானே குழந்தையாய், குறும்பு சிரிப்போடு நின்றிருக்கையில், பக்தர்களுக்கு சன்னிதியை விட்டு விலகவும் மனம் வருமோ? கோயிலுக்கு வருவோரும் திரும்பிச் செல்ல மனமில்லாமல் அவனழகில் மனதை பறி கொடுத்தவாறு நின்றிருக்கிறார்கள்.

அப்போது கோயிலுக்கு பின்புறம் ஏதோ சத்தம். யாரோ கனகதாஸராம். கிருஷ்ணனை தரிசிக்க வந்திருக்கிறாராம். ஆனால், அவர் இடையர் குலமாகையால் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டு பின்பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார். பக்த கனகதாஸர் மிகவும் வருத்தமுற்று, கோயிலுக்குள் செல்ல வேண்டி கிருஷ்ணனை துதித்தவாறு உள்ளார்.

ஆமா, இந்த கனகதாஸர் என்பவர் யார்? அதை முதலில் பார்ப்போம்.

**


த்வைத சித்தாந்தத்தை நிறுவிய மத்வரின் வழிவந்த ஸ்ரீ வாதிராஜர் மற்றும் ஸ்ரீ வியாஸராயர் வாழ்ந்த காலத்தில் [16ம் நூற்றாண்டு] வாழ்ந்து, அந்த பரம்பொருள் மேல் பற்பல பாடல்கள் இயற்றி, பக்திமணம் பரப்பியவர்தான் ஸ்ரீ கனகதாஸர். காகிநெலெ என்னும் ஊரில் உள்ள ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு வந்த ஸ்ரீ கனகதாஸர் எண்ணற்ற பாடல்களையும், புத்தகங்களையும் நமக்கு அளித்துள்ளார். தன் எல்லா பாடல்களிலும் கடைசி வரியாக தன் இஷ்ட தெய்வமாகிய ‘காகிநெலெ ஆதிகேசவ’ என்னும் நாமத்தை பாடி அனைத்தையும் அந்த ஆதிகேசவனுக்கு அர்ப்பணம் செய்தவர். ஸ்ரீ புரந்தரதாஸரைப் போலவே இவரது பாடல்கள் அனைத்தும் கன்னடத்தில் அமைந்துள்ளன.


தன் குரு ஸ்ரீ வியாஸராயரின் விருப்பப்படி, கிருஷ்ணனை தரிசிக்கும் வண்ணம் உடுப்பி வந்திருக்கிறார். அப்போதுதான் மேற்சொன்ன சம்பவம்.

**

கோயிலுக்குள் அனுமதி கிடையாது, கிருஷ்ணன் வெளியே வரும்போது பார்த்துக்கொள் என்று சொன்ன அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல், ஸ்ரீ கனகதாஸர் கிருஷ்ணனை வேண்டி பாட ஆரம்பிக்கிறார்.

பாகிலனு தெரது சேவெயனு கொடு ஹரியே
கூகிதரு த்வனி கேளலில்லவே நரஹரியே (பாகிலனு)

உன் திருக்கதவைத் திறந்து தரிசனம் தருவாய் ஹரியே
நான் கூப்பிடுவது உன் காதில் விழவில்லையா, நரஹரியே...

பரமபததொளகே விஷதரண தல்பதல்லி நீ
ஸ்ரீ சஹித க்‌ஷீரவாரிதியொளிரலு
கரிராஜ கஷ்டதல்லி ஆதிமூலாயெந்து
கரெயலாக்‌ஷண பந்து ஒதகிதயோ நரஹரியே (பாகிலனு)

பரமபதத்தில் (வைகுண்டத்தில்) ஆதிசேஷன் மேல்
இலக்குமியுடன் நீ அமர்ந்திருக்கையில்
கஷ்டத்தில் இருந்த கஜேந்திரன் ஆதிமூலா என்று
கூப்பிட்ட அந்த நொடியில் வந்து காப்பாற்றிய நரஹரியே (பாகிலனு)

கடுகோபதிம் களனு கட்கவனெ பிடிது
நின்னொடெய எல்லிஹனெந்து நுடியே
த்ருட பகுதியல்லி சிசுவு பிடதே நின்னனு பஜிஸே
சடகரதி ஸ்தம்பதிந்தொடதே நரஹரியே (பாகிலனு)


கடும்கோபத்தில் இருந்த மன்னன் (இரண்யகசிபு) தன் வாளை எடுத்து
உன் கடவுள் எங்கே என்று வினவ
உன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அந்த சிறுவன் (பிரகலாதன்) உன்னை வணங்கி வழிபடும்போது
அந்த தூணை உடைத்து வெளிவந்து அவனை ரட்சித்த நரஹரியே (பாகிலனு)

யமசுதன ராணிகே அக்‌ஷயவசனவானித்தே
சமயதல்லி அஜாமிளன பொரெதே
சமயாசமயவுண்டே பக்தவத்சல நினகே
கமலாக்‌ஷ காகிநெலெ ஆதிகேசவனே (பாகிலனு)

யமதர்மனின் மகனாகிய தர்மனின் மனைவிக்கு (த்ரௌபதி) முடிவில்லாத ஆடையை கொடுத்தாய்
தன் கடைசி காலத்தில் ‘நாராயணா’ என்றழைத்த அஜாமிளனுக்கும் அபயமளித்தாய்
உன் பக்தர்கள் கஷ்டப்படும் சமயத்திலெல்லாம் தவறாது வந்து அவர்களை
காப்பாற்றிய பக்தவத்ஸலனே
காகிநெலெ ஆதிகேசவனே (பாகிலனு)

**

இப்படி ஸ்ரீ கனகதாஸர் தன் மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அந்த கண்ணனே ஆயர்குலத்தில் உதித்தவனாயிற்றே, அவன் தன் தாஸனாகிய கனகதாஸருக்கு தரிசனம் கொடுக்காமல் இருப்பானா? தன் பக்தன் உள்ளே வரமுடியாவிட்டால் என்ன, நானே அவனை நோக்கிப் போவேன் என்று சொல்லி, அதுவரை கிழக்கு நோக்கி நின்றிருந்த கண்ணன், நம் கனகதாஸருக்காக மேற்கு நோக்கி திரும்பினான். அப்படியும் தாஸருக்கு தரிசனம் எப்படி கிட்டும்? நடுவில் சுவர்கள் உள்ளனவே? படார்.. படார். சுவர்கள் உடைந்தன. தடைகள் நீங்கின. தாஸருக்கு அற்புதமான தரிசனத்தை வழங்கினான் கிருஷ்ணன்.

தாஸருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கண்கள் புஷ்பவாரி பொழிந்தன. கிருஷ்ணா கிருஷ்ணா என்ற கோஷங்கள் விண்ணை முட்டின. தன் பக்தனின் மகிமையை உலகுக்கு உணர்த்தினான் அந்த பக்தவத்சலன்.

அந்த சுவர் இருந்த இடத்தில் ’கனகன கிடுக்கி’ - கனகனின் ஜன்னல் என்று அழைக்கப்படும் ஒரு ஜன்னல் வைக்கப்பட்டு அதன் வழியே மட்டும் பக்தர்கள் அனைவரும் தன்னை காணவேண்டுமென்று சொன்னான் கண்ணன். அதேபோல் இன்றளவும் ஒரு சிறிய ஜன்னல் மூலமாகவே கண்ணனை தரிசிக்கிறார்கள் பக்தர்கள்.

**


‘கனகதாஸர்’ என்ற திரைப்படத்தில் ராஜ்குமார் நடித்து P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியுள்ள இதே பாடல் இதோ.




**

மேற்கண்ட காணொளியில் ’ஜன்னல்’ சரியா தெரியலியேன்னு கேட்பவர்களுக்கு, இன்னொரு பாடல் காணொளி. ‘இந்து எனகே கோவிந்தா’ என்ற இந்த பாடலின் விவரம் இன்னொரு இடுகையில் வரும். இங்கே போட்டிருப்பது அந்த ஜன்னல் வழியே கிருஷ்ணனை எப்படி பார்ப்பது என்று காட்ட மட்டுமே.



**

பக்தர்கள் வேண்டுகோளை பக்தவத்சலன் நிறைவேற்றுவான் என்று காட்டிய கனகதாஸரின் பிற பாடல்களை அடுத்துவரும் இடுகைகளில் பார்க்கலாம்.

**