Showing posts with label வியாஸராயர். Show all posts
Showing posts with label வியாஸராயர். Show all posts

Monday, January 23, 2012

குருவே பாராட்டிய சிஷ்யர் புரந்தர தாசர்.

இன்று ஸ்ரீ புரந்தரதாசரின் ஆராதனை தினம். (1/23/2012).


புரந்தர தாசர்

அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அதைப் பற்றிய ஒரு அருமையான காணொளி ஏற்கனவே இந்த பதிவுகளில் பார்த்தோம். நீங்களும் ஒரு தடவை பார்த்துடுங்க.



***

விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும், திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும், மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர், புரந்தர தாசரின் குருவாவார். அப்பேற்பட்ட அந்த குரு, தன் சிஷ்யரை பாராட்டி ஒரு பாடலே பாடியிருக்கிறார் என்றால் அது எப்பேற்பட்ட பெருமைக்குரிய விஷயம்? அவர்கள் இருவரையும் வணங்கி, அந்த சிறப்புமிக்க பாடலை இங்கு பார்ப்போம்.

மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு 'புரந்தரோபநிஷத்' என்று பெயரிட்டார் ஸ்ரீ வியாசராஜர்.
ஸ்ரீ வியாசராஜர்

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம்: 1480 to 1564 AD

ஸ்ரீ வியாசராயரின் காலம்: 1460 to 1539 AD

***

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா
வாசுதேவ கிருஷ்ணன சூசி பூஜிசுவ (தாசரெந்தரெ)

தாசரென்றால் அது புரந்தரதாசர்தான்
வாசுதேவ கிருஷ்ணனை வேண்டி பூஜை செய்யும்

க்ராஸகில்லதே போகி பரர மனெகள பொக்கு
தாசனெந்து துளசி மாலே தரிசி
பேசரில்லதே அவர காடி பேடி பளலிசுத
காசு கடிசுவ புருஷ ஹரிதாஸனே? (தாசரெந்தரெ)

பிக்ஷை எடுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று
தாசர் என்று சொல்லி துளசி மாலைகள் அணிந்து
காசு மற்றும் பொருட்களை பிக்ஷை கேட்டு
அவர்களை துன்புறுத்தும் தாசன் ஹரிதாசனா? (இல்லை)

யாயிவாரவ மாடி விப்ரரிகே ம்ரிஷ்டான்ன
ப்ரியதலி தாநொந்து கொடத லோபி
மாயா சம்சாரதல்லி மமதே ஹெச்சாகித்து
காயனவ மாடலவ ஹரிதாசனே? (தாசரெந்தரெ)


லாபம் தரும் வியாபாரத்தை செய்துகொண்டு,
தேவைப்படுவர்களுக்கு அன்னதானம் செய்யாமல்
உதவி செய்யாத கஞ்சன் சம்சார சாகரத்தில் மதி மயங்கி
(இறைவனைக் குறித்து) பாடல்கள் பாடாதவன் ஹரிதாசனா? (இல்லை)

நீதியெல்லவனரிது நிகமவேத்யன நித்ய
வாதசுதநல்லிஹன வர்ணிசுதலி
கீதா நர்த்தனதிந்தா கிருஷ்னன பூஜிசுவ
பூதாத்ம புரந்தர தாசரிவய்யா (தாசரெந்தரெ)

அனைத்து நீதிகளையும் அறிந்து வேதங்களை காப்பாற்றுபவனை (ஸ்ரீ கிருஷ்ணனை),
வாயு புத்திரனின் இதயகமலத்தில் இருப்பவனை
வர்ணித்தபடி ஆடல் பாடல்களுடன்
பூஜிக்கும் தாசரே புரந்தர தாசர் ஆவார்

*** ***

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா

***

Tuesday, March 22, 2011

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்


தலைப்பை பார்த்ததும் பாட்டை டக்குன்னு பிடிச்சிருப்பீங்க. பற்பல பாடகர்களாலும், ஹரிஹரனாலும் (Colonial Cousins) பாடப்பட்டு, அனைவருக்கும் பிடித்த மிகவும் இனிமையான பாடல்தான் இது - கிருஷ்ணா நீ பேகனே பாரோ. இந்த பாடலை இயற்றிவர் ஸ்ரீ வியாஸராயர். இவருடைய புண்ணிய தினம் 3/23 அன்று வருவதையொட்டி, இந்த பதிவும் பாடலும் இன்று.

***


ஸ்ரீ வியாஸராயர் 1460ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் யதிராஜா. 7 வயதில் உபநயனம் செய்வித்து, பிரம்மண்ய தீர்த்தர் என்ற குருவிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார். இவருடைய திறமைகளை கண்ட பிரம்மண்ய தீர்த்தர், வியாஸராயர் என்று பெயரிட்டு, சன்னியாசம் கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 16.பிறகு காஞ்சியிலும், முளபாகலிலும் ஸ்ரீபாதராயரிடம் வேத வேதாந்தங்களை கற்ற ஸ்ரீ வியாஸராயர், விஜயநகர பேரரசின் அரசர் சலுவ நரசிம்ம ராயரிடம் ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். அந்த அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ வியாஸராயர் திருப்பதிக்கு சென்று வேங்கடனின் திருக்கோயிலில் சுமார் 12 வருடங்கள் பாதுகாவலராகவும் சேவை செய்தார். விஜயநகர பேரரசில் அடுத்து வந்த ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரிடமும், ஸ்ரீ வியாஸராயர் ராஜகுருவாக இருந்தார்.

ஒரு முறை ஸ்ரீ வியாஸராயர், ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரை குஹு யோகம் என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றினார். அதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கிருஷ்ணதேவ ராயர், வியாஸராயருக்கு மிகவும் மரியாதை செலுத்தி, அவரை வணங்கி வந்தார்.

ஸ்ரீ வியாஸராயர், மத்வர் வழியில் வந்த மடாதிபதிகளில் முக்கியமானவர். அவர் பற்பல புத்தகங்கள், பாடல்கள் நமக்கு தந்துள்ளார். புரந்தரதாஸர், கனகதாஸர் முதலான தாஸர்களுக்கும், (கும்பகோணத்தில் சமாதியடைந்த) ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தருக்கும் குருவாக இருந்தவர். தென்னிந்தியா முழுக்க சுமார் 700 ஆஞ்சனேயர் கோயில்களை ஸ்தாபித்து பக்தியை பரப்பியவர்.


பிரகலாதனின் அவதாரமாக கருதப்பட்ட ஸ்ரீ வியாஸராயர், 1539ம் ஆண்டு ஹம்பிக்கு அருகே துங்கபத்ரா நதிக்கரையோரம் சமாதியடைந்தார்.

***

கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் ராஜகுருவாக இருந்த ஸ்ரீ வியாஸராயரின் நினைவாக இன்றும் அந்த மடத்தின் தலைவருக்கு (தற்போதைய தலைவர் ஸ்ரீ வித்யா மனோகர தீர்த்தர்) தினமும் மாலையில் அரசவையில் இருப்பது போல் ராஜஅலங்காரம் செய்வித்து, அவர் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பூஜைகள் செய்விக்கப்படுகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள இந்த மடத்தில், அதன் (அப்போதைய) தலைவர் வந்திருக்கும் சமயங்களில் அந்த அற்புதமான காட்சியை, பூஜையை கண்டிருக்கும் பாக்கியத்தை அடைந்திருக்கிறேன்.

இப்போ பாடல்.

***

கிருஷ்ணா நீ பேகனே பாரோ
பேகனே பாரோ முகவன்னே தோரோ (கிருஷ்ணா)


கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)

காலா லந்திகே கெஜ்ஜே நீலத பாவோலி
நீலவர்ணத நாட்யா வாடுத பாரோ (கிருஷ்ணா)

கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)

உடியல்லி ஊடுகெஜ்ஜே பெரளல்லி உங்குர
கொரளோளு ஹாகித வைஜயந்தி மாலே (கிருஷ்ணா)

இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)

காசி பீதாம்பர கையல்லி கொளலூ
பூசித ஸ்ரீகந்த மையொள கிரலு (கிருஷ்ணா)

பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத்தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)

தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)

***

கண்ணன் பாடல்களில் இந்த பதிவை பாத்துடுங்க. KRSன் அழகிய வர்ணனைகளுடன், பல பக்தர்களின் குரலில் இந்த பாடலும் பதிவு செய்யப்பட்டிருக்கு.
http://kannansongs.blogspot.com/2008/06/100-krs_26.html

***

யூட்யூபில் இந்த பாடலுக்கு ஏகப்பட்ட காணொளிகள் இருந்தாலும், இரண்டை மட்டும் இங்கே பாத்துடுவோம்.

திரு.யேசுதாஸ் பாடியது



திருமதி. சித்ரா பாடியது



***

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

***