Monday, January 23, 2012

குருவே பாராட்டிய சிஷ்யர் புரந்தர தாசர்.

இன்று ஸ்ரீ புரந்தரதாசரின் ஆராதனை தினம். (1/23/2012).


புரந்தர தாசர்

அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அதைப் பற்றிய ஒரு அருமையான காணொளி ஏற்கனவே இந்த பதிவுகளில் பார்த்தோம். நீங்களும் ஒரு தடவை பார்த்துடுங்க.



***

விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்தவரும், திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவரும், மத்வ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானவருமான ஸ்ரீ வியாசராஜர், புரந்தர தாசரின் குருவாவார். அப்பேற்பட்ட அந்த குரு, தன் சிஷ்யரை பாராட்டி ஒரு பாடலே பாடியிருக்கிறார் என்றால் அது எப்பேற்பட்ட பெருமைக்குரிய விஷயம்? அவர்கள் இருவரையும் வணங்கி, அந்த சிறப்புமிக்க பாடலை இங்கு பார்ப்போம்.

மேலும் பாகவதம் மற்றும் உபநிஷத்களின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாசரின் பாடல்களை தொகுத்து அவற்றிற்கு 'புரந்தரோபநிஷத்' என்று பெயரிட்டார் ஸ்ரீ வியாசராஜர்.
ஸ்ரீ வியாசராஜர்

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம்: 1480 to 1564 AD

ஸ்ரீ வியாசராயரின் காலம்: 1460 to 1539 AD

***

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா
வாசுதேவ கிருஷ்ணன சூசி பூஜிசுவ (தாசரெந்தரெ)

தாசரென்றால் அது புரந்தரதாசர்தான்
வாசுதேவ கிருஷ்ணனை வேண்டி பூஜை செய்யும்

க்ராஸகில்லதே போகி பரர மனெகள பொக்கு
தாசனெந்து துளசி மாலே தரிசி
பேசரில்லதே அவர காடி பேடி பளலிசுத
காசு கடிசுவ புருஷ ஹரிதாஸனே? (தாசரெந்தரெ)

பிக்ஷை எடுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று
தாசர் என்று சொல்லி துளசி மாலைகள் அணிந்து
காசு மற்றும் பொருட்களை பிக்ஷை கேட்டு
அவர்களை துன்புறுத்தும் தாசன் ஹரிதாசனா? (இல்லை)

யாயிவாரவ மாடி விப்ரரிகே ம்ரிஷ்டான்ன
ப்ரியதலி தாநொந்து கொடத லோபி
மாயா சம்சாரதல்லி மமதே ஹெச்சாகித்து
காயனவ மாடலவ ஹரிதாசனே? (தாசரெந்தரெ)


லாபம் தரும் வியாபாரத்தை செய்துகொண்டு,
தேவைப்படுவர்களுக்கு அன்னதானம் செய்யாமல்
உதவி செய்யாத கஞ்சன் சம்சார சாகரத்தில் மதி மயங்கி
(இறைவனைக் குறித்து) பாடல்கள் பாடாதவன் ஹரிதாசனா? (இல்லை)

நீதியெல்லவனரிது நிகமவேத்யன நித்ய
வாதசுதநல்லிஹன வர்ணிசுதலி
கீதா நர்த்தனதிந்தா கிருஷ்னன பூஜிசுவ
பூதாத்ம புரந்தர தாசரிவய்யா (தாசரெந்தரெ)

அனைத்து நீதிகளையும் அறிந்து வேதங்களை காப்பாற்றுபவனை (ஸ்ரீ கிருஷ்ணனை),
வாயு புத்திரனின் இதயகமலத்தில் இருப்பவனை
வர்ணித்தபடி ஆடல் பாடல்களுடன்
பூஜிக்கும் தாசரே புரந்தர தாசர் ஆவார்

*** ***

தாசரெந்தரே புரந்தர தாசரய்யா

***

Thursday, January 19, 2012

நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும்?



இந்த உலகத்தில் அனைத்தும் ஸ்ரீமன் நாராயணனே. அவனே முழுமுதற் கடவுள். அவனின்றி ஒரு பொருளும் அசையாது. அனைவரையும் காப்பவன் அவனே. இப்படி அடிக்கடி 'அனைத்தும்', 'அனைத்தும்'ன்னு சொல்றோமே, அந்த 'அனைத்தும்'னா என்ன? அதில் என்னென்ன இருக்கு? ஒரு பட்டியல் போடுவோமா? வேண்டாம். அதுக்கு பதிலா இந்த பாட்டை பார்ப்போம். அந்த பட்டியல் இங்கே இருக்கு.


சகல கிரஹ பல நீனே - இதுதான் அந்த பாடல். மிகவும் புகழ்பெற்ற பாடல். இந்த பாட்டு பாடல் பெற்ற தலம் எது தெரியுமா? மதுரை அருகே உள்ள தான்தோன்றி மலைதான். ஸ்ரீ புரந்தரதாசர், இந்த மலையில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ வேங்கடரமண சுவாமியைக் குறித்து பாடியதே இந்த பாடல்.


***

சகல கிரஹ பல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வ ரக்ஷா (சகல)

அனைத்து கிரகங்களின் பலனையும் கொடுப்பவனே
தாமரை போன்ற கண்களை கொண்டவனே
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே
அகில உலகத்தையும் காப்பவனே (சகல)


ரவிச்சந்திர புத நீனே ராகு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவா ராத்ரியு நீனே நவ விதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)

சூரியன், சந்திரன், புதன், ராகு கேது ஆகிய அனைத்தும் நீயே
சுக்கிரன், வியாழன், சனி, செவ்வாயும் நீயே
பகல், இரவும் நீயே, ஒன்பது விதானங்களும்++ நீயே
மறுபிறப்பென்னும் நோயை குணப்படுத்தும் மருத்துவனும் நீயே (சகல)


பக்ஷ மாசவு நீனே பர்வ காலவு நீனே
நக்ஷத்திர யோக திதி கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்தனே
பக்ஷிவாஹன லோக ரக்ஷிபனு நீனே (சகல) 

பக்ஷ மாதமும்+++ நீயே பர்வகாலங்களும்## நீயே
நட்சத்திரம், யோகம், திதி, கரணங்கள் எல்லாமும் நீயே
திரௌபதியின் மானத்தை காத்தவனே கருட வாகனனே,
இந்த உலகத்தை காப்பவனும் நீயே (சகல)


ருது வத்சரவு நீனே விரத தினங்களு நீனே
க்ரது ஹோம யக்ன சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகத மஹா மஹிமே நீனே (சகல)

ருது வத்சரங்களும் நீயே, விரத நாட்களும் நீயே
ஹோம யக்ஞங்கள் நீயே
மோட்சமடைந்தால் அடைவதும் உன்னையே
என்னுடைய பிரியமான புரந்தர விட்டலனே
வேதங்களுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மனும் நீயே

***

இப்போ சில Legends:

++ ஒன்பது விதானங்கள் எவை? சப்த சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், நிருக்த சாஸ்திரம், கல்ப சாஸ்திரம், சிக்ஷா சாஸ்திரம், சாந்த் சாஸ்திரம், மீமாம்சம், ந்யாயம், வியாகரணம் - இவையே ஆகும்.

+++பக்ஷ மாதம் = பாத்ரபத கிருஷ்ண பக்ஷம். மூதாதையர்களுக்கு உகந்த காலம். அந்த பதினைந்து நாட்களும் (தகுதி உள்ளவர்கள்) தர்ப்பணம், திதி செய்ய வேண்டும் என்பது பாடம்.


##பர்வ காலங்கள் எவை? சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெறும் நாட்கள் பர்வ காலங்கள் எனப்படும். அன்றும் (தகுதி உள்ளவர்கள்) தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும்.


***


இந்த பாட்டினால் தெரிவது என்ன? எந்த கிரகத்தை வணங்கினாலும், எல்லாவற்றிலும் அந்தர்யாமியாகி இருப்பவன் 'அவனே'. அதனால், அனைத்தையும் கடைசியில் அவனுக்கே 'அர்ப்பணம்' செய்து, அவனை சரணடைந்தால், மறுபிறப்பு கிடையாது - என்று ஸ்ரீ புரந்தரதாசரே சொல்லும்போது, அதை நாம் மறுக்கமுடியுமா?

*** ***


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

***

Sunday, January 15, 2012

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

கடவுளர்களுக்கு 'காலை வேளை' என்று கருதப்படும் 'உத்தராயண புண்யகாலம்' (ஆறு மாத காலம்) துவங்கிவிட்டது. சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கும் இந்த நாள் மிக புனிதமான நாளாகும்.


பகீரதன் தன் முன்னோர்களுக்கு கங்கைக் கரையில் 'தர்ப்பணம்' செய்தது இந்நாளே. அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், இந்த நாளுக்காகவே காத்திருந்து தன் உயிரை விட்டார். நாமும் இந்த நன்னாளில் தாசர் பாடல்களில் 'சீசன்-2'வை, அந்த 'ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை' வணங்கி துவக்குவோம்.


பிள்ளையாரை பிடிக்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? தன் செல்ல நண்பனாய் அவரை நினைத்து அவரை வணங்குபவர்களே அதிகம். சரிதானே? அவரைப் போலவே அவர் பாடல்களும் மிக இனிமையானவை. உடனே 'விநாயகனே வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞான முதல்வனே' பாட்டு நினைவுக்கு வருதா?


கணபதியை குறித்து தாசர்கள் நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றனர். 'கஜவதன பேடுவே' எனத் தொடங்கும் இன்றைய பாடலில் நாம் தெரிந்துகொள்ளும் சிறப்புச் செய்தி என்னன்னு பார்ப்போம்.


பாசக்கயிறு யாரிடம் இருக்கும்? இதென்ன கேள்வி? எமதர்மனிடம்தான்னு டக்குன்னு சொல்லிடுவீங்க. ஆனா புரந்தரதாசர் என்ன சொல்றாரு? பிள்ளையாரிடமும் பாசக்கயிறு இருக்காம். 'பாச', 'அங்குச' இந்த இரண்டையும் வைத்திருப்பவனே.


அங்குசம் தெரியும். மிகப்பெரிய யானையையும் அடக்கிடும் சிறிய ஆயுதம் - அங்குசம். நம் மனமென்னும் யானையை அடக்கி, சுயகட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்த அங்குசத்தை ஏந்தியிருக்கிறார் என்று சொல்கிறார் தாசர்.


சரி. பாசக்கயிறு? இறப்புக்கு அப்பாற்பட்ட விநாயகனை வணங்குபவர்களுக்கு மரணம் குறித்த பயம் அகற்றுபவன் என்பதைக் காட்டவே பாசக்கயிறு வைத்திருக்கிறார் என்று தாசர் விளக்குகிறார்.


கஜானனின் பெருமைகளை சொல்லி, அவன் தாள் வணங்கி தாசர் கேட்பது என்னன்னா, சர்வோத்தமனான அந்த ஸ்ரீமன் நாராயணனை எப்பொழுதும் நினைத்திருக்க செய்யுமாறு அருள் செய் என்பதேயாகும். வழக்கம்போல் மிக எளிதான சொற்கள், ஆழ்ந்த கருத்துகள். பாடல், அதன் பொருள், தொடர்ந்து சில காணொளிகள் பாருங்க. கணபதி பப்பா மோரியா!


***


கஜவதன பெடுவே கௌரி தனய
த்ரிஜக வந்திதனே சுஜணர பொரவென (கஜவதன)

யானை முகத்தனே கௌரியின் புதல்வனே
 மூவுலகத்திலும் அனைவராலும் வணங்கப்படுபவனே
நல்லவர்களை காப்பவனே (கஜவதன)

பாசாங்குசதர பரம பவித்ர
மூஷிகவாகன முனிஜன பிரேம (கஜவதன)

பாசக்கயிறையும், அங்குசத்தையும் ஏந்தியவனே, பரம பவித்ரனே
மூஞ்சூறு வாகனனே, முனிவர்களுக்கு பிரியமானவனே (கஜவதன)


மோததி நின்னய பாதவ தோரோ
சாது வந்திதனே ஆதரதிந்தலி (கஜவதன)


சந்தோஷத்துடன் (கருணையுடன்) உன் பாதங்களைக் காட்டு
மிகவும் பணிவுடன் சாதுக்களால் வணங்கப்படுபவனே (கஜவதன)


சரசிஜநாப ஸ்ரீ புரந்தரவிட்டலன
நிருத நெனேயுவந்தே தய மாடோ (கஜவதன)

நாபிக் கமலத்தில் தாமரைக்கொடியை கொண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனை எப்போதும் (நான்) நினைக்குமாறு தயை காட்டுவாய் (கஜவதன)

**** ****

இந்த வாண்டூஸ் பாடுவதையும் கேளுங்க. அருமையா இருக்கும். ****

Tuesday, July 12, 2011

அடுத்த பதிவு 2012 ஜனவரி 15ம் தேதிதான்.

புரந்தர விட்டலன் தூங்கற நேரம் வந்தாச்சு. அதனால் நானும் தாசர் பாடல்களுக்கு கொஞ்ச நாள் இடைவெளி விடலாம்னு முடிவு பண்ணிட்டேன். இனிமே அடுத்த பதிவு மறுபடி விட்டலன் துயிலெழுந்து கொள்ளும் தினமான மகர சங்கராந்தி அன்று வரும்.

அதுக்குள்ள ரீடரிலிருந்து பதிவை தூக்கிடாதீங்க!

நிறைய அற்புதமான பாடல்கள் வெறும் ஒன்று / இரண்டு சொற்களுக்கு விளக்கம் தெரியாமல் ட்ராஃப்டில் இருக்கின்றன. அவை அடுத்த வருடம் உத்திராயணத்தில் கண்டிப்பாக வரும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

அதுவரை நாம ஏற்கனவே பார்த்த பாடல்களை கேட்டுக் கொண்டிருங்கள்.

ஜெய் ஜெய் விட்டலா!
பாண்டுரங்க விட்டலா!!

*****

Tuesday, June 28, 2011

ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்


ஒரு கோவிலைப் பற்றி, அதில் இருக்கும் கடவுளின் சிறப்புகளைப் புகழ்ந்து தாசர்கள் பாடிய பல பாடல்கள் உள்ளன. அது நமக்குத் தெரியும். ஆனால், ஒரே பாடலில் பல க்ஷேத்ரங்களை குறிப்பிட்டு பாடியதோடல்லாமல், இறைவனை குழந்தை, மகன், தந்தை என்று பல்வேறு உறவுமுறைகளை குறிப்பிட்டு பாடியிருக்கும் ஒரு பாடலும் உண்டு.

அதுதான் இன்றைக்கு பார்க்க இருப்பது.

இந்த புகழ் பெற்ற பாடலில் வரும் க்ஷேத்ரங்கள்: ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், மகிஷபுரி (பேலூர்) மற்றும் உடுப்பி.

***

ரங்க பாரோ பாண்டுரங்க பாரோ
ஸ்ரீரங்க பாரோ நரசிங்க பாரோ (ரங்க)


ரங்கனே வாராய் பாண்டுரங்கனே வாராய்
ஸ்ரீரங்கனே வாராய் நரசிங்கனே வாராய் (ரங்க)

கந்த பாரோ என்ன தந்தே பாரோ
இந்திரா ரமண முகுந்த பாரோ (ரங்க)


குழந்தையே வாராய் என் தந்தையே வாராய்
இலக்குமியின் கணவனே முகுந்தனே வாராய் (ரங்க)

அப்ப பாரோ திம்மப்பா பாரோ
கந்தர்பனய்யனே கஞ்சி வரத பாரோ (ரங்க)


தந்தையே வாராய் திம்மப்பா (வேங்கடவன்) வாராய்
மன்மதனின் தந்தையே காஞ்சி வரதனே வாராய் (ரங்க)

அண்ண பாரோ என்ன சின்ன பாரோ
புண்ணியமூர்த்தி மஹிஷபுரிய சென்ன பாரோ (ரங்க)


தந்தையே வாராய் எந்தன் செல்லமே (தங்கமே) வாராய்
புண்ணியமூர்த்தி மகிஷபுரியின் சென்ன கேசவனே வாராய் (ரங்க)

விஷ்ணு பாரோ உடுப்பி கிருஷ்ண பாரோ
என் இஷ்ட மூர்த்தி புரந்தர விட்டல பாரோ (ரங்க)


விஷ்ணுவே வாராய் உடுப்பி கிருஷ்ணனே வாராய்
என் இஷ்ட தெய்வமே புரந்தர விட்டலனே வாராய் (ரங்க)


***

வித்யாபூஷணர் குரலில் இந்த அருமையான பாடல்.



***

Tuesday, June 21, 2011

அஜாமிளன் என்ன உன் அக்கா மகனா?



தாசர்கள் ஸ்ரீமன் நாராயணனை குழந்தையாக, மகனாக, தோழனாக, தகப்பனாக - இப்படி பல்வேறு ரூபங்களில் நினைத்து பாடியிருக்கின்றனர். ஒவ்வொன்றிலும் அந்த உறவிற்கேற்ப - கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல், அதட்டல் என்று பாடும் தொனி மாறும்.

திருப்பதி வேங்கடரமணனிடம், தாசர், தனக்கு தரிசனம் / மோட்சம் தரவேண்டி பல நாட்களாய் வேண்டிக் கொண்டிருக்கிறார். பல்வேறு பாடல்கள் பாடுகிறார். இறைவனுக்கு சேவை செய்கிறார். அப்படியும் இறைவன் வரவில்லை. இவருக்கு கோபம் (மாதிரி!) வந்துவிடுகிறது. அதெப்படி எனக்கு கருணை காட்டாமல் போகலாம்? பல்வேறு சமயங்களில் பல பேருக்கு கருணை
/ தரிசனம் தந்திருக்கிறாயே, ஹரியே, எனக்கு மட்டும் ஏன் இப்படி பாரபட்சம் காட்டுகிறாய்? என்று உதாரணங்கள் காட்டி ‘நானேன மாடிதேனொ’ என்று இறைவனை தோழனாக வரித்து, உரிமையுடன் கோபமாக பாடுகிறார்.

இப்படி கோபப்பட்டு, கடவுளை திட்டுகிறா மாதிரி பாடுவதை ‘நிந்தா ஸ்துதி’ என்று அழைக்கிறார்கள்.

சரி. அது என்ன உதாரணங்கள்?

திரௌபதி தேவி, அகலிகை, துருவன், குசேலன் - இப்படி பல்வேறு உதாரணங்களை சொன்னாலும், highlightஆ ஒண்ணு சொல்றாரு தாசர். அஜாமிளன். தன் வாழ்நாள் முழுக்க பாவ காரியங்களை செய்தவனாகிய அஜாமிளன், மரணப்படுக்கையில், தன் கடைசி மகனான நாராயணனைக் கூப்பிட்டதால், மோட்சத்துக்கு சென்றான். நான் இப்படி கஷ்டப்பட்டு உனக்கு தினமும் சேவை செய்கிறேன். ஆனா நீ என்னடான்னா, எதுவுமே கேட்காத, எதுவுமே (சத்காரியங்கள்) செய்யாத அந்த அஜாமிளனுக்கு முக்தியைக் கொடுத்தாய். அவன் என்ன உனக்கு அக்கா மகனா? என்று கேட்கிறார்.

வாங்க. அந்த பாட்டையும் பொருளையும் பார்த்தாலே உங்களுக்கு புரிஞ்சிடும். மிகமிகமிக அற்புதமான பாடல்.

***

நானேன மாடிதேனோ ரங்கய்யா ரங்கா
நீ என்ன காய பேகோ (நானேன)


நான் என்ன (பாவம்) செய்தேன், ரங்கா
நீ என்னை காப்பாற்ற வேண்டும் (நானேன)

மானாபி மானவு நின்னது எனகேனு
தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா (நானேன)


(பக்தர்களுக்கு காட்டும்) அன்பு, பாசம் முதலியன உன்னுடையது எனக்கென்ன++
தீன ரக்‌ஷகனே திருப்பதி வேங்கடரமணா (நானேன)

கரிராஜ கரெசிதனே த்ரௌபதி தேவி
பரெதோலே களுஹிதளே
ஹருஷதிந்தலி ரிஷிபத்னிய சாபவ
பரிஹரிசிதேயல்லோ (நானேன)


துரியோதனன் கூப்பிட்டு (அவமானப்படுத்தியபோது) திரௌபதி தேவி
கடிதமா எழுதி அனுப்பினாள்?
(கூப்பிட்ட நேரத்திற்கு வந்து காப்பாற்றினாயல்லவா?)
ஒரு நிமிடத்தில் ரிஷிபத்தினியின் (அகலிகை) சாபத்தை
போக்கினாய் அல்லவா? (நானேன)

ரக்கசசூதனனே கேளோ
த்ருவராயா சிக்கவனல்லவேனோ
உக்கிபருவா கர்மா மாடித அஜாமிள
நின்னக்கன மகவேனோ (நானேன)


அரக்கர்களை அழித்தவனே கேளாய்
துருவ மகாராஜா சின்னப்பையன்தானே?
மறுபிறவி எடுக்கும்படியான பாவத்தை செய்த அஜாமிளன்
(அப்படி எடுக்காமல் மோட்சத்தை கொடுத்து காப்பாற்றினாயே)
அவன் என்ன உன் அக்கா மகனா? (நானேன)

முப்பிடி அவலக்கியா தந்தவனிகே
வப்புவந்தே கொடலில்லவே
சர்ப்பசயன ஸ்ரீ புரந்தரவிட்டலா
அப்ரமேய காயோ (நானேன)


மூன்று பிடி அவல் தந்தவருக்கு
உலகிலுள்ள அனைத்து செல்வங்களையும் நீ கொடுத்தாய் அல்லவா?
சர்ப்பத்தின் மேல் சயனித்திருக்கும் புரந்தர விட்டலனே
இறைவனே (எண்ணிக்கையில் அடங்காதவனே) என்னைக் காப்பாற்று (நானேன)

***

இணையத்தில் இந்த பாடல் சரியாக கிடைக்கவில்லை. ஊரில் taperecorder cassetteலும், என் நினைவில் மட்டுமே இருப்பதால், கிடைத்ததை போட்டிருக்கிறேன். ஒரு பத்தியும் மிஸ்ஸு. பஞ்ச் லைனையும் (தலைப்பு) மாத்தி பாடிட்டாங்க.

ஆனாலும் கேட்கலாம். நல்லாவே பாடியிருக்காங்க.





***

++நான் பக்தவத்சலன் - அதாவது பக்தர்களை அரவணைத்து காப்பாற்றுவேன் என்று நீயே கூறியிருக்கிறாய். அதனால் உன் வாக்குப்படியே நீ என்னை காப்பாற்றி ஆகவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், அதைப் பற்றி கவலைப்படுபவன் நீதானேயன்றி நானில்லை.

***

தீன ரக்‌ஷக திருப்பதிய வேங்கடரமணா!

***

Saturday, June 18, 2011

வேங்கடரமணனே வாராய்...



புரந்தரதாசருக்கு திருப்பதி வேங்கடரமணன் மேல் தனியான அபிமானம் இருந்தது. அவர் மேல் பற்பல பாடல்கள் பாடியிருக்கிறார். பாலாஜியின் பார்வை / தயை / தரிசனம் வேண்டி, அப்படி தரிசனம் கிடைத்தபிறகு ஆனந்தத்தில் - இப்படி பல சூழ்நிலைகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இன்று பார்க்க இருப்பது.

வேங்கடரமணனே பாரோ என்னும் இந்த பாடலில், அவரை ஸ்ரீ கிருஷ்ணனாக, குழந்தையாக பாவித்து, கொஞ்சி, முத்தம் கொடுத்து, அவன் லீலைகளை பாடி தரிசனம் தரவேண்டுகிறார்.

***

வேங்கடரமணனே பாரோ
சேஷாசல வாசனே பாரோ (வேங்கட)

வேங்கடரமணனே வாராய்
சேஷாச்சலத்தில் (திருப்பதியில்) வசிப்பவனே வாராய் (வேங்கட)

பங்கஜநாபா பரமபவித்ரா சங்கர மித்ரனே பாரோ (வேங்கட)

தாமரைக் கண்ணனே மிகவும் பவித்ரமானவனே
சங்கரனின் நண்பனே வாராய் (வேங்கட)

முத்து முகத மகுவே நினகே
முத்து கொடுவேனு பாரோ
நிர்தயவேகோ நின்னோளகே நானு
பொந்தித்தேனு பாரோ (வேங்கட)


அழகான முகத்தையுடைய குழந்தையே உனக்கு
முத்தம் கொடுக்கிறேன் வாராய்
ஏன் தயவில்லை; உன்னில் நான்
கரைந்திருக்கிறேன் வாராய் (வேங்கட)

மந்தர கிரியனெத்திதானந்த
மூருத்தியே பாரோ
நந்தன கந்த கோவிந்த முகுந்த
இந்திரேயரசனே பாரோ (வேங்கட)


மந்தர மலையை தூக்கியவனே
எப்போதும் ஆனந்தமாய் இருப்பவனே வாராய்
நந்தனின் மைந்தனே; கோவிந்தனே முகுந்தனே
இந்திரனின் அரசனே வாராய் (வேங்கட)

காமனய்யா கருணாளோ
ஷ்யாமள வர்ணனே பாரோ
கோமளாங்க ஸ்ரீ புரந்தர விட்டலனே
ஸ்வாமி ராயனே பாரோ (வேங்கட)


மன்மதனின் தந்தையே கருணையே உருவானவனே
கறுமை நிறத்தவனே அழகானவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே ;
தலைவனே வாராய் (வேங்கட)

***

திரு. ராம் பிரசாத் பாடியிருக்கும் இந்த பாடல், கண்டிப்பா அனைவரின் மனதை கொள்ளை கொள்ளும்.



***