Tuesday, January 20, 2015

நல்லதுக்கு காலமே இல்லை!

நல்லதுக்கு காலமே இல்லை!

ஸ்ரீ புரந்தரதாசரின் காலம் - கிபி 1484 - 1564. இன்று அவரது 451வது புண்ணிய தினம் ஆகும். தனது குருவான ஸ்ரீ வியாசராயரினால் ‘தாசரென்றாலே அது புரந்தர தாசர்தான்’ என்று பாடப்பட்டவர். தாசரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே இங்கே பார்த்திருக்கிறோம்.



விஜய நகர சாம்ராஜ்யத்தில் புகழ்பெற்ற வணிகராக இருந்த ஸ்ரீனிவாச நாயக் ஆன நம் நாயகன், அந்த குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டி ஒரு குருவைத் தேடும்போது, அவரது மனைவியானவர், ஸ்ரீ வியாசராயரின் பெயரைச் சொல்ல, அவரைப் போய் பார்த்திருக்கிறார்.

போனதுமே வியாசராயர் இவரைப் பார்த்து, "இங்கே வருவதற்கு இவ்வளவு காலமா? நான் ரொம்ப நாட்களாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனே" என்றாராம். மேலும், நீ செய்ய வேண்டிய செயல்கள் ஏராளமாக உள்ளன. இனியும் தாமதிக்காமல் ஹரிதாசனாகி இறைவனின் புகழைப் பாடு, மக்களிடம் அவனின் பெருமைகளைப் போய் சொல் என்று உபதேசம் செய்ய, பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.

இன்றைய பாடலைப் பற்றி:

மிகவும் புகழ்பெற்ற, பல கச்சேரிகளில் பாடப்பெறும் இந்தப் பாடலைப் பார்த்தால், அந்தக் காலத்திலேயே இப்படி இருந்திருக்கிறார்களா என்றும், 450+ ஆண்டுகள் கழித்தும் இப்போதைய நிலைக்கும் பொருந்தி வருகிறதே என்றும் வியப்படைய வைக்கிறது.

***

சத்யவந்தரிகிது காலவல்லா
துஷ்டஜனரிகிது சுபீட்ச கால (சத்ய)

உண்மையே பேசுபவர்களுக்கு இது காலமல்ல
கெட்டவர்களுக்கு இது நல்ல காலம் (சத்ய)

ஹரிஸ்மரணே மாடுவகே க்‌ஷயவாகுவ கால
பரம பாபிகளிகே சுபீட்ச கால
ஸ்திரவாத பதிவ்ரதெய பரரு நிந்திப கால
தரெகெசாரியள கொண்டாடுவ கால (சத்ய)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நஷ்டமாகும் காலம் இது;
பாவங்களைச் செய்பவர்களுக்கு நல்ல காலம்
பதிவிரதைகளாக இருப்பவர்களை மற்றவர்கள் திட்டும் காலம்
அப்படி இல்லாதோரை அனைவரும் கொண்டாடும் காலம் (சத்ய)

உபகார மாடிதரே அபகரிசுவ கால
சகலவூதிளிதவகே துர்பீட்ச கால
பதிசுதரு எம்புவன நம்பலரியத கால
சடேயல்லவிதே விபரீத கால (சத்ய)

ஒருவருக்கு உதவி செய்தால், இருப்பதையும் எடுத்துக் கொள்ளும் காலம்
அனைத்தும் தெரிந்தவர்களுக்கு கெட்ட காலம்
மனைவி, மக்கள் இவர்களையே நம்ப முடியாத காலம்
(நான் சொல்வது) பொய்யல்ல; இது விபரீதமான காலம் (சத்ய)

தர்ம மாடுவகே நிர்மூலவாகுவ கால
கர்ம பாதகரிகே பஹு சௌக்ய கால
நிர்மலாத்மக ஸ்ரீ புரந்தர விட்டலனா
மர்மதொளு பஜிஸலரியத காலவய்யா (சத்ய)

தர்ம காரியங்கள் செய்பவர்களுக்கு கஷ்டம் வரும் காலம்
கடமைகளை செய்ய மறந்தவர்களுக்கு நல்ல சௌக்யமான காலம்
நிர்மலமான ஸ்ரீ புரந்தர விட்டலனை
புகழ்ந்து பாடி நினைக்கத் தெரியாதவர்கள் இருக்கும் காலம் இது (சத்ய)

***





No comments: