Saturday, March 15, 2014

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும்?


கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் (தாத்தா) என்று போற்றப்படும் புரந்தரதாசர், இந்த சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய முறை, துவக்கத்தில் பாடப்பட வேண்டிய பாடல்கள், மாயாமாளவகொளை ராகம் என பலவற்றை உருவாக்கியவர். தனது அனைத்துப் பாடல்களிலும் ‘புரந்தர விட்டல’ என்னும் தன் முத்திரையைப் பதித்து, அவை அனைத்தையும் அந்த புரந்தரவிட்டலனுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தவர். இறைவனின் பல அவதாரங்கள், வேத உபநிஷத்துகள், த்வைத சித்தாந்தத்தின் சாரங்கள் என அனைத்தைப் பற்றியும் பாடியுள்ள தாசர், மக்களுக்கு அறிவுரை வழங்கியும் பாடல்களைப் புனைந்துள்ளார். ஒரு ராகம் எப்படிப் பாடப்பட வேண்டும், வர்ண மெட்டுக்கள் என்றால் என்ன என்று இன்றளவும் பாடகர்கள் பயன்படுத்தும் விஷயங்களைக் குறித்து விதிகளை வகுத்தவர் தாசரே.

ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியதுடன், ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்ற லட்சணங்களைக் குறித்தும் ஒரு பாடல் பாடியுள்ளார். நல்ல தாளத்துடன், பின்னணி இசையுடன் இருக்க வேண்டுமாம். பாடலைப் பாடுபவர் அந்தப் பாடலின் மொழி, பொருள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, உணர்ந்து பாட வேண்டும் என்றும் சொல்கிறார். அந்தப் பாடலை கேட்பவர் மனம் ஆனந்தப்படுமாறு இருக்க வேண்டும் என்று சொல்லி இறுதியில் தன் முத்திரையுடன் பாடலை முடிக்கிறார்.

***

தாள பேகு பக்க மேள பேகு
சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

தாளம் இருக்க வேண்டும்; பக்க வாத்தியங்களும் இருக்க வேண்டும்
அமைதியான நேரம்/காலம் இருக்க வேண்டும்; பாடலை கேட்க விரும்புபவர்களுக்கு (தாளம்)

கள சுத்த இரபேகு திளிது பேளலு பேகு
களவள பிடபேகு களெமுக இரபேகு (தாள)

(பாடுபவர்) குரல் சுத்தமாக இருக்க வேண்டும்;
(பாடும் வரிகளை) தெரிந்து புரிந்து உச்சரிக்க வேண்டும்
(பாடுபவர், அவரது) மனதில் குழப்பங்களை விடவேண்டும்
(பாடுபவர் முகம்) நல்ல களையுடன் இருக்க வேண்டும் (தாள)

ஜதிப்ராச இரபேகு கதிகே நில்லச பேகு
ரதிபதிபிதனோளு அதி ப்ரேம இரபேகு (தாள)

எதுகை/மோனை இருக்க வேண்டும்;
(தக்க இடத்தில்) நிறுத்திப் பாட வேண்டும்;
ரதியின் கணவனான மன்மதனின் தந்தையான ஸ்ரீமன் நாராயணனிடத்தே பக்தி இருக்க வேண்டும் (தாள)

அரிதவரு இரபேகு ஹருஷ ஹெச்சலி பேகு
புரந்தரவிட்டலனல்லி த்ருட சித்த இரபேகு (தாள)

(என்ன பாடுகிறோம் என்று) தெரிந்தவராக இருக்க வேண்டும்;
(பாடலை) கேட்பவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும்
புரந்தரவிட்டலனிடம் திடமான பக்தி இருக்க வேண்டும் (தாள)

***

இந்தப் பாடலை பாடியுள்ள Dr. நாகவல்லி நாகராஜ் அவர்கள்:

http://www.youtube.com/watch?v=0HHvYcFk8H8

***

No comments: