Friday, June 5, 2015

போகாதே ரங்கா போகாதே!

கிருஷ்ணா நீ பேகனே பாரோன்னு கிருஷ்ணனைக் கூப்பிட்டு வீட்டில் இருக்கச் சொன்ன தாசர்கள், அந்தக் கிருஷ்ணனை வெளியில் போகவேண்டாமென்றும் பாடியுள்ளனர். வெளியில் போனால் என்னென்ன பிரச்னைகள் வரும், யாரெல்லாம் அவனைக் கூப்பிட்டுக் கொண்டுபோக காத்திருக்கின்றனர் என்றெல்லாம் இந்த அருமையான பாட்டில் பாடியுள்ளார் புரந்தரதாசர்.

***




போகாதிரேலோ ரங்கா பாகிலிந்தாச்சே
பாகவதரு கண்டு எத்தி கொண்டைவரு (போகாதிரேலோ)

கதவுக்கு அந்தப்பக்கம் (வெளியே) போகாதே, ரங்கா
(எப்போதும் உன்னை நினைத்து, தேடிக் கொண்டிருக்கும்) பாகவதர்கள், உன்னைக் கண்டு தூக்கிப் போய்விடுவார்கள் (போகாதிரேலோ)

சுரமுனிகளு தம்ம ஹ்ருதய கமலதல்லி
பரமாத்மன காணதே அரசுவரு
தொரகத வஸ்துவு தொரகிது தமகெந்து
ஹருஷதிந்தலி நின்ன கரெதெத்தி கொம்புவரு (போகாதிரேலோ)

முனிவர்கள் தங்கள் இதயத்தில்
இறைவனைக் காணாமல் வருந்தும் நேரத்தில்
கிடைக்காத பொக்கிஷம் நமக்குக் கிடைத்தது என்று
ஆனந்தத்துடன் உன்னை கையில் தூக்கிக் கொண்டுவிடுவார்கள் (போகாதிரேலோ)

அகணீத குண நின்ன ஜகத நாரியரெல்ல
ஹகெயாகி நுடிவரோ கோபாலனே
மகுகள மாணிக்யன தகலித்து கரகெந்து
வேகதிந்தலி பந்து பிகிதப்பி கொம்புவரு (போகாதிரேலோ)

எண்ணற்ற நற்குணங்களையுடைய உன்னை, ஊரிலுள்ள பெண்கள் அனைவரும்
(உன் குறும்புகளை) மறந்து, உன்னைக் கூப்பிடுவார்கள், கோபாலனே
குழந்தைகளில் முதல்வனே, உன்னுடன் இருக்க வேண்டுமென்று
வேகமாக வந்து, வாரி அணைத்துக் கொள்வார்கள் (போகாதிரேலோ)

திட்ட நாரியரெல்ல இஷ்டவ சலிசெந்து
அட்டட்டி பென்னட்டி திருகுவரோ
ஸ்ருஷ்டீச புரந்தர விட்டல ராயனே
இஷ்டிஷ்டு பெண்ணெய கொட்டேனோ ரங்கய்யா (போகாதிரேலோ)

விரதங்களை செய்யும் பெண்மணிகள், தங்கள் விரும்பியதை அடைய
(உன்னை) பின்தொடர்ந்து எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பர்
உலகத்தைப் படைத்த புரந்தர விட்டலனே
உனக்கு கொஞ்சமே கொஞ்சம் வெண்ணையைக் கொடுக்கிறேன் ரங்கய்யா (போகாதிரேலோ)



 ***
இதே பாடலை அருமையாகப் பாடியுள்ள Dr.ராஜ்குமார்:

 

 ***

Pogadirelo Ranga Lyrics and Meaning in Tamil.

Wednesday, June 3, 2015

உலகம் மாயை - தற்காலிகமானது



பூஜை புனஸ்காரங்கள், கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் வணிகத்தில் ஈடுபட்டு கருமியாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்த புரந்தர தாசர், அனைத்து செல்வங்களையும் தானம் செய்துவிட்டு, தினப்படி பிக்‌ஷை பெற்று வாழலானார் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்டவர், அதைப் பற்றி பல பாடல்களாகவும் எழுதியுள்ளார்.



முதலில் இந்தப் பாடலைப் பார்த்துவிடுவோம். சிறு விளக்கம் பின்னர்.

அல்லிதே நம்மனே
இல்லி பந்தே சும்மனே (அல்லிதே)

நம்ம வீடு அங்கே இருக்கிறது;
நான் இங்கே வந்தது தற்காலிகமாகத்தான் (அல்லிதே)

கட பாகிலிரிசிதா கள்ள மனே இது
முததிந்த லோலாடோ சுள்ளு மனே
இடிராகி வைகுண்ட வாச மாடுவந்தா
பதுமனாபன திவ்ய பதுகு மனே (அல்லிதே)

வாசல், கதவுகளுடன் கூடிய பொய்யான வீடு இது
மிகவும் பிரியத்துடன் கட்டிக் காக்கப்படும் பொய்யான வீடு இது
வைகுண்டத்தில் வாசம் செய்யும்
பத்பனாபன் வந்து தங்கி இதை தன் வீடாகிக் கொண்டான் (அல்லிதே)

மாளிகேமனேயெந்து நெச்சி கெடலி பேடா
கேளய்யா ஹரிகதே ஸ்ரவணங்களா
நாளே யமதூதரு பந்தெளெதொவ்யாக
மாளிகே மனெயு சங்கத பாரதய்யா (அல்லிதே)

மாட மாளிகை என்று நினைத்து ஏமாற வேண்டாம்
இறைவனின் கதைகளை, சொற்பொழிவுகளைக் கேட்கவும்
நாளையெ எமதர்மனின் தூதர்கள் வந்து உன்னை கூப்பிடும்போது
இந்த மாட மாளிகைகள் உன் கூட வராது (என்று தெரிந்துகொள்) (அல்லிதே)

மடதி மக்களெம்ப ஹம்பல நினகேகோ
கடுகொப்புதனதல்லி மெரெயதிரோ
ஒடெய ஸ்ரீ புரந்தரவிட்டல ராயன
த்ருட பக்தியல்லி நீ பஜிசெலோ மனுஜா (அல்லிதே)

மனைவி மக்கள் என்று (எப்போதும்) அவர்களையே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்காதே
எப்போதும் ஆணவத்துடன் சுற்றிக் கொண்டிருக்காதே
நம் முதல்வன் ஸ்ரீ புரந்தரவிட்டலன் மேல்
பக்தி கொண்டு, அவரைப் பற்றி எப்போதும் பஜித்துக் கொண்டிருப்பாய் நீ (அல்லிதே)

***

இந்தப் பாடலை இரு விதமாகப் புரிந்து கொள்ளலாம். வீடு என்பதை இந்த உலகம் அல்லது இந்த உடல் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த உலகம் தற்காலிகமானது, நாம் இங்கு வந்தது நிரந்தரமானதல்ல என்று கூறுவது போலவும், ஆத்மா இந்த உடலுக்கு வந்து சேர்ந்தது தற்காலிகமானதுதான் என்றும் பொருள் கொள்ளலாம்.

மாட மாளிகைகள், உறவுகள் எவையும் இறுதியில் எமதூதர்கள் வந்து கூப்பிடும்போது நம்முடன் வராது. அதனால் ஆணவத்துடன் சுற்றித் திரியாமல், அந்த புரந்தர விட்டலனை நினைத்துக் கொண்டிருப்பாயாக என்று கூறுகிறார் தாசர்.

Allidhe Namma Mane - Purandharadasar
***

Monday, June 1, 2015

பாடல்களை எப்படிப் பாட வேண்டும்?


மலகி பரமாதரதி பாடலு
குளிது கேளுவா குளிது பாடலு நிலுவா
நிந்தரே நலிவா, நலிதரே ஒலிவே நிமகெம்பா
சுலபனோ ஹரி தன்னவரனர
களிகே பிட்டகலனோ ரமாதவன
ஒலிசலரியதே பாமரரு பளலுவரு பவதொளகே..



சரணம், பல்லவி etc கொண்ட பாடல் அல்ல இன்று பார்க்கப்போவது. ஒரு சிறிய ஸ்லோகம் போன்றதொரு வரிகள் மட்டுமே. பாடல்களுக்கு முன் இப்படிப்பட்ட ஸ்லோகங்களைப் பாடுவது வழக்கம்.

மேற்சொன்ன புகழ்பெற்ற வரிகள், ஜகன்னாததாசர் எழுதிய ஹரிகதாம்ருத சாரம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இதன் பொருள்?

இறைவனைப் பற்றிப் பாட வேண்டும். எப்படிப் பாடுவது? உட்கார்ந்து? நின்று? நடந்து? எப்படிப் பாடினால், அவனுக்குப் பிடிக்கும்? எப்படிப் பாடினால், எப்படி கேட்பான்? தாசர் சொல்கிறார் - படுத்துக் கொண்டு கூட அவன் புகழ் பாடலாம்.

மலகி பரமாதரதி பாடலு குளிது கேளுவா
படுத்துக் கொண்டு (அவன் புகழ்) பாடினால், உட்கார்ந்து கேட்பான்

குளிது பாடலு நிலுவா
உட்கார்ந்தவாறு பாடினால், நின்றுகொண்டு கேட்பான்

நிந்தரே நலிவா
நின்றுகொண்டு பாடினால், ஆடிக்கொண்டே கேட்பான்

நலிதரே ஒலிவே நிமகெம்பா
நாம் ஆடிக்கொண்டே பாடினால், என்னையே உங்களுக்குக் கொடுப்பேன் என்பான்

சுலபனோ ஹரி தன்னவரனர களிகே பிட்டகலனோ
ஹரியை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம்; அவன் தன் பக்தர்களை விட்டு ஒரு கணமும் அகலாதவன்

ரமாதவன ஒலிசலரியதே பாமரரு பளலுவரு பவதொளகே
(இந்த உண்மைகளை அறியாமல்) அந்த லட்சுமிபதியை எப்படி திருப்திப்படுத்துவது என்று அறியாமல் மக்கள் சம்சார சாகரத்தில் மூழ்கித் திளைக்கிறார்களே!

***

அது சரி, இதற்கு உதாரணங்கள் உண்டோ? உண்டு.

பீஷ்மர். படுத்துக் கொண்டே சொன்னது விஷ்ணு சஹஸ்ரநாமம். குனிந்து கேட்ட கிருஷ்ணன் சொன்னது - நான் சொன்ன பகவத்கீதையை விட என்னைப் பற்றி சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகச் சிறந்தது.

புண்டரீகன். தன் தாய் தந்தையருக்கு சேவை செய்தவாறு இறைவன் புகழ் பாடுகையில், அவன் போட்ட செங்கல் மேல் நின்று விட்டலன் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.

பிரகலாதன். தூண் முன் நின்றவாறு இறைவனைப் பாடிய பிரகலாதன் முன் இறைவன் தோன்றி மகிழ்வித்தான்.

நாரதர். பாடி ஆடியவாறு திரியும் நாரதர் மேல் இறைவனுக்கு அதிக பிரியம் என்பது நாம் படித்து அறிந்ததே.

***