Thursday, March 31, 2011

ஆண்டவன் காப்பாற்றுவான், இதில் சந்தேகமேயில்லை

இந்த உலகத்தில் எல்லாரும் சந்தோஷமாயிருக்காங்க. என்னை மட்டும் ஏன் இந்த ஆண்டவன் இப்படி படுத்தறான்? ஆண்டவன்னு ஒருவன் இருக்கானா இல்லையான்னே தெரியலியே? - இப்படி புலம்புபவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கலாம். வாழ்க்கையில் மேல் விரக்தி அடைந்து இப்படி புலம்புபவர்களுக்காக ஸ்ரீ கனகதாஸர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்று இன்று பார்ப்போம். முன்னாடி பார்த்த நிறைய பாடல்களில் - கடவுள் கஜேந்திர மோட்சம் கொடுத்தான், திரௌபதிக்கு சேலை கொடுத்தான் - இப்படியெல்லாம் உதாரணம் காட்டி, எனக்கும் தயை காட்டு என்று தாஸர்கள் வேண்டுவதை பார்த்தோம். ஆனால் இந்த பாடலில், புராண உதாரணங்கள் எதுவுமில்லாமல், எல்லாம் சமகாலத்தில் நடக்கும் சாதாரண விஷயங்களையே சொல்லி, துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு தைரியம் கொடுக்கிறார் கனகதாஸர். மனதில் உறுதி வேண்டும், தைரியத்தை இழக்காதே, கண்டிப்பாக ஆண்டவன் உனக்கு கைகொடுப்பான் என்று கூறி தாஸர் பாடும் பாடல்தான் ‘தள்ளனிசதிரு கண்ட்யா’. *** திருவிளையாடல்(?) படத்தில் ஒரு காட்சி வரும். உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கிவிட்டேன் என்று சிவபெருமான் கூறும்போது, பார்வதிதேவி தான் மறைத்து வைத்திருந்த ஒரு டப்பாவில் உள்ள ஒரு எறும்புக்கு நீங்கள் உணவளிக்க மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே என்று கூறுவார். அப்போது சிவன், அதைத் திறந்து பார் எனவும், அங்கே பார்த்தால், அந்த எறும்புக்கு அருகில் அதற்கான உணவு இருக்கும். அகில உலகத்திற்கும் படியளப்பவன் அந்த பரம்பொருளே என்று கூறும் அந்த காட்சியின் சாரத்தையே ஸ்ரீகனகதாஸரும் இந்த பாடலில் பாடுகிறார். *** தள்ளனிசதிரு கண்ட்யா தாளு மனவே எல்லரனு சலஹுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) சஞ்சலப்படாமல் பொறுமையுடன் இருப்பாய் மனமே எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) பெட்டதா துதியல்லி ஹுட்டிருவ விருக்ஷக்கே கட்டேயனு கட்டி நீர் எரேதவரு யாரு புட்டிசித சுவாமிதான் ஹோடேகாரனாகிரலு கெட்யாகி சலகுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) மலைமேல் வளர்ந்திருக்கும் மரங்களுக்கெல்லாம் (அங்கேயே) குட்டையை கட்டி நீர் இறைத்தவர் எவரோ பிறக்கவைத்த கடவுளே காப்பாற்றுபவனாகவும் இருப்பதால் கண்டிப்பாக காப்பாற்றுவான் இதில் சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) அடவியொளகாடுவா மிருக பக்ஷி களிகெல்லா அடிகடிகே ஆஹாரா இட்டவரு யாரு படேத ஜனனிய தெரதி சுவாமி ஹோடேகீடாகி பிடதே ரட்சிபநிதகே சந்தேக பேடா. அடர்ந்த காடுகளில் உலவும் மிருக, பறவைகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆகாரம் கொடுப்பவர் யாரோ இந்த உலகத்தை படைத்த கடவுளே காப்பாற்றுவான் கைவிடமாட்டான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) கல்லொளகே ஹுட்டிருவ க்ருமிகீட களிகெல்லா அல்லல்லி ஆஹார இத்தவரு யாரு புல்லலோசன காகிநெலெ ஆதிகேசவனு எல்லரனு சலஹனுவனோ இதக்கே சம்சயவில்லா (தள்ளனிசதிரு) கல்லுக்குள் இருக்கும் தேரைக்கெல்லாம் அங்கங்கேயே உணவு கொடுப்பவர் யாரோ மலரைப் போலவும், ஒளியுடைய கண்களையுடவனுமாகிய காகிநெலெ ஆதிகேசவன் எல்லாரையும் காப்பாற்றுவான் இதற்கு சந்தேகமேயில்லை (தள்ளனிசதிரு) *** திருமதி. ஜெயவந்தி அவர்கள் பாடிய பாடல்: ஒரு கன்னட திரைப்படத்தில் வந்த இந்த பாடல்: *** பின்குறிப்பு: அப்போ கடவுளே எல்லாத்தையும் பாத்துப்பாரா, நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லையான்னு கேக்கப்படாது. பிரச்சினைகளில் இருந்து விடுபட மனித முயற்சியும் கண்டிப்பாக தேவை. அப்போதுதான் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். சித்தி மனித முயற்சி. அருள் தெய்வ அனுக்கிரகம். மனித முயற்சி முடியுமிடத்தில் தெய்வ அருள் செயல்படும். இந்த பழமொழிகளெல்லாம் தெரியும்தானே? ***

Tuesday, March 22, 2011

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்


தலைப்பை பார்த்ததும் பாட்டை டக்குன்னு பிடிச்சிருப்பீங்க. பற்பல பாடகர்களாலும், ஹரிஹரனாலும் (Colonial Cousins) பாடப்பட்டு, அனைவருக்கும் பிடித்த மிகவும் இனிமையான பாடல்தான் இது - கிருஷ்ணா நீ பேகனே பாரோ. இந்த பாடலை இயற்றிவர் ஸ்ரீ வியாஸராயர். இவருடைய புண்ணிய தினம் 3/23 அன்று வருவதையொட்டி, இந்த பதிவும் பாடலும் இன்று.

***


ஸ்ரீ வியாஸராயர் 1460ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் யதிராஜா. 7 வயதில் உபநயனம் செய்வித்து, பிரம்மண்ய தீர்த்தர் என்ற குருவிடம் கல்வி கற்க அனுப்பி வைக்கப்பட்டார். இவருடைய திறமைகளை கண்ட பிரம்மண்ய தீர்த்தர், வியாஸராயர் என்று பெயரிட்டு, சன்னியாசம் கொடுத்தார். அப்போது அவருக்கு வயது 16.பிறகு காஞ்சியிலும், முளபாகலிலும் ஸ்ரீபாதராயரிடம் வேத வேதாந்தங்களை கற்ற ஸ்ரீ வியாஸராயர், விஜயநகர பேரரசின் அரசர் சலுவ நரசிம்ம ராயரிடம் ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். அந்த அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ வியாஸராயர் திருப்பதிக்கு சென்று வேங்கடனின் திருக்கோயிலில் சுமார் 12 வருடங்கள் பாதுகாவலராகவும் சேவை செய்தார். விஜயநகர பேரரசில் அடுத்து வந்த ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரிடமும், ஸ்ரீ வியாஸராயர் ராஜகுருவாக இருந்தார்.

ஒரு முறை ஸ்ரீ வியாஸராயர், ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரை குஹு யோகம் என்ற அபாயத்திலிருந்து காப்பாற்றினார். அதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கிருஷ்ணதேவ ராயர், வியாஸராயருக்கு மிகவும் மரியாதை செலுத்தி, அவரை வணங்கி வந்தார்.

ஸ்ரீ வியாஸராயர், மத்வர் வழியில் வந்த மடாதிபதிகளில் முக்கியமானவர். அவர் பற்பல புத்தகங்கள், பாடல்கள் நமக்கு தந்துள்ளார். புரந்தரதாஸர், கனகதாஸர் முதலான தாஸர்களுக்கும், (கும்பகோணத்தில் சமாதியடைந்த) ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தருக்கும் குருவாக இருந்தவர். தென்னிந்தியா முழுக்க சுமார் 700 ஆஞ்சனேயர் கோயில்களை ஸ்தாபித்து பக்தியை பரப்பியவர்.


பிரகலாதனின் அவதாரமாக கருதப்பட்ட ஸ்ரீ வியாஸராயர், 1539ம் ஆண்டு ஹம்பிக்கு அருகே துங்கபத்ரா நதிக்கரையோரம் சமாதியடைந்தார்.

***

கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் ராஜகுருவாக இருந்த ஸ்ரீ வியாஸராயரின் நினைவாக இன்றும் அந்த மடத்தின் தலைவருக்கு (தற்போதைய தலைவர் ஸ்ரீ வித்யா மனோகர தீர்த்தர்) தினமும் மாலையில் அரசவையில் இருப்பது போல் ராஜஅலங்காரம் செய்வித்து, அவர் மூலம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பூஜைகள் செய்விக்கப்படுகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள இந்த மடத்தில், அதன் (அப்போதைய) தலைவர் வந்திருக்கும் சமயங்களில் அந்த அற்புதமான காட்சியை, பூஜையை கண்டிருக்கும் பாக்கியத்தை அடைந்திருக்கிறேன்.

இப்போ பாடல்.

***

கிருஷ்ணா நீ பேகனே பாரோ
பேகனே பாரோ முகவன்னே தோரோ (கிருஷ்ணா)


கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)

காலா லந்திகே கெஜ்ஜே நீலத பாவோலி
நீலவர்ணத நாட்யா வாடுத பாரோ (கிருஷ்ணா)

கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)

உடியல்லி ஊடுகெஜ்ஜே பெரளல்லி உங்குர
கொரளோளு ஹாகித வைஜயந்தி மாலே (கிருஷ்ணா)

இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)

காசி பீதாம்பர கையல்லி கொளலூ
பூசித ஸ்ரீகந்த மையொள கிரலு (கிருஷ்ணா)

பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத்தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)

தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)

***

கண்ணன் பாடல்களில் இந்த பதிவை பாத்துடுங்க. KRSன் அழகிய வர்ணனைகளுடன், பல பக்தர்களின் குரலில் இந்த பாடலும் பதிவு செய்யப்பட்டிருக்கு.
http://kannansongs.blogspot.com/2008/06/100-krs_26.html

***

யூட்யூபில் இந்த பாடலுக்கு ஏகப்பட்ட காணொளிகள் இருந்தாலும், இரண்டை மட்டும் இங்கே பாத்துடுவோம்.

திரு.யேசுதாஸ் பாடியது



திருமதி. சித்ரா பாடியது



***

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

***

Monday, March 14, 2011

அனைத்திற்கும் தலைவன் யார்?


மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மாபெரும் வெற்றியடைந்தாலும், தர்மருக்கு அவ்வளவாக சந்தோஷமில்லை. அவரிடம் பதில் தெரியாத பல கேள்விகள் இருந்தன. அப்படி என்ன கேள்விகள்?

ஏன் இந்த யுத்தம் நடைபெற்றது?
தர்மம் என்றால் என்ன?
பாவ புண்ணியம் என்றால் என்ன?

இப்படி பற்பல கேள்விகள்.

தர்மரின் மனக்குழப்பத்தை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், அவரை அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் ஸ்ரீபீஷ்மரிடம் அழைத்துச் சென்றார். ஸ்ரீ பீஷ்மரே எல்லா சந்தேகங்களையும் தீர்க்க வல்லவர் என்றும் கூறுகிறார்.

இப்போது தர்மர் பீஷ்மரிடம் கேள்விகள் கேட்கிறார்.

கிமேகம் தைவதம் லோகே
கிம் வாப்யேகம் பராயணம் !
ஸ்துவம்த:கம் கமர்சந்த:
ப்ராப்னுயுர் மானவா சுபம் !!

கோ தர்ம: சர்வதர்மாணாம்
பவத: பரமோமத:!
கிம் ஜபன் முச்சதே ஜந்துர்
ஜன்ம சம்சார பந்தனாத்!!


1. உத்தமமான கடவுள் யார்?
2. யாரிடம் போய் நாம் அனைவரும் சரணமடையலாம்?
3. யாரை புகழ்ந்து பாடினால், நாம் அமைதியையும், வளர்ச்சியையும் (முக்தி) அடையலாம்?
4. யாரை வணங்குவதால், நமக்கு மோட்சம் கிட்டும்?
5. மிகவும் உயர்ந்த தர்மமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
6. யார் பெயரை உச்சரிப்பதன் மூலம், ஜீவராசிகள் மறுபிறப்பு அடையாமல் இருப்பார்கள்?

இவைகளுக்கு பதில் சொல்லும் பீஷ்மர், பகவான் விஷ்ணுவின் அருமை பெருமைகளை சொல்லும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அருளுகிறார்.

ஜகத்ப்ரபும் தேவதேவம்
அனந்தம் புருஷோத்தமம் !
ஸ்துவன் நாம சஹஸ்ரேண
புருஷஸ் ஸததோஸ் தித: !!


அனைவரிலும் உத்தமமானவன் அந்த புருஷோத்தமன். அவனை வணங்குவதாலேயே மறுபிறப்பு கிட்டாமல், மோட்சம் கிட்டும் என்று சொல்கிறார்.

***



இப்படி சர்வோத்தமனான அந்த நாராயணனே, எங்கும் வியாபித்திருக்கிறான். அவனாலேயே அனைத்தும் இயங்குகின்றன. இந்த கோள்கள், நட்சத்திரங்கள், சூரிய சந்திரர்கள் முதற்கொண்டு அனைத்திலும் இருப்பது அவனே.

இந்த விளக்கத்தையே ஸ்ரீ புரந்தரதாஸர் இந்த அற்புதமான பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார்.

இனி பாடல்.

***

சகல க்ரஹபல நீனே சரசிஜாக்ஷா
நிகில வியாபக நீனே விஸ்வரக்ஷா (சகல)

அனைத்து கிரகங்களின் பலன்களும் நீயே, தாமரை போல் கண்களை உடையவனே,
எல்லா இடத்திலும் இருந்து, இந்த உலகத்தை கட்டிக்காப்பவனே (சகல)

ரவிசந்திர புத நீனே ராஹு கேதுவு நீனே
கவி குரு சனியு மங்களனு நீனே
திவராத்ரியு நீனே நவவிதானவு நீனே
பவரோக ஹர நீனே பேஷஜனு நீனே (சகல)

சூர்ய, சந்திர, புதனும் நீயே, ராகு கேதுவும் நீயே
வியாழன், சனி மற்றும் வெள்ளியும் நீயே
பகலும் இரவும் நீயே, ஒன்பது விதானங்களும் நீயே++
நோய்களை தீர்க்கும் மருத்துவனும் நீயே, மருந்தும் நீயே (சகல)

பக்ஷமாசவு நீனே பர்வகாலவு நீனே
நக்ஷத்ர யோக கரணகளு நீனே
அக்ஷயதி திரௌபதிய மானவனு காய்த நீ
பக்ஷிவாகன லோக ரக்ஷகனு நீனே (சகல)


(சுக்ல & கிருஷ்ண) பட்சமும் நீயே, மாதங்கள், பர்வ காலங்கள் நீயே
நட்சத்திர, யோக, கரணங்களும் நீயே
திரௌபதியின் மானத்தை குறைவில்லாத ஆடையளித்து காப்பாற்றிய நீ
கருட வாகனத்தில் வந்து உலகத்தை காப்பாற்றுபவனும் நீயே (சகல)

ருது வாசர நீனே ப்ருதிவிகாதியு நீனே
க்ரது ஹோம யஞ்ய சத்கதியு நீனே
ஜிதவாகி என்னோடைய புரந்தர விட்டலனே
ஸ்ருதிகே சிலுகதா அப்ரதிம மஹிம நீனே (சகல)

(ஆறு) காலமும், வருடங்களும், வருடப்பிறப்பும் நீயே
ஹோம, யாகங்களினால் அடையும் முக்தியும் நீயே
யாராலும் தோற்கடிக்க முடியாத என் தலைவன் புரந்தர விட்டலனே,
நீ வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனே (சகல)


***

++ஒன்பது விதானங்கள் என்றால் என்ன?

அவை 6 வேதாங்கங்கள் மற்றும்
7. மீமாம்சம்
8. நியாய
9. சாங்க்யம்

ஆகும்.

இப்போ 6 வேதாங்கங்கள் அப்படின்னா என்ன?

1. சிக்‌ஷா
2. கல்பா
3. வ்யாகரணம்
4. நிருக்தா
5. சந்தஸ்
6. ஜ்யோதிஷ

வேதங்களை படித்து அறிந்து கொள்ளுவதற்கு முன், இந்த ஆறு வேதாங்கங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு விதி உள்ளதாம்.

***

திருமதி.விசாகா ஹரி, ஒரு கதையின் நடுவில் பாடிய இந்த பாடல்.



***

யூட்யூபில் சிக்கிய இந்த பாடலின் இன்னொரு காணொளி.



***

Wednesday, March 9, 2011

உடுப்பியில் பாடப்பட்ட இன்னொரு அற்புதமான பாடல்.




சிலர் தங்கள் குறைகளை தாய் தந்தையரிடம் சொல்கின்றனர்; சிலர் மனைவி, மக்களிடம்; மற்றும் சிலர் நண்பர்களிடம். இவர்கள் யாரிடத்திலும் சொல்ல முடியாத குறைகளை - ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை அறிந்தவர்கள் - அவரிடமே சொல்கின்றனர்.

ஸ்ரீ ராகவேந்திரரின் புகழ்பெற்ற ஸ்லோகமான

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச !
பஜதாம் கல்பவ்ருக்‌ஷாய நமதாம் காமதேனவே !!

சொல்வது என்னவென்றால்,

ராகவேந்திரரை வழிபடுங்கள், அவரே சத்தியத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுபவர். அவரை பஜிப்பவர்களுக்கு கல்பவிருட்சம் போலவும், நினைப்பவர்களுக்கு காமதேனுவைப் போலவும் அருளை வாரி வழங்குவார்.

***

ஸ்ரீ ராகவேந்திரர், மத்வ மதத்தில் வந்த ஒரு பெரிய மகான். 1595ல் புவனகிரியில் பிறந்து, திருமணம் செய்து பிறகு சன்னியாசம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். பல்வேறு மதத்தலைவர்களை வாதத்தில் வென்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ள ஸ்ரீ ராகவேந்திரர், மந்திராலயத்தில் சமாதியடைந்தவர்.

இவரது வரலாறை தெரிந்துகொள்ள தமிழ்ஹிந்துவில் வந்த இந்த பதிவை பார்த்துவிடவும். (நான் மைனஸ் ஓட்டு போட எண்ணிய) இந்த பதிவில் மறுமொழிகளில் நல்ல குறிப்புகளும், விவாதங்களும் உண்டு.

ஒரு முறை ஸ்ரீ ராகவேந்திரர், உடுப்பி கிருஷ்ணனை தரிசனம் செய்ய வந்தபோது, இந்த பாடலை - இந்து எனகே கோவிந்தா - பாடியதாக சொல்கின்றனர். இதை அவர் பாடவில்லை என்று ஒரு “சர்ச்சை”யும் உண்டு. ஆனாலும், நம்ம உடுப்பி கிருஷ்ணனை வணங்கி பாடப்படும் இந்த அழகான பாடலை, ஸ்ரீ ராகவேந்திரரே இயற்றி, பாடியதாக எண்ணி, அதன் பொருளோடு பாடி, மகிழ்வோம் வாருங்கள்.

***

இன்னொரு முக்கிய குறிப்பு:

ஸ்ரீ ராகவேந்திரரின் ஜன்ம தினம் மற்றும் அவர் பீடாதிபதி ஆன நாள் இரண்டும் இந்த வாரம் வருவதையொட்டி, அவர் மடம் இருக்குமிடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு கர்நாடக மாநிலம், ஹொஸ்பேட்டில், நடைபெறும் நிகழ்ச்சியை தினந்தோறும் (சென்ற வாரயிறுதி முதல் அடுத்த வாரயிறுதி வரை 3/5 - 3/12) http://saptaaha.com தளத்தில் நேரடி ஒளிபரப்பும் நடைபெறுகிறது.

இப்போது பாடல்.

***



இந்து எனகே கோவிந்தா
நின்னய பாதார விந்தவ தோரோ முகுந்தனே (இந்து)

இன்று எனக்கு கோவிந்தா
உன் பாதாரவிந்தங்களை காட்டு முகுந்தனே (இந்து)

சுந்தர வதனனே நந்தகோபிய கந்தா
மந்தரோத்தாரா ஆனந்தா இந்திரா ரமணா (இந்து)

அழகான முகத்தோனே, இடையர்குல மகனே (வாரிசே)
மந்தார மலையை தூக்கியவனே, லட்சுமியின் தலைவனே (இந்து)

நொந்தேனய்யா பவபந்தனதொளு சிலுகி
முந்தே தாரி காணதே குந்திதே ஜகதொளு
கந்தனந்தெந்தென்ன குந்துகள எணிசதே
தந்தே காயோ கிருஷ்ணா கந்தர்ப்ப ஜனகனே (இந்து)

இந்த சம்சார சாகரத்தில் மூழ்கி நொந்து போனேன்
முன் செல்லும் வழி தெரியாமல் இந்த உலகத்தில் தவித்தேன்
என்னை குழந்தையாக பாவித்து, என் தவறுகளை எண்ணாமல்
தந்தையே, என்னை காப்பாற்று, மன்மதனின் தந்தையே (இந்து)

முதாதனதி பலு ஹேடிஜீவனனாகி
த்ருடபகுதியனு மாடலில்லவோ ஹரியே
நோடலில்லவோ நின்ன பாடலில்லவோ மஹிமே
காடிகார கிருஷ்ணா பேடிகொம்பேனோ நின்ன (இந்து)

மூடனான நான் மிகவும் கோழையான வாழ்வு வாழ்ந்து
உன்னிடத்தில் அசைக்கமுடியாத பக்தியை செய்யவில்லை
உன்னை பார்க்கவில்லை; உன் மகிமையை பாடவில்லை
தேரோட்டியான கிருஷ்ணனே; உன்னை வேண்டிக் கொள்கிறேன் (இந்து)

தாருணியொளு பலுபார ஜீவனனாகி
தாரி தப்பி நடதே சேரிதே குஜனர
ஆரு காயுவரில்லா சாரிதே நினகய்யா
தீர வேணுகோபாலா பாருகாணிசோ ஹரியே (இந்து)

இந்த உலகத்தில் (ஒன்றுமே செய்யாமல்) வாழ்ந்து வந்தேன்
தவறான வழியில் போய் தவறான மனிதர்களிடம் போய் சேர்ந்தேன்
என்னை காப்பாற்ற இப்போது யாருமில்லை; உன்னை வந்தடைந்தேன்
வேணுகோபாலனே, என்னை ரட்சிப்பாய் ஹரியே (இந்து)


****

இப்போ காணொளிகள்.

இந்த இரண்டு காணொளிகளும் திரைப்படங்களுக்காக பதிவு செய்யப்பட்டவையே. இரண்டிலும், இரண்டாவது சரணம் மிஸ்ஸிங்.

முதலாவதாக, P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடியது



அடுத்து PBSக்கு போட்டி போட்டு, உணர்ச்சிபூர்வமாக பாடியவர் நம்ம S.ஜானகியம்மா.



***

ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

***

Wednesday, March 2, 2011

ஒம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய..



மாக மாதம், கிருஷ்ண பட்ச சதுர்த்தசியான இன்று மஹா சிவராத்திரி. சிவபெருமானுக்கு உகந்த நாள். சிவத்தலங்களில், சிவன் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாளாகும். சிவராத்திரியின் சிறப்புகளையும், சிவனைக் குறித்து பூஜைகள் செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து ஒரு நல்ல பதிவு இங்கே இருக்கிறது. படித்து விடவும்.

***

வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் புரந்தரதாஸர், கனகதாஸர் மற்றும் பிற தாஸர்கள் பாடிய பாடல்கள் (ஏறக்குறைய) அனைத்தும் ஸ்ரீமன் நாராயணன் மற்றும் லட்சுமிதேவியைக் குறித்து பாடியவையே ஆகும். ஆனாலும், ஸ்ரீருதரதேவரும் (சிவன்) அந்த சம்பிரதாயத்தின் தாரதம்யத்தில் (hierarchy) இருப்பதால், சில பாடல்கள் அவரைக் குறித்தும் பாடப்பட்டுள்ளன. மேலும், மஹா சிவராத்திரியை கொண்டாடும் மத்வர் மற்றும் தாஸர்கள் வழியில் வந்த வைணவர்கள், இன்று சிறப்பு பூஜைகளும் செய்து வழிபாடு செய்கின்றனர். ருத்ரதேவரைக் குறித்து மத்வர், ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ வியாஸராஜர் மற்றும் பலரும் பல்வேறு ஸ்தோத்திரங்களை அருளியுள்ளனர். அவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


***

இன்று நாம் பார்க்கப் போகும் இந்தப் பாடலை இயற்றியவர், ஸ்ரீ விஜயதாஸர். காலம் 1682-1755. புரந்தரதாஸரை தன் குருவாக ஏற்று, அவரைப் போலவே இனிமையாகவும் எளிமையாகவும் கன்னடத்தில் ஏகப்பட்ட பாடல்களை எழுதியவர். இவரது பாடல்களின் இறுதியில் ‘விஜயவிட்டலா’ என்ற பெயரைப் பொறித்து, அந்த பாடல்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர். இந்த விஜயதாஸர், ஈசனைக் குறித்து பாடிய பாடல் இதோ.

கைலாச வாசா கௌரீஸ ஈசா
தைல தாரேயந்தே மனசு கொடோ ஹரியல்லி சம்போ (கைலாச)


கைலாச வாசனே கௌரியின் தலைவனே ஈசனே
எண்ணெய் ஊற்றுவதைப் போல் (தெளிவாக, மனது அலைபாயாமல்)
ஹரியினிடத்தில் மனதைக் கொடுக்க வரம் தருவாய் சம்போ (கைலாச)

அஹோராத்ரியலி நானு அனுசராக்ரனியாகி
மஹியொளகே ஜரிசிதெனோ மஹாதேவனே
அஹிபூஷணனே என்ன அவகுணகளெணிசலதே
விஹித தர்மதி விஷ்ணு பகுதியனு கொடோ சம்போ (கைலாச)


இரவும் பகலுமாக நான் உன் வேலைக்காரனாக வேண்டி
இந்த உலகத்தில் பிறந்தேனே மஹாதேவனே
பாம்பை அணிந்தவனே, என் கெட்ட எண்ணங்களை எண்ணாமல்
விதித்த தர்மங்களின்படி விஷ்ணுவை வணங்க பக்தி கொடு சம்போ (கைலாச)

மனசு காரணவல்ல பாப புண்யக்கெல்லா
அனலாக்‌ஷ நின்ன ப்ரேரணேயில்லதே
தனுஜ கதமன ஹரி தண்ட ப்ரணமமால்பே
மணிசோ ஈ ஷிரவ சஜ்ஜன சரண கமலதலி (கைலாச)


மனது காரணமில்லை பாவ புண்ணியங்களுக்கெல்லாம்
தீஜ்வாலை (போல் கண்களையுடையவனே) உன் ஆணையில்லாமல்;
(சர்வாங்கமும் தரையில் பட) சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்த செய்த என்னை
மன்னிப்பாய், இந்த (என்) சிரசை, படித்த, நற்குணங்களுடையவர்களின் பாதங்களில் விழுந்து வணங்குவேன் (கைலாச)

பாகீரதீ ஹரனே பயவ பரிஹரிசய்யா
லேசாகி நீ சலஹோ சந்தத சர்வதேவா
பாகவத ஜனப்ரிய விஜயவிட்டலங்க்ரி
ஜாகு மாடதே பஜிப பாக்யவனு கொடோ சம்போ (கைலாச)


பாகீரதியை காப்பாற்றியவனே என் பயத்தை போக்குவாய்
என்னை கரையேற்றுவாய், எப்போதும் அனைவருக்கும் தலைவனே
பக்திமான்களுக்கு பிரியமான விஜயவிட்டலனைக் குறித்து
சோம்பலில்லாமல் எப்போதும் பாடிக் கொண்டிருக்கும் பாக்கியத்தை கொடு ஈசனே (கைலாச)

***

கேட்ட வரங்களை தவறாது அளிக்கும் சிவனை வணங்கி, அந்த விஷ்ணுவை மறக்காமலிருக்கும் வரத்தை தருவாய் என்று என்ன அழகாய் வேண்டுகிறார், இந்த விஜயதாஸர்.

***

இந்த பாடலை நம்மவர் எப்படி பாடுறார் கேளுங்க. கண்டிப்பா மனசு உருகிடும். ஓம் நமச்சிவாய.



***

நம: பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவ..

***

கண்ணன் தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?

இந்த இடுகை இங்கு இல்லை. கண்ணன் பாடல்களில் உள்ளது. உரல் இங்கே.